புத்தளம் அரவக்காட்டில்

குப்பை கொட்டுவதனை நிறுத்துங்கள்

கூட்டு எதிர்க்கட்சி செய்தியாளர் மாநாட்டில் அஸ்வர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


புத்தளம் அரவக்காட்டு பிரதேசத்தில் குப்பைகள் கொட்டுவதனை அரசு கைவிட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான .எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

கொழும்பு என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

பொன் விளையும் இந்தப் பூமி மீது நன்மை தூவும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் திகழ்கின்றது. புத்தளத்திற்கு வடக்கே உள்ள அரவாக்காடு பிரதேசம் வனப்புமிக்க ஓர் இடமாகும். வரலாற்றில் இப்பிரதேசத்தை பொன் பறிப்புப் பற்று என்று அழைக்கின்றனர். அந்தப் பொன் பறிக்கும் மண்ணை குப்பை மேட்டின் பூமியாக இந்த அரசாங்கம் மாற்ற விரும்புகின்றது. இதனை நாம் அந்த மக்களின் சார்பாக எதிர்க்கின்றோம்.

15 ஆண்டு காலமாக புத்தளம் பாராளுமன்ற உறுப்பினராக நான் பணியாற்றிய போது, அந்தப் பிரதேசத்தில் அடிக்கடி சுற்றித் திரிந்து, அந்த மக்களுடைய நல் வாழ்வாதாரங்களுக்காக பல வழிகளிலும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் இருந்து செலவு செய்து வந்தேன்எனவே அந்த பொன் விளையும் பூமியை குப்பை குழங்கள் நிறைந்த பூமியாக மாற்ற வேண்டாமென இந்த அரசாங்கத்தை வேண்டுகின்றேன். புத்தளம் வாழ் மக்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். கொழும்பில் உள்ள குப்பை கூழங்களை அரவாக்காட்டுக்கு கொண்டு செல்லாமல் கொழும்பு பிரதேசத்தின் அருகே இடங்களைத் தேடி அதற்குரிய பரிகாரத்தைத் தேடுமாறு நாம் வேண்டுகின்றோம்.

அண்மையில் நான் மாத்தளை மாவட்ட எலகர பிரதேசத்திற்குச் சென்றேன். பல்லாண்டு காலமாக எலகரப் பிரதேசத்தில் மாணிக்கக்கல் தோண்டுவது வழக்கமாக இருந்தது. மாணிக்கத்தை அடி பூமியிலிருந்து மேலெடுப்பதற்காக ஏராளமான சிங்களக் குடும்பங்கள்தான் பணி புரிகின்றார்கள். அதனை விற்பனை செய்வது குறிப்பாக முஸ்லிம்களாக இருக்கலாம். ஆனால் அந்தப் பிரதேசத்தில் இப்பொழுது மாணிக்கக்கல் தோண்டி எடுப்பதற்கு அரசாங்கம் தடை விதித்திருக்கின்றது. எனவே அங்கே விளையும் மாணிக்கத்துக்கு மண் போடுகின்றது இந்த அரசாங்கம். இப்படியான ஒரு நல்லாட்சி எமக்கு தேவைதானா? ஆகவேதான் இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஏனைய மக்களோடு முஸ்லிம்களும் எழுந்து நின்று போர்க் கொடி தூக்கி வருகின்றனர். இந்த அரசாங்கம் நிச்சயமாக  மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களுடைய வேண்டுகோளாகும்.

டாக்டர் என். எம். பெரேரா நிதியமைச்சராக இருந்த போது, மாணிக்கக்கல் வியாபாரத்திற்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் இந்த அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.

மேலும் வணக்கஸ்தலங்களுக்கு - பள்ளிவாசல் உட்பட வரி விதிப்பதற்கான ஓர் ஏற்பாட்டை அரசாங்கம் செய்து கொண்டு வருகின்றது. இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். ஏனெனில் மஹிந்த ஆட்சிக் காலத்தில் வணக்கஸ்தலங்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும் பல சலுகைககள் அளிக்கப்பட்டு வரி விலக்கும் அளிக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால்  பள்ளிவாசல்களை  உடைப்பார் என்று பிரசாரம் செய்த அரசாங்கம், இப்போது பள்ளிவாசல் மீதும் வரி செலுத்துவதற்கு முற்பட்டிருப்பது மிகவும் அநாகரிகமான செயலாகும்.

மாணிக்கக்கல் ஏற்றுமதிக்காக 16 சதவீதம் வரி அறவிட  அரசாங்கம் முனைந்து வருகின்றது. இவைகளெல்லாம் முஸ்லிம்களின் அடிப்படை ஜீவதாரத்தைக் குறைக்கும் மற்றும் அவர்களுக்கு மனக்குமுறலை ஏற்படுத்தும் செயலாகும். ஆகவே அரசாங்கத்தின் மேல் உள்ள முஸ்லிம்களுடைய கோபங்களை வெளிப்படுத்துவதற்காக உடனடியாக ஒரு தேர்தலை நடத்த வேண்டுமென முஸ்லிம் முற்போக்கு முன்னணி அரசாங்கத்தை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

தேர்தலை ஒத்திப் போடக் கூடாது என நேற்றுமுன்தினம் பல அமைச்சர்கள் கூறி இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அமைச்சரவையில் இருக்கின்ற அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு விரோதமாக முஸ்லிம்களின் சார்பாக தங்களது குரலை எழுப்ப வேண்டுமென நாம் அவர்களை வேண்டுகிறோம்.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் நீ இழந்து விடலாம், ஆனால் ஜனநாயக பாராளுமன்ற முறையை நீ இழக்கக் கூடாது. உனது உயிரைப் பணயம் வைத்தாவது அதனை நீ பாதுகாக்க வேண்டும்என்று தற்போதைய அரசியல் யாப்பை உருவாக்கிய ஜே. ஆர். ஜயவர்தன, தனக்கு அளிக்கப்பட்ட இறுதிப் பிரியாவிடை நிகழ்வின் போது கூறியதை நான் இன்று ஊடகங்களுக்கு ஞாபகமூட்டவிரும்புகிறேன்.


பொத்துவில் பிரதேசத்தில் உள்ள, மரதுரம் வெளி புலிபிடித்தச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 650 ஏக்கர் குடியிருப்பு காணிகளை வனபரிபாலன இலாகா ஆக்கிரமித்து வருவதாக  அங்குள்ள மக்கள் பெரும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். எனவே அந்த மக்களின் சார்பாக முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதேசத் தலைவர்களும் உடனடியாக குரல் கொடுக்க வேண்டும்ஆக்கிரமிப்புச் செய்வது அபகரிப்பது இந்த அரசாங்கத்திற்கு ஒரு வழமையான செயலாகிப் போய்விட்டது. எனவே முஸ்லிம்களுடைய ஆக்கிமித்த பூமிகள், அவர்களுக்கு எதிராக நிறுவப்பட்ட சிலைகள் சம்பந்தமான எந்த ஒரு விடயத்திலும் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்குச் சார்பாக செயற்படவுமில்லை; நடவடிக்கை எடுக்கவுமில்லை. ஆகவே பொய்யைச் சொன்ன அரசாங்கம் பொய்யினால் அழிந்துவிடும் என்பதை நாங்கள் இன்று அவர்களுக்கு கூறவிரும்புகிறோம்என்றும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top