மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹார்வே புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 14 ஆண்டுகால வரலாறு காணாத பெரும் புயல் நேற்று தாக்கியது. மணிக்கு சுமார் 140 (சுமார் 210 கிலோ மீட்டர்) கிலோ மீட்டர் வேகத்தில் சீறிவந்த இந்த பெரும் புயல் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 11 மணியளவில் அரன்சாஸ் மற்றும் ஓ’கோன்னோர் துறைமுகங்களுக்கு இடையே டெக்சாஸ் மாநிலத்தின் தென்பகுதியை பதம் பார்த்தது.

அதிகாலை 2 மணியளவில் சீற்றம் தணிந்து மணிக்கு 125 மைல் வேகத்தில் வலுவிழந்த ஹார்வே புயல் டெக்சாஸ் மாநிலத்தின் பல பகுதிகளை துவம்சம் செய்தது.

கடந்த 2004-ம் ஆண்டு அமெரிக்காவை தாக்கிய சார்லி புயலுக்கு பிறகு நேற்று வீசிய இந்தப் புயல் தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்தனர்.

பலத்த மழைக்கு இடையில் கோரத்தாண்டவம் ஆடிய ஹார்வே புயலின் எதிரொலியாக பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் உள்ள மின்சார விளக்கு கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகள் சில கட்டிடங்களின்மீது விழுந்து கிடப்பதை காண முடிந்தது.

மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் விழுந்திருக்கும் மரங்களை அகற்றும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பல முக்கிய சாலைகளின் குறுக்கே மரங்கள் விழுந்துகிடப்பதால் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.

அதிகாலை 4 மணியளவில் டெக்சாஸ் மாநிலத்தை புயல் கடந்த பின்னரும் மாநிலத்தின் பல பகுதிகளில் வரும் புதன்கிழமை வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி செய்திகள் ஏதும் வெளியாகாத நிலையில் நான்காம் எச்சரிக்கை எண்ணுடன் டெக்சாஸ் மாநிலத்துக்குள் நுழைந்த ஹார்வே புயல் மூன்றாம் எச்சரிக்கை எண்ணுடன் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top