கட்டார் மீதான தடையை நீக்குவதற்கு 48 மணிநேரம் கால அவகாசம்: சவூதி அரேபியா அறிவிப்பு
கட்டார் மீதான தடையை நீக்குவதற்கு வளைகுடா நாடுகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 48 மணிநேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது என சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறி சவூதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள் கட்டார் நாட்டுடனான தங்கள் உறவுகளை முறித்து கொள்வதாக அறிவித்து, தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக்கொண்டன.
இதனால் கட்டாருக்கு உணவுப்பொருட்கள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவைகளில் பாதிப்பு ஏற்பட்டன.
இந்த பிரச்சனையை தீர்க்கும் முயற்சியில் கட்டார் ஈடுபட்டு வந்த நிலையில், சவூதி அரேபியா சில நிபந்தனைகளை முன்வைத்தது.
அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் உறவைக் குறைத்துக்கொள்வது, கட்டாரிலுள்ள துருக்கிய இராணுவத் தளத்தை மூடுவது, கட்டார் வட்டாரத்தில் உள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் தங்களிடம் ஒப்படைப்பது போன்ற 13 விடயங்கள் அந்த நிபந்தனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இதனை கட்டார் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் கட்டார் நாடு மீது விதிக்கப்பட்ட தடை திரும்ப பெறப்படும், அதற்காக 10 நாட்கள் கால அவகாசம் கட்டாருக்கு கொடுக்கப்பட்டது.
இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், கட்டார் - சவூதி இடையிலான விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்படும் குவைத் நாட்டு இளவரசரின் கோரிக்கையை ஏற்று கட்டார் மீதான தடையை திரும்பப் பெறும் விடயத்தில் முடிவெடுக்க அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை 48 மணி நேரம் நீட்டிப்பதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment