இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளில் ஒன்றாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தேர்தல் ஆணைக்குழு இந்த அங்கீகாரத்தை வழங்கியதை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று (05) மாலை கொழும்பு தேர்தல் ஆணையகத்தில் வைத்து இது தொடர்பான உத்தியோக பூர்வ கடிதம் NFGG தலைமைத்துவ சபை பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.
நல்லாட்சி என்ற அரசியல் இலட்சியத்தோடு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியற்கட்சியான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த 11 வருட காலமாக பிராந்திய மற்றும் தேசிய அரசியலில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் ஈடுபட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு காத்தான்குடியில் ஸ்தாபிக்கப்பட்ட இக்கட்சி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG) என்ற பெயரில் ஆரம்பம் முதல் இயங்கி வந்தது. பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) என்ற பெயரில் தேசிய அரசியல் வேலைத்திட்டங்களில் தீவிரமாக ஈடுபட தொடங்கியது.
2006 ஆம் ஆண்டு மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற காத்தான்குடி நகர சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு கணிசமான ஆதரவினைப் பெற்றுக் கொண்ட NFGG காத்தான்குடி நகர சபையின் பிரதான எதிர்கட்சியாக தொடர்ந்தும் செயற்பட்டு வந்திருக்கிறது.
அதே போல் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்று அம்பாரை மாவட்டங்களில் NFGG போட்டியிட்டுயிருந்தது என்பதும், குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை பெறத்தவறியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடந்து 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் (TNA) புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்து கொண்ட NFGG தனது ஒரு வேட்பாளரை அந்தத் தேர்தலில் போட்டியிடச் செய்தது. தேர்தலின் பின்னர் குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட போனஸ் ஆசனத்தின் ஊடாக வடமாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக்கொண்டது.அதன் பின்னர் கடந்த 2015 இல் நடைபெற்ற ஊவா மாகாண சபைத்தேர்தலில் .தே.கட்சியுடன் (UNP) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்ட NFGG பதுளை மாவட்டத்தில் அரசியல் வேலைத் திட்டங்களில் ஈடுபட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆட்சி மாற்றத்திற்கான பொது எதிரணியொன்று ஆரம்பிக்கப்பட்ட வேளையில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து முதன் முதலாக அப்பொது எதிரணியில் இணைந்து முன்னணியில் நின்று பங்களிப்புச் செய்த கட்சியாகவும் NFGG காணப்பட்டது.
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கடந்த 2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் (SLMC) செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் போட்டியிட்டது.
இவ்வாறு மட்டக்களப்பில் களமிறக்கப்பட்ட NFGG யின் வேட்பாளர் 12468 வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும், திருகோணமலையில் போட்டியிட்ட NFGG வேட்பாளர் 14697 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றனர்.
இவ்வாறு கடந்த 11 வருடங்களாக இந்நாட்டில் அர்த்தமுள்ள நல்லாட்சியொன்றை உருவாக்குவதற்கான தீவிர அரசியல் உழைப்பினை செய்து வரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தற்போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியற் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காக விண்ணிப்பித்திருந்த 94 அரசியற்கட்சிகளில் 6 கட்சிகள் மாத்திரமே தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு கிடைத்திருக்கும் இந்த தேசிய அங்கீகாரம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top