இலங்கையில் புதிய முதலீடுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஆராயும் விசேட முதலீட்டு மாநாடு இலங்கை மற்றும் பங்களாதேஷ் முதலீட்டாளர்கள், வர்த்தகர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (15) முற்பகல் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார். பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கிடையிலான வர்த்தக முயற்சிகள் வருடத்திற்கு 142 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கின்ற நிலையில், எதிர்வரும் வருடங்களில் இதனை மூன்று மடங்காக அதிகரிப்பது தொடர்பாக இருநாடுகளின் தலைவர்களுக்கிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கம் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. எரிவாயு, வங்கி மற்றும் ஆடைகள் போன்ற துறைகளில் இலங்கை வர்த்தகர்கள் தற்போது பங்களாதேஷில் முதலீடுகளை செய்துள்ளனர். இத்துறைகளில் மேலும் பல வாய்ப்புகள் இருப்பது குறித்து இங்கு தெளிவுபடுத்தப்பட்டது. தற்போது இலங்கையில் முதலீட்டுக்கு வாய்ப்பான சூழல் ஏற்பட்டிருப்பதனால் இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு வருகை தருமாறு பங்களாதேஷ் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மற்றும் பங்களாதேஷ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அப்துல்ஹசன் மஃமூத் அலி ஆகியோர் மாநாட்டில் உரையாற்றினர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top