நுவரெலியா மாவட்டத்தில்
உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை கூடுகிறது
ஐந்து (05), பன்னிரெண்டு (12) ஆகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை கூட்டும் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவுறுத்தியதாக அமைச்சர் பைசர் முஸ்தபா எம்மிடம் தெரிவித்தார் என்று, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் அவரது அமைச்சில், நேற்று 23 ஆம் திகதி நடத்திய சந்திப்பின் போதே இதற்கான உடன்பாடு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பான விபரக்கோப்பை அமைச்சரிடம் நாம் கையளித்தோம் எனவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் அமைச்சர் மனோ, அமைச்சர்களான பழனி திகாம்பரம், வே. ராதாகிருஷ்ணன், மற்றும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ், வேலுகுமார் போன்றோர் கலந்து கொண்டனர்.
வடகிழக்குக்கு வெளியே தமிழர் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்தில், இன்று ஐந்து (5) பிரதேச சபைகள் உள்ளன. இந்த தொகை முதற்கட்டமாக பன்னிரெண்டு (12) பிரதேச சபைகளாக உயர்த்தப்பட வேண்டும் என்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் அழுத்த கோரிக்கை இன்று நிறைவேறுகிறது.
இன்றுள்ள அம்பகமுவை பிரதேச சபை, நோர்வுட், மஸ்கெலியா, அம்பகமுவை என்ற மூன்று சபைகளாகவும், இன்றுள்ள நுவரெலியா பிரதேச சபை, தலவாக்கலை, அக்கரைபத்தனை, நுவரெலியா என்ற மூன்று சபைகளாகவும், இன்றுள்ள வலப்பனை பிரதேச சபை, நில்தாயின்னை, வலப்பனை என்ற இரண்டு சபைகளாகவும், இன்றுள்ள கொத்மலை பிரதேச சபை, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு என்ற இரண்டு சபைகளாகவும், இன்றுள்ள ஹங்குரன்கத்தை பிரதேச சபை, மதுரட்டை, ஹங்குரன்கத்தை என்ற இரண்டு சபைகளாகவும் மாறுகின்றன.
அதாவது, ஐந்து (05), பன்னிரெண்டு
(12) ஆகிறது.
0 comments:
Post a Comment