ஆண்களுக்கு மட்டுமே அனுமதி...
ஜப்பானில் உள்ள விநோதத் தீவு!
ஜப்பான் அருகே உள்ள ஒகினோஷிமா என்னும் தீவுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆண்கள் மட்டுமே அங்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கும் சில விதிமுறைகள் என நிபந்தனை வைக்கிறது இந்தத் தீவு. ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பெரிய நிலப்பரப்பான க்யுஷூவுக்கும் கொரிய தீபகற்பத்துக்கும் இடையே உள்ளது ஒகினோஷிமா தீவு. நான்காம் நூற்றாண்டிலிருந்து சீனா மற்றும் கொரியாவுடன் தொடர்புகொள்வதற்கான மையமாக இந்தத் தீவு இருந்து வந்தது. சிண்டோ வழியைச் சேர்ந்த ஜப்பானின் பாரம்பர்யமான கோயில்களில் ஒன்றான முனகட்டா தைஷாவின் குருமார்கள் இங்கு வந்து இங்குள்ள17-ம் நூற்றாண்டின் வழிபாட்டு தலமான ஒகிட்ஷூவில் பிரார்த்தனை செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், ஆண்டுக்கு ஒருமுறை மே மாதம் ரஷ்யா - சீனா போரில், இந்தத் தீவுக்கு அருகில் நடைபெற்ற கடல் யுத்தத்தில் உயிரைத் துறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது நடைபெறும். இதில் கலந்துகொள்ள 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இங்கு வரும் ஆண்கள் முதலில் தங்கள் ஆடைகளைக் கலைந்து இந்தக் கடலில் குளிக்க வேண்டும். இது அவர்களின் உடல் அசுத்தத்தை நீக்கி சுத்தம் செய்யப்படுகின்றது. பின் `மிசோகி` என்ற சடங்கு நடைபெறும். இந்தச் சடங்கு முடியும் வரை ஆடைகளை உடுத்தக் கூடாது என்பது இதன் முக்கிய நிபந்தனை. அதனால், இங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை. மேலும், இங்கு வரும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் இருந்தால் இந்த வழிபாட்டு தலம் தூய்மை இழப்பதாக கருதுகின்றனராம்.
அதேபோல், இங்கு வருபவர்கள் இங்குள்ள சிறு கல் உட்பட எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லக் கூடாது. 700 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இந்த விநோத தீவில் பல அரியவகை பொருள்களும் ஜப்பானின் பழைய கால பொக்கிஷங்களும் அந்நாட்டின் கலாசார பழக்கவழக்கங்களை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஆக, இந்த ஒகினோஷிமா தீவை பாரம்பர்ய பட்டியலில் சேர்த்துள்ளது ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகம் (UNESCO). இதனுடன் சேர்த்து மொத்தமாக ஜப்பானில் யுனெஸ்கோவின் பாரம்பர்ய சின்னங்களின் பட்டியல் 21 ஆக உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment