மீளக்குடியேறாமல் இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.
மன்னார் எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலைய திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்குரார்ப்பணம் செய்து வைத்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் றிஷாட் கூறியதாவது:
2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற குடிசன மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டே பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு வட்டார எல்லைப் பிரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட மக்கள் பாரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளதை நான் ஏற்கனவே கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் உங்களுக்கு எத்திவைத்தேன். இந்த விடயத்தில் பிரமராகிய நீங்கள் நியாயமாக நடந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
இந்த மாவட்டத்தில் காலாகாலமாக தீராத, தொடர்ச்சியான பிரச்சினையாக நீரும் மின்சாரமும் இருந்து வருகிறது. 2012 ஆம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டம் வவுனியாவில் பல்வேறு சவால்களையும் தடைகளையும் எதிர் நோக்கிய போதும் மன்னார் மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த திட்டத்தின் பிரதிபலனை பிரதமராகிய நீங்களும் அமைச்சர் ஹக்கீமும் மக்களின் கைகளுக்கு கிடைக்கச் செய்தமையை ஒரு வரப்பிரசாதமாகவே கருதுகின்றேன்.

இந்த திட்டத்தினால் 12,000 இணைப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மேலும் 4,000 இணைப்புக்களை வழங்க முடியும் என்றும் பொறியியளார்கள் தெரிவித்தனர். எனினும் வியாயடிக்குளம் திட்டத்தின் முதலாம் கட்டம் தொடங்கப்பட்டால் மேலும் 7,200 குடும்பங்கள் நன்மையடையும் வாய்ப்புக்கள் உண்டு. அமைச்சர் ஹக்கீம் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருக்கின்றார்.
அடுத்து இரண்டாம் கட்டமாக கல்லாறு தொடக்கம் மடு வரையிலான திட்டம் பூர்த்தி செய்யப்படின் முழு மாவட்டமும் நன்மை பெறும் சந்தர்ப்பம் ஏற்படும். 19 பில்லியன் இந்த திட்டத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 35,000 குடும்பங்கள் நன்மை பெறுவர். எனவே மாவட்டத்தின் ஒட்டு மொத்த தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்.
சுற்றுலா துறையே இந்த மாவட்டத்துக்கு வாய்ப்பான ஒன்று. அந்த அமைச்சின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நீங்கள் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். மாவட்டத்தை இணைக்கும் பாதைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. நீர் வசதியும் மேற்கொள்ளப்படுகின்றது. நீங்கள் வாக்குறுதியளித்தவாறு யாழ்- மன்னார்- வவுனியா-திருகோணமலை- அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மிகவும் இலகுவாக அமையுமென நம்புகின்றேன்.
அத்துடன் மல்வத்து ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு உதவினால் இரண்டு போகங்களையும் மேற்கொண்டு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வளப்படுத்த முடியும்.
இந்த பிரதேச நன்நீர் மீன் வளரப்;புக்கென 4,500 மில்லியன் ரூபாய்களை மீன்பிடி அமைச்சு ஒதுக்கியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர், மீன்பிடி துறை அமைச்சர் மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாகாண அமைச்சர் டெனீஷ்வரன் ஆகியோருக்கு நன்றிகள். அத்துடன் நீர் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவியுள்ள அமைச்சர் ஹக்கீம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும தேசிய நீர் வழங்கல் அதிகாரிகளுக்கும் உங்களுக்கும் எனது நன்றிகளை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றேன். இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஊடகப் பிரிவு



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top