முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ ஆகியோர் விகாரையில் நடைபெற்ற வழிபாடொன்றில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.வழிபாட்டு நிகழ்வு நேற்றைய தினம் (25) இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்கால ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று வாக்களித்து, நல்லாட்சி அரசாங்கம் பொதுமக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வந்தது.
எனினும், நல்லாட்சி அரசாங்கத்தில் நீதியமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த விஜேதாச ராஜபக்ஸ முன்னாள் அரசாங்கத்தின் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 22ஆம் திகதி அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
விஜேதாசவுக்கும், மஹிந்த ராஜபக்ஸ தரப்பினருக்கும் இடையில் திருட்டுத்தனமான நல்லுறவும் கொடுக்கல் வாங்கல்களும் இருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டதன் பின்னர் நேற்றைய தினம் விஜேதாச ராஜபக்ஸ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சேர்ந்து பௌத்த வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தார்.
மஹரகம அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெல்லன்வில விகாரையில் இடம்பெற்ற குறித்த வழிபாட்டு நிகழ்வின் போது மஹிந்த ராஜபக்ஸவும் விஜேதாசவும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டதாக இரு தரப்பும் தெரிவித்துள்ள போதிலும் மஹிந்த - விஜேதாச நல்லுறவு தற்போது பகிரங்கமாக தொடங்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment