கல்முனையில் விளையாட்டு மைதானமொன்றை தெரிவு செய்து, இரவு நேரத்தில் விளையாடக்கூடியதாக அதற்கு மின்னொளி வசதிகளை ஒரு வருடத்துக்குள் ஏற்படுத்தி தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்றிரவு (09) சாய்ந்தமருதில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழாவில் தெரிவித்தார்.
அதேவேளை, கல்முனை கடற்கரைப்பள்ளி தொடக்கம் சாய்ந்தமருது பூங்கா வரையான கடற்கரைப் பிரதேசத்தை விரைவில் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும், அதற்கான ஒதுக்கீடுகள் அம்பாறை மாவட்ட செயலாளருக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அர்ஷாத் காரியப்பர் பௌண்டஷன் பிரதான அனுசரணையில் நடைபெற்ற 'லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017' இரவுநேர மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வு நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பௌசி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்.
அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியின் அரையிறுதி போட்டியில் கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஒலுவில் லோயல் விளையாட்டுக் கழகமும், அக்கரைப்பற்று யூத் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழகமும் விளையாடியது. இதில் கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக் கழகமும் நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழகமும் இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 23 ஓட்டங்களைப் பெற்றது. 24 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழகம், விக்கட் இழப்பின்றி 2 ஓவர்கள் நிறைவில் 24 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கடின பந்து விளையாட்டு உபகரணங்களும் இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கு மென்பந்து விளையாட்டு உபகரணங்களும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் வழங்கப்பட்டன.
வெற்றிபெற்ற அணிக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் 50 ஆயிரம் ரூபா பணப்பரிசு உள்ளிட்ட வெற்றிக் கிண்ணத்தையும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு அமைச்சர் 25 ஆயிரம் ரூபா பணப்பரிசு உள்ளிட்ட கிண்ணத்தையும் வழங்கிவைத்தார். அதுபோல வெற்றிபெறும் அணிக்கு கடின பந்து விளையாட்டு உபகரணங்களும் இரண்டாமிடம் பெற்ற அணிக்கு மென்பந்து விளையாட்டு உபகரணங்களும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் வழங்கப்பட்டன.
இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருது நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக்கழக வீரர் அர்சாத்கானுக்கு வழங்கப்பட்டது. இச்சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்ட நாயகன் விருது நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழக அணித் தலைவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களான ஏ.சி. யஹியாகான், உளவளத்துறை வைத்திய ஆலோசகர் அர்சாத் காரியப்பர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Firows Mohamed AJ
Journalist
0 comments:
Post a Comment