1. உங்களை பற்றி...        
பதில் : கிழக்கின் தந்தைக்கும் வடக்கின் தாய்க்குமாக அக்கரைப்பற்றில் பிறந்த நான், புலமைப்பரில் பரீட்சையில் சித்தியடையும் வரை அக்/ஆண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்தேன்.

அதன் பின்னர் விமானியாக படித்து அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டபின், அரசியல் விஞ்ஞானத்தில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டேன். தற்பொழுது சட்டப் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.

வியாபாரப் பின்புலத்தில் பிறந்திராத நான் எனது வங்கிப்பணியை ராஜினாமாச் செய்துவியாபாரத்தில் இறங்கி பல தோல்விகளையும் அனுபவங்களையும் பெற்றுக்கொண்டேன்தற்பொழுது இந்தியாவில் அழகுசாதன பொருட்கள் சந்தைப்படுத்தும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடாத்தி வருகிறேன்.

2. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்பு என்ன?
பதில் : ரோயல் கல்லூரியில் சேர்வதற்காக கொழும்பிற்கு வந்த காலங்களில்தான் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு அதன் தவிசாளராக இருந்த எனது தந்தை சேகு இஸ்ஸடீன், தலைவர் அஷ்ரப், பொருளாளர் வபா பாரூக் மற்றும் ஆரம்பகால முக்கிய தலைவர்கள் அனைவருடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும், கட்சிப் பணிகளில் என்னாலான பல உடலுழைப்புக்களை வழங்கும் வாய்ப்பும் கிட்டியது.

இச்சந்தர்ப்பத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸின்  முதலாவது மாநாட்டை ஆறாவது மாநாடு என்று பாஷா வில்லாவில் நடாத்தினார்கள். அப்போதிலிருந்து, முஸ்லிம் தனித்துவ அரசியல் திசைமாறி தடம்மாறிச் செல்வதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்ட நிகழ்வான, கட்சியின் பல விதி மீறல்களுடன் அரங்கேற்றப்பட்ட தவிசாளரின் வெளியேற்றம் வரை (1992) முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்பிருந்தது. இதற்கு அப்போது கட்சித் தலைமையகம் அமைந்திருந்த அதே கட்டடத்தின் ஆறாம் மாடியில் எங்களது வீடு அமைந்திருந்ததும் ஒரு காரணம்.

3. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பால் உங்கள் தந்தை கட்சியில் இருந்தும், தவிசாளர் பதவியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஹக்கீம் வெளியேறி செல்ல வேண்டும் என்று போராட்டம் நடத்த உங்களுக்கு என்ன அருகதை உள்ளது?

பதில் : எனது தந்தையைபதவியாசை கண்ணை மறைத்ததனால் முறைதவறி அவசரமாக வெளியேற்றியது தவறு என்ற குற்ற உணர்வு மர்ஹும் அஷ்ரப் அவர்களுக்கு என்றுமே இருந்தது. அதனால்தான் எனது தந்தையை மீண்டும் கட்சிக்குள் எடுப்பதற்கு ஆர்வம் கொண்டு பலரிடம் தெரிவித்ததும் அல்லாமல், சம்மாந்துறையில் பொதுக்கூட்டத்திலேயே பகிரங்கமாக தெரிவித்தார். அந்த உரையின் ஒளிநாடா முகநூலெங்கும் வலம் வந்தது.

ஆனால் முஸ்லிம் சமூகத்தின் விடுதலை வேட்கைக்காக பல உயிர்த்தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி தடம் புரண்டு பணம் காய்க்கும் மரமாக வளர்ந்து நின்றதில் மனம் நொந்ததனால் அதில் இணையும் எண்ணம் எனது தந்தைக்கு இருக்கவில்லை.

நாம் பாடுபட்டு வளர்த்த கட்சியை வைத்துக்கொண்டு அவர்கள் சம்பாதித்துச் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதில் அருவருப்படைந்து விலகியிருந்தோம்.

இப்போது நிலமை இன்னும் மோசமாயிற்று. அவர்கள் எம் சமூகத்தை பல சந்தர்ப்பங்களிலும் விற்றும் காட்டிக் கொடுத்தும்  சம்பாதிக்க ஆரம்பித்த விடயங்கள் பகிரங்கமாகத் தொடங்கியதிலிருந்து நாம் அவர்களுக்கெதிராக போராடத் தொடங்கினோம்.

கிழக்கு மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, கிழக்குப் புறக்கணிப்பு முதல், கிழக்கிற்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு சுரண்டல் உட்பட கிழக்கைத் தாரை வார்க்கும் பேரம் பேசல்கள் வரை சென்றபின், இதைத் தட்டிக் கேட்பதற்கு நான் ஒரு கிழக்கான் என்ற அருகதை ஒன்றே போதும்.

4. கிழக்கின் எழுச்சி முன்னாள் மு.கா செயலாளர் நாயகம் ஹஸன் அலி அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டது. கிழக்கின் எழுச்சியின் தலைமைத்துவ சபையில் இந்த முடிவை எடுப்பதற்கு உங்களது பங்களிப்பு அதிகமிருந்ததாக கூறப்படுவது பற்றி.

பதில் : உண்மைதான். மு.கா தலைமைத்துவம் கிழக்கிற்கு வெளியே இருக்கின்ற நிலைமையில் மீதமிருக்கும் ஒரேயொரு அதிகாரமுள்ள பதவியான செயலாளர் நாயகம் என்ற பதவி கிழக்கில் இருக்க வேண்டும். அதற்கு பொருத்தமானவராக நான் ஹஸனலி அவர்களைத் தவிர வேறு எவரையும் உயர் பீடத்தில் காணவில்லை.

முஸ்லிம் தனித்துவ அரசியலில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அனுபவப்பட்டவரும், கிழக்கின் காணிப் பிரச்சினைகள் உட்பட அனைத்துப் பிரச்சினைகள் பற்றிய பிரக்ஜை உடையவரும், ஊழல் குற்றச்சாட்டுக்கோ கட்சிக்கு விரோதமாக செயற்பட்டார் என்றோ குற்றம் சாட்டப்படாதவருமான ஹஸனலி அவர்களுக்கு ஆதரவளிப்பது என்று நான் தெளிவாகத்தான் முடிவெடுத்திருந்தேன்.

இந்த சகல நடவடிக்கைகளின் பிரதிபலன்களும் எதிர்வரும் தேர்தலொன்றிலேயே அறியப்பட முடியும்.

5. உங்கள் அரசியல் பிரவேசத்திலும், செயற்பாட்டிலும் தந்தையின் பங்கும்,பங்களிப்பும் என்ன..?

பதில் : ஏகலைவனுக்கும் துரோணாச்சாரியருக்குமான  உறவு. அவரின் ஆரம்பகால அரசியலில் கவரப்பட்ட பலரில் நானும் ஒருவன். அது ஒரு நெருப்பு. எட்ட இருந்து கற்றுக் கொண்டவைகள் ஏராளம்.

அவரின் பிந்திய அரசியலில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை.

6. கிழக்கின் எழுச்சி ஸ்தாபகர் வஃபா பாருக் இப்போது வேறு ஒரு கட்சியின் தலைவர் பொறுப்பை எடுத்து உள்ளாரே?

பதில் : ஆம். முஸ்லிம் காங்கிரஸின் தலைமை கிழக்கிற்கு வேண்டும் என்று கோரிய நாம் அது கிட்டாதவிடத்து, கிழக்கு வடக்கின் ஆளுமைகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பாக வேண்டும் என்று கோரி அனைத்து தலைவர்களிடமும் பேசினோம். அது இறைவனின் அருளால் கைகூடி வருகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் கிழக்கின் எழுச்சி ஒரு அரசியல் கட்சியல்ல என்பதனால், பிரதிநிதித்துவ அரசியலுக்கு வர மாட்டேனென்று அறிவித்திருந்த வபா பாரூக் அவர்கள் ஒரு  புதிய கட்சியை ஆரம்பித்திருக்கின்றார். அக்கட்சியூடாக தனது சிந்தனைகளை  முன்னெடுப்பதில் ஆர்வமாயிருக்கின்றார்.

உருவாகவிருக்கும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பில் வபா பாரூக் அவர்களது கட்சியும் இணையுமானால் சிறப்பாயிருக்கும்.

7. எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் கிழக்கின் எழுச்சி போட்டியிடுமா? அதன் முதலமைச்சர் வேட்பாளர் நீங்கள்தான் என்று கதைகள் அடிபட்டனவே?

பதில் : கிழக்கின் எழுச்சி என்பது ஒரு சிந்தனைதான். எமது சிந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்கள் பல கட்சிகளிலும் இருக்கின்றார்கள். இதை அமைப்பு ரீதியாக வளர்த்தெடுப்பதில் நாம் அக்கறை காட்டவில்லை. எமது சிந்தனைகளை குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாம் வெற்றியடைந்துள்ளோம்.

ஆனால் தேர்தல்களில் போட்டியிடுவது கிழக்கின் எழுச்சியின் வேலை அல்ல. என்னைப் பொறுத்தளவில் நான் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகின்றேன் என்பதில் கரிசனையுள்ளவன். அரசியல் விழிப்புணர்ச்சியற்ற ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்வதில் எனக்குச் சிரமமிருக்கின்றது.

எமது கொள்கைகளுடன் இணங்கிப்போகும் சக்திகளுக்கு ஆதரவளிப்பதற்கு நாம்  தயாராயுள்ளோம். அந்த வகையில் இன்றுள்ள நிலைமைகளில் அதற்குப் பொருத்தமானவர் ஹஸனலி அவர்களே.

8. முன்னாள் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவை கிழக்கின் எழுச்சி சார்பாக நீங்கள் சந்தித்து பேசியதாக கூறப்படுகின்றது. இதன் இரகசியம் என்ன?

பதில் : அவரை மட்டுமல்ல இன்னும் பல தலைவர்களையும் நாம் சந்தித்துப் பல பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளோம். அந்தவகையில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடனான சந்திப்பும் முக்கியமானது.

எனது குற்றம் சாட்டும் வகையிலான பல கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார். சுமார் இரண்டு மணி நேரங்கள் எனக்காக ஒதுக்கி பல விளக்கங்களைத் தந்தார். முக்கியமாக பொது பல சேனாவின் பிரச்சினையில் அவர் நடவடிக்கை எடுக்காததைப் பற்றி நான் குற்றம் சுமத்தியபோது, அவர் கூறினார், முஸ்லிம் அமைச்சர்கள் ஒற்றுமையாக ஒரே குரலில் அழுத்தம் கொடுத்திருப்பார்களானால் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டிருப்போம். அவர்கள் சீரியசாக எடுக்கவில்லை. கபினட் கூட்டங்களில் இந்த விடயம் எழும்போது ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதென்று தடுத்தது அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள். இது முஸ்லிம் அமைச்சர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் மக்களிடம் சொல்லவில்லைஇன்றும் அதே அமைச்சருடன் அமைச்சரவையில் இருக்கின்றார்கள். இன்னும் அரசியல் தீர்வு, யுத்தம், நகர அபிவிருத்தி போன்ற பல முக்கியமான விடயங்களில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

9. முஸ்லிம் அரசியலை பொறுத்த வரை எத்தனையோ ஜாம்பவான்கள் உள்ளனர். இவர்களிலும் அநேகர் கிழக்கை சேர்ந்தவர்கள். இவர்களுடன் ஒப்பிடுகின்றபோது ஒரு சிறிய புள்ளியான உங்களால் அரசியலில் பெரிதாக சாதிக்க முடியும் என்று எவ்வாறு நம்புகின்றீர்கள்?

பதில் : இந்த ஜாம்பவான்களை நான் முதன்முதலில் பார்க்கும் பொழுது இவர்கள் ஒரு சிறு புள்ளியாகவும் இருக்கவில்லை. கிழக்கைச் சேர்ந்த ஒரு கோடீசுவர அமைச்சர் அன்று தூங்குவதற்கும் இடமில்லாமல், கட்சியின் "எமது நம்பிக்கை நட்சத்திரம் - மரம்" என்ற பச்சை மஞ்சள் பேனரை விரித்து கட்சி அலுவலகத்தில் தலையணையுமில்லாமல் தரையில் உறங்கியவர்.

அந்த நிலமைகளுடன் ஒப்பிடும்போது கல்வியிலும், பொருளாதாரத்திலும், அனுபவத்திலும் சற்று பெரிய புள்ளியாகவே நான் தெரிகிறேன். புகழனைத்தும் இறைவனுக்கே.

இந்த ஜாம்பவான்கள் அத்தனை பேரும் இருந்தாலும் கிழக்கு முஸ்லிம்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லாத வெற்றிடமொன்று உள்ளது. இது சாதாரண மக்களாலும் இன்று உணரப்படத் தொடங்கிவிட்டது.

அரசியலில் பெரிதாக சாதிக்க வேண்டும், பெரிய பதவிகளை அடைய வேண்டும் என்ற ஆசை என்னிடமில்லை. அருகிலிருந்து பார்த்தே அலுத்துவிட்டது. ஆனாலும், ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென்ற நெருப்பு மட்டும் உள்ளுக்குள் கனன்று கொண்டேயிருக்கிறது.

10. உங்களை போன்ற இளையோருக்கு நீங்கள் சொல்ல விரும்புகின்ற குறிப்பு/ தகவல் என்ன?

பதில் : நீங்கள் காணும் கனவுகளுக்குத் தேவையான தகைமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். கனவு நிஜமாக நேரும்போது, நீ அதற்குத் தகுதியற்றவனாயிருத்தல் கூடாது. மற்றையது பொறுமையாயிருங்கள். உங்களது நேரம் நிச்சயம் வரும். நேரம் வரவில்லையென்று பொறுமையிழந்து பிழையான முடிவுகளை எடுத்து தூரப் போய்விடாதீர்கள், ஏனெனில் உங்களுக்கான நேரம் வந்துவிட்டால் நீங்கள் திரும்பிவர முடியாத தூரத்திலிருப்பீர்கள்.
நேர்கானல்  -  ரி.தர்மேந்திரன்   

(நன்றி தினக்குரல்)

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top