கண்டி பல்லேகலே மைதானத்தில் குழப்பம் விளைவித்த

பார்வையாளர்களை கைது செய்ய நடவடிக்கை



கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போது குழப்பம் விளைவித்த பார்வையாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தி மைதானத்தில் குழப்பம் விளைவித்த பார்வையாளர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,

இலங்கை கிரிக்கட் வீரர்களை இலக்கு வைத்து தண்ணீர் போத்தல்களை சில பார்வையாளர்கள் வீசி எறிந்தனர்.

வீரர்கள் மீது பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை வீசி எறிந்த ரசிகர்கள் தொடர்பில் வீடியோ காட்சிகள் ஊடாக கண்டறிந்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சர்வதேச கிரிக்கட் போட்டியொன்றின் போது இலங்கை ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இந்த நிலைமை தொடர்ந்தும் நீடித்தால் அது நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்.

எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க பொலிஸ் திணைக்களத்தினால் எடுக்கக்கூடிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

போட்டிகளின் போது அநாகரீகமாக நடந்து கொள்ள முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


எதிர்வரும் நாட்களில் நடைபெறும் போட்டிகளின் போது சீருடையிலும் சிவில் உடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top