சமூக ஒற்றுமைக்காக அரசியல் ரீதியான பிளவுகளைத்தாண்டி தூர சிந்தனையுடன்
ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது. நமது சமூகத்துக்கு எற்பட்டுள்ள ஆபத்துக்களையும்
சவால்களையும் தாண்டிச் செல்லக்கூடிய வகையில் இளைஞர்கள், இன்னும் பல்துறை சார்ந்தவர்களை
சமூக ஒற்றுமைக்காக தயார்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் என அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்
லங்கா அசோக் லேலன்ட் பி எல் சி கம்பனியின் கல்முனைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு இயங்கவுள்ள கிளை ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அமைச்சர் றிஷாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார்.
லங்கா அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் சிராஸ் மீராஸாஹிபின் தலைமையில் 2017.07.09 ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது.
அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள், தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் இன்னோரன்ன விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தி தூர நோக்க சிந்தனையுடன் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது.
நாட்டின் இறைமைக்கு துளி அளவேனும் பங்கம் விளைவிக்காத, ஆயுதத்தில் நாட்டம் காட்டாத, ஆயுததாரிகளை ஊக்குவிக்காத, உதவியளிக்காத, எந்த ஓர் இனத்துக்கும் அநீதி இழைக்காத முஸ்லிம் சமூகத்துக்கு பேராபத்து சூழ்ந்துள்ளது.
யாரை நம்பினோமோ யாரைக் கொண்டுவர எம்மை அர்ப்பணித்தோமோ அவர்கள் மீது சந்தேகம் வந்து விட்டது அவர்களில் நம்பிக்கை இழந்துவிட்டோம். அவர்களின் செயற்பாடுகளில். முஸ்லிம்களின் இருப்புக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் ஒன்றுபட வேண்டியிருக்கின்றது. சமூகத்தில் உள்ள அத்தனை சாராரும் ஒருமித்து பேச வேண்டிய காலகட்டம் உருவாகி இருக்கின்றது.
நமது சமூகத்துக்கு எற்பட்டுள்ள ஆபத்துக்களையும் சவால்களையும் தாண்டிச்செல்லக்கூடிய வகையில் இளைஞர்கள், இன்னும் பல்துறை சார்ந்தவர்களை சமூக ஒற்றுமைக்காக தயார்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். அரசியல் ரீதியான பிளவுகளைத்தாண்டி இந்த முயற்சியை நாம் முன்னெடுக்க வேண்டும். திட்டமிட்ட அடிப்படையில் இந்த சவால்களுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. நமது சமூகத்தை சீண்டி வேண்டுமென்றே வம்புக்கிழுக்க இனவாதிகள் தருணம் பார்த்திருக்கின்றனர்.
கல்முனைத் தொகுதிக்கென ஒரு சிறப்பான இடம் உண்டு. முஸ்லிம் அரசியலில் வெளிச்சத்தை ஏற்படுத்தி, முஸ்லிம்களை அரசியல் மற்றும் சமூக ரீதியில் சிந்திக்க வைத்த ஒரு இடம்தான் கல்முனை.
மர்ஹும் அஸ்ரப் இந்த மண்ணிலிருந்து ஓர் அரசியல் எழுச்சியை ஆரம்பித்ததன் பிரதிபலனை நாம் இன்று அனுபவிக்கின்றோம். தேசியக் கட்சிகளில் ஊறி இருந்தவர்களை சுயமாக சிந்திக்க வைத்து, வடக்குக் கிழக்கு மாத்திரமன்றி வெளி மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து முஸ்லிம் அரசியலுக்கு ஒரு கனதியைக் கொடுத்தவர்.
பணபலம், அதிகாரபலமின்றி இந்த முயற்சியில் அவர் வெற்றி கண்டார். துப்பாக்கிகள் மாத்திரமே நீதிபதிகளாக செயற்பட்ட ஒரு பயங்கரமான காலகட்டத்தில் அவர் இந்த முயற்சியில் வெற்றி கண்டார். அவர் மேற்கொண்ட அடித்தளமே அரசியல் பின்புலமில்லாத, பணபலமில்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னையும் அமீர் அலி, சிராஸ், ஜெமீல் போன்றவர்களையும் அரசியலில் காலூன்றச் செய்தது.
கல்முனையில் இரண்டு துருவங்களாக ஒரு காலத்தில் இருந்து அரசியல் செய்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம் ஜெமீல், முன்னாள் மேயர் சிராஸ் மீராஸாஹிப் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குள் உள்வாங்கி சமூகத்துக்கான பணிகளை முன்னெடுக்கச் செய்துள்ளோம். சகோதரர் ஏ.எம். ஜெமீல் இந்த மண்ணின் மூத்த அரசியல்வாதி. அரசியலில் அனுபவம், ஆற்றல் சமூகப்பற்று மிக்கவர்..
அதே போன்று முன்னாள் மேயர் சகோதரர் சிராஸ் மீராஸாஹிப் துடிப்பானவர், சமூகப்பற்றாளர். அதே போன்று அவர் மேயராக இருந்த காலத்தில் ஏனைய மேயர்களுக்கு உதாரண புருஷராக திகழ்ந்தவர் எனவே இந்த அரசியல்வாதிகளின் இணைவு கல்முனைத் தொகுதிக்கு மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்துக்கும் பயன்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்..
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, திருக்கோணமலை
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவர்
ஏ எம் ஜெமீல், கிரபைட் நிறுவன தலைவர் எம்.அப்துல் மஜீத், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயீல்
மற்றும் அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கௌதம், செயலாளர் சுபைதீன், கட்சியின் முக்கியஸ்தர்களான இஸ்மாயில், ஜிப்ரி, அப்துல் மஸீத் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.
ஊடகப்பிரிவு
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.