சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை சம்பந்தமாக தற்போது பரவலான கருத்துப்பரிமாறல்கள் நடைபெற்றுவருகின்ற வேளை,89 -96 காலப்பகுதியில் சாய்ந்தமருது மற்றும் நிந்தவூர் வைத்தியசாலைகளினது DMO ஆக இருந்தவன் என்ற வகையிலும் இந்த ஊரில் பிறந்தவன் என்ற வகையிலும் தற்போதைய மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றும் எனக்கு உள்ள அனுபவங்களினூடாகவும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன். சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையுடன் இணைப்பதும்,அவ்வைத்தியசாலையில் எலும்பு முறிவுப்பிரிவை அமைப்பதும் இன்று விவாதப்பொருளாக மாறியிருப்பதை அவதானிக்கிறேன்.
இலங்கையில் நிர்வாகப் பரவலாக்கம் நடைபெற்று மூன்று தசாப்தங்கள் கடந்து விட்டன .காலஞ்சென்ற ஜனாதிபதி R Premadasa ,மக்களின் தேவைகள் அவர்களது காலடிக்கு எடுத்துசெல்லப்பட வேண்டுமென்பதில் அதீத அக்கறையுடையவராக இருந்தார் .அவரது திட்டத்தின் படி ,ஒவ்வொரு பிரதேச சபைப் பிரிவிலும் தன்னிறைவு பெற்ற பாடசாலையும் கோட்டக்கல்வி அலுவலகமும் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவும் மாவட்ட வைத்தியசாலையும் உருவாக்கப்பட்டன ,இவற்றுக்கு சமாந்திரமாக ,பிரதேச சபைகளும் பிரதேச செயலகங்களும் முழு அதிகாரத்துடன் இயங்கத் தொடங்கின.
.சுற்றயர்ககூறுகளாக(peripheral units) இருந்த சாய்ந்தமருது ,நிந்தவூர் ,அக்கரைப்பற்று,பொத்துவில் போன்ற வைத்தியசாலைகள் ,மாவட்ட வைத்தியசாலைகளாக தரமுயர்த்தப்பட்டன .
காலஞ்சென்ற தலைவர் அஷ்ரப் என்னை பாராளுமன்றக்கட்டடத்திற்க்கு அழைத்துச் சென்று அப்போதைய சுகாதார அமைச்சர் காலஞ்சென்ற Renuka Herath இடமிருந்து தரமுயர்த்தல் கடிதங்களை என்னிடம் கையளித்த நினைவுகளை மீட்டிப்பார்க்கின்றேன் .
இதன் பின்னர் இந்த வைத்தியசாலைகளில் நோயாளர்கள் தங்கும் வாட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டன.முன்னரெல்லாம் ஒன்று அல்லது இரண்டு வைத்தியர்கள் இருந்த நிலை மாறி அதிக அளவில் MBBS வைத்தியர்களும் தாதிகளும் ஏனைய ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர் . அதாவது மக்கள் தமது சுகாதார தேவைகளை ,அவர்களது கிராம மட்டத்தில் பெற்றுக்கொள்வதும் ,சிறு சிறு மருத்துவப் பிரச்சினைகளுக்கு வெளி ஊர்களையும் வெளி மாவட்டங்களையும் தேடிச் செல்வதைக் குறைப்பதும் மட்டுப்படுத்துவதுமே இதன் நோக்கமாகும் .
இதனை சாத்தியமாக்குவதற்கு மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் 24 மணி நேரம் கடமையாற்ற உசார் நிலையில் இருப்பதாக நினைக்கிறேன்.அப்படி இருந்தால் மட்டுமே நோயாளர்கள் சிகிச்சை முறையில் நம்பிக்கை வைத்து மக்கள் மாவட்ட வைத்தியசாலையை நாடுவார்கள் .பொது மக்களின் மனங்களை வெல்லும் வகையில் எமது உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கடமை புரியாத வரையில் வைத்தியசாலை பயன்படுகையில் முன்னேற்றம் காண முடியாது .
வேறு வார்த்தையில் கூறுவதானால் ,இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் வடிகட்டப் படுகிறார்கள் .அதாவது அவசியமும் அவசரமும் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே நோயாளர்கள் விசேட சிகிச்சைகளுக்காக வேறு இடங்களுக்கு அனுப்பப்படல் வேண்டும் .
சுகாதார அமைச்சின் கொள்கை பிரகடனத்திற்கமைய இக்கடமையை நிறைவேற்றுவதற்காக சாய்ந்தமருது போன்ற மாவட்ட வைத்தியசாலைகள் சகல அடிப்படைத்தேவைகளையும் கொண்டிருப்பதாக நினைக்கிறேன் .
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையைக் கொண்டிருந்த அதே காலப்பகுதியில் கல்முனைக்குடி பிரதான வீதியில் மத்திய மருந்தகமே இயங்கியது ,கிழக்கில் அன்று நிலவிய அசாதாரண சூழ்நிலைகளும் ஆயுதக் கலாச்சாரமும் கரையோர பிரதேசத்தில் குறிப்பாக முஸ்லிம் பிரதேசம் ஒன்றை மையப்படுத்திய சகல வசதிகளும் நிறைந்த மாவட்ட வைத்தியசாலையை விட தரங்கூடிய ஆதார வைத்தியசாலையின் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்த்தியது.
அப்போதைய கள நிலவரங்களும் அரசியல் பின்னணியும் ,அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை உருவாக்குவதற்கு வழி சமைத்தது .சத்திர சிகிச்சை வசதிகள் ,விசேட வைத்திய நிபுண சேவைகள் ,ICU வசதிகள் உட்பட அனைத்து பெளதீக வளங்களும் இங்கு நிறையத் தொடங்கின ,இது எமது பிரதேச மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
ஒரு காலத்தில் ,சாய்ந்தமருது ,நிந்தவூர் போன்ற மாவட்ட வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்குச் சென்ற மக்கள் தற்போது மாவட்ட வைத்தியசாலையை by pass பண்ணி அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு படை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் .இது தான் தற்போதைய யதார்த்த நிலை .ஊருக்கு செல்லும்போதெல்லாம் பாரிய கட்டட வசதியுடன் காணப்படுகின்ற நிந்தவூர்,சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைகள் மக்களால் பூரணமாக பயன்படுத்தாமல் இருப்பதை அவதானித்துள்ளேன் .
கட்டில்கள் இருந்தும் நோயாளிகள் இல்லை,பயன்படுத்துகை குறைந்துள்ளது .இதனை under
utilization என்று சொல்லுவார்கள்.இது நமது பிரதேசத்திற்கு மட்டும் உள்ள பிரச்சினையும் அல்ல ,மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்ற வகையில் ,களுத்துறை ,கம்பஹா,கொழும்பு மாவட்டங்களிலுள்ள சில மாவட்ட வைத்தியசாலைகளிலும் மக்கள் பயன்பாடு குறைந்துள்ளதை நான் நன்கு அறிவேன் .உதாரணமாக பாணந்துறை ,கலுபோவில வைத்தியசாலைகளின் வளர்ச்சியினால் மொரட்டுவ வைத்தியசாலையில் கட்டில்கள் காலியாகக் கிடக்கின்றன. நீர்கொழும்பு ,ராகம வைத்தியசாலைகளின் பிரசன்னத்தினால் ஜா எல வைத்தியசாலைக்கு மக்கள் செல்வது குறைந்துள்ளது .
ஆகவே பயன்பாடு குறைந்த மாவட்ட வைத்தியசாலைகளால் முழுப் பயனையும் பெற சுகாதார அமைச்சு பல திட்டங்களை வகுத்துள்ளது .இம்மாவட்ட வைத்தியசாலைகளில் தனித்துவத்தைப் பேணி புதுப்புதுப் பிரிவுகளை அங்கு உருவாக்கலாம்.உதாரணமாக நீரிழிவு சிகிச்சைப் பிரிவு ,பாரிசவாத சிகிச்சைப் பிரிவு ,டெங்கு நோய்க்கான சிகிச்சைப் பிரிவு ,முதியோர் சுகாதார பிரிவு ,மார்பு நோய் சிகிச்சைப் பிரிவு போன்றவற்றைக் குறிப்பிடலாம் .
இன்று தொற்று நோய்களை விட தொற்றாத நோய்களின் தாக்கமே பெரிய சவாலாக உள்ளது. மாவட்டத்திலுள்ள பெரிய வைத்தியசாலைகளில் இருந்து விசேட வைத்தியர்களை இடைக்கிடை அழைத்து Mobile clinic இற்கான வசதிகளை ஒழுங்கு செய்யலாம்.visiting consultants மார்களை சேவைக்காக அழைக்கலாம் .
வெறுமனே கட்டடங்களை மட்டும் கட்டி நிரப்பாமல் ,ஆளணி ,உபகரணங்கள் உட்பட சகல பெளதீக வளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் .அப்பொழுது தான் மக்கள் உள ரீதியான நபிக்கையுடன் மாவட்ட வைத்தியசாலையை நாடுவார்கள்.
நாங்கள் முடிவுகளை எடுக்கும் பொழுது தூர நோக்குடன் செயல்பட வேண்டும்,அதிகரித்து வரும் மக்கள் தொகையையும் கருத்தில் கொள்ள வேண்டும் .இருபது ஆண்டுகளுக்கு முன்பு தேவைப்படாத ஒன்று இன்று எமக்கு அத்தியாவசியமாகியுள்ளது, இன்னும் பத்து வருடங்களில் ,நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். இருபது வருடங்களுக்கு முன்பு இரண்டு வைத்தியர்கள் இருந்த வைத்தியசாலைகளில் இப்பொழுது பதினைந்து வைத்தியர்கள் மட்டில் வேலை செய்கிறார்கள் .
அண்மையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் முன்வைத்த ஒரு கருத்தை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன் .அவரது சுகாதார அமைச்சின் கொள்கைத்திட்டத்தின் படி பட்டப்பின்படிப்பிற்க்காக கூடுதலான வைத்தியர்கள் உள்வாங்கப்படவுள்ளார்கள் ,அதாவது கூடுதலான விசேட வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலைகளில் நியமிக்கப்படவுள்ளார்கள் .
நமது பிரதேசத்தில் கூட இன்று ஒவ்வொரு ஊரிலும் விசேட வைத்திய நிபுணர்கள் காணப்படுகிறார்கள். இந்த யதார்த்தத்தை உணர்ந்து முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக ,அரசியல்வாதிகள் துறைசார் நிபுணர்களிடம் கலந்துரையாட வேண்டும் ,கருத்துப்பரிமாற்றங்களுக்கு இடமளிக்க வேண்டும் ,எனது ஊர் எனது வைத்தியசாலை என்று குறுகிய வட்டத்திற்குள் நிற்காமல் அகன்ற பார்வையில் சிந்தனை அமைய வேண்டும் .பிரதேச உணர்வுகளைத் தூண்டி அதில் குளிர் காய யாரும் முற்படக் கூடாது. கலந்துரையாடல்களில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர பிரதேசவாதங்களை உண்டாக்கி அப்பாவி மக்களைப் பிரித்திடக் கூடாது.பிரச்சினைகளை நடைமுறை முறையில் தீர்க்க வேண்டும் ,யாரும் பலவந்தமாக எதையும் திணிக்க முயலக்கூடாது .இந்த சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டு எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள என்றும் தயாராகவே இருக்கின்றேன் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் .
0 comments:
Post a Comment