மீன்களை கொண்டு மசாஜ் செய்த பெண்களின்
கால் நகங்கள் உதிர்ந்த பரிதாபம்
   
அமெரிக்காவில் மீன்களை பயன்படுத்தி கால்களுக்கு மசாஜ் செய்த பெண்களின் கால் நகங்கள் உதிர்ந்த சம்பவம் அவ்வாறு மசாஜ் செய்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கிராமங்களில் ஆறு, குளங்களில் குளிக்கும் போது கால்களை மீன்கள் கடிக்கும். அது நமக்குள் ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தினாலும் மூளை வரை உற்சாக மூட்டும். இந்த முறையை தற்போது அழகு நிலையங்களில் அறிமுகப்படுத்தியுள்ளனர். ‘மீன் ஸ்பாஎனப்படும் இயற்கை சிகிச்சையில் அழகியல் நிபுணர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஒரு தொட்டியில் நீரை நிரப்பி அதில் காரா ருஃபா( Garra rufa) எனும் குட்டி குட்டி மீன்களை போட்டு நம் கால்களை அந்த தொட்டிக்குள் வைத்து ஊறவைத்து விடுவார்கள். தொட்டிக்குள் இருக்கும் மீன்கள் கால்களில் உள்ள இறந்த செல்கள், பாக்டீரியாக்கள் போன்றவைகளை தின்றுவிட்டு கால்களை பொலிவுறச் செய்யும். 
கால்களில் உள்ள அழுக்குகளை தின்று கால்களை சுத்தப்படுத்துவதால் இந்த மீனை டாக்டர் மீன் என்றும் அழைக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள மீன் ஸ்பா அழகு நிலையம் ஒன்றில் இவ்வாறு மீன்களை பயன்படுத்தி பெண்கள் சிலர் ஆறு மாதங்களுக்கு முன்னர் கால்களுக்கு பெடிக்யூர் (கால்களை அழகுபடுத்தும் மசாஜ்)  செய்துள்ளனர்.
சரியாக ஒரு மாதம் கழித்து அவர்களின் கால் நகங்கள் பாதிக்கப்பட்டு உதிர்ந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீன்களை பயன்படுத்தி கால்களுக்கு மசாஜ் செய்ததால் ஒவ்வாமை காரணமாக கால் நகங்கள் உதிர்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தோல் மற்றும் நகங்கள் துறை சார்ந்த துறையின் நிபுணர் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களின் நகம் உதிர்வது காயத்தினாலோ அல்லது பரம்பரை நோய் தொற்றுகளினாலோ அல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளது. 
மீன் ஸ்பா அழகு நிலையங்களில் உள்ள மீன்கள் தினம்தோறும் பல்வேறு நபர்களின் கால்களில் உள்ள அழுக்குகளை தின்று சுத்தம் செய்கின்றன. மீன்கள் இருக்கும் தண்ணீரையும் உடனுக்குடன் மாற்றி சுத்தப்படுத்துவது இல்லை.
எனவே, இதுபோன்ற நோய் தாக்கிய நபரின் கால்களை மீன்கள் சுத்தம் செய்துவிட்டு அடுத்தவரின் கால்களையும் அதே மீன்கள் சுத்தம் செய்கையில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் கிருமிகள் பரவி இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுகின்றனஎன தெரிவித்தார்.
மீன் ஸ்பா-வில் பயன்படுத்தப்படும் காரா ருஃபா வகை மீன்கள் சொரியாசிஸ் நோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே இவ்வாறான மீன்களை பெடிக்யூர் செய்ய பயன்படுத்துவது உகந்தது இல்லை. அமெரிக்காவில் 10-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் மீன் ஸ்பா அழகு நிலையங்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top