. நீதியான, நியாயமான அரசு நடைபெறுவதாக
நான் உணரும் வரை
இந்தியாவுக்கு வரும் திட்டம் ஏதுமில்லை
- டாக்டர் ஜாகிர் நாயக்
  

நீதியான, நியாயமான அரசு நடைபெறுவதாக நான் உணரும் வரை இந்தியாவுக்கு வரும் திட்டம் ஏதுமில்லை என இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் டாக்கா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவரை கண்காணிக்கும்படி வங்கதேச அரசு இந்திய அரசினை கேட்டுக்கொண்டது.
அதன்படி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், புலனாய்வு அமைப்புகள் அந்த அமைப்பின் அனைத்து நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறது.
இந்த குற்றசாட்டுகளை ஜாகிர் நாயக் மறுத்து வருகிறார். மேலும், ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டியதாக செய்தி வெளியிட்டதாக கூறப்படும் வங்கதேசத்தின் பிரபல பத்திரிகையும் அதனை மறுத்துள்ளது.
இதையடுத்து தற்போது வெளிநாட்டில் உள்ள ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட் போன்றவற்றை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். சவந்த் மற்றும் ரேவதி மோகிதே அமர்வு, ஜாகிர் நாயக் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறையிடம் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
மேலும், தனது பாஸ்போர்ட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த வழக்கு மிகப்பெரிய தண்டனைக்குரிய வழக்கு என்றும், ஜாகிர் நாயக் நீதிமன்றத்திலோ, விசாரணை ஆணையத்திடமோ ஆஜர் ஆகாமல் எந்த முடிவும் எடுக்க இயலாது எனவும் கூறினர்.
மேலும், ஜாகிர் நாயக் மீது விதிக்கப்பட்ட எவ்வித தடையையும் நீக்க முடியாது என்றும் பாஸ்போர்ட் பெற வேண்டும் எனில் அதற்கு தனியாக மனு அளிக்க வேண்டும் எனவும், ஜாகிர் நாயக் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் கடந்த மாதம் அறிவுறுத்தி இருந்தனர்.
இதற்கிடையில்,  மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஜாகிர் நாயக் இந்தியா வந்து நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை ஜாகிர் நாயக் இன்று மறுத்துள்ளார்.
நான் இந்தியா வருவதாக வந்துள்ள செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. தவறானவையும் கூட. எனக்கெதிராக நியாயமற்ற விசாரணை நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தும் வரை இந்தியாவுக்கு வருவதாக திட்டமில்லை.
நீதியான, நியாயமான அரசு நடைபெறுவதாக நான் உணரும்போதுதான் என் தாய்நாட்டுக்கு வருவேன் என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top