எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகிய நான்............

கல்முனை உப பிரதேச செயலக
நிரந்தர கணக்காளர் நியமனம் தொடர்பாக



கண்ணிய மிக்க உலமா பெருமக்கள்,
மதிப்புக்குரிய தலைவர், நிர்வாக சபையினர்கள்
முஹைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்
கல்முனை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

கல்முனையை சேர்ந்த .எம். நஸீர் எனும் நபர் கல்முனை உப பிரதேச செயலக நிரந்தர கணக்காளரை நியமிக்க எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகிய நான் எழுத்து மூலமாக சம்மதம் வழங்கியதாகவும், அதற்க்கு தன்னிடம் தகுந்த ஆதாரம் இருப்பதாகவும் அதனை இல்லையென்று எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகிய நான் மறுதலித்தால் கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் வந்து சத்தியம் செய்ய தயாரா என சவால் விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக குறித்த நபருக்கு நேரடியாக பதிலளிப்பதாக இல்லை என்பதை தீர்மானித்து விட்டு கல்முனையின் கண்ணியமிக்க உலமாக்கள் மற்றும் கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு அறியத்தருவதாவது,

கல்முனை உப பிரதேச செயலக விடயமாக கடந்த 18 ஆண்டுகளாக நான் பல பிரச்சினைகளுக்கும், போராட்டங்களுக்கும் முகம்கொடுத்து வருவது உங்களுக்கும், பிரதேச மக்களுக்கும் நன்றாக தெரியும். அதே நேரம் அண்மைய நிரந்தர கணக்காளர் நியமன விவகாரம் (இதுவரை யாரும் கணக்காளராக நியமிக்கப்படவுமில்லை, சேவைக்கு வரவுமில்லை) சம்பந்தமான விடயம் என்னவெனில்,

கடந்த 2019.07.11 ம் திகதி அரசுக்கு எதிராக ஜே.வி.பியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கல்முனை உப பிரதேச செயலகத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நிகழ்த்தும் காய் நகர்த்தல்களை நன்றாக அறிந்து கொழும்பு வாழ் கல்முனை புத்திஜீவிகள் மற்றும் கல்முனை வர்த்தக சங்க தலைவர் அடங்கிய குழுவினரை அழைத்துச் சென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கல்முனை பிரதேசத்தின் பிரச்சினைகளை தெளிவாக விளக்கி முஸ்லிம்களாகிய எமது நிலைப்பாட்டை உறுதியான முறையில் தெரிவித்திருந்தோம். பின்னர் புத்திஜீவிகள் குழு எமது பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கல்முனை பிரச்சினை பற்றி தெளிவாக விளக்கி கூறியது.

இந்த புத்திஜீவிகள் குழுவில் என்னுடன் சட்டமுதுமானி வை.எல்.எஸ்.ஹமீட், சிரேஷ்ட சட்டத்தரணி ஹாலித், சிரேஷ்ட சட்டத்தரணி அப்துல் ரஸாக், சட்டத்தரணியும் வைத்தியருமான வை.எல்.எம்.யூஸுப், பொறியலாளர் லத்தீப், கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே..சித்தீக், தொழிலதிபர் ஜிப்ரி (DIRECT LINE), ஊடகவியலாளர் ரிப்தி அலி ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். அங்கு என்ன நடைபெற்றது ? என்பதுடன் அங்கு பேசப்பட்ட சகல விடயங்களுக்கும் இவர்கள் எல்லோரும் நன்றாக அறிந்த சாட்சிகளாக உள்ளனர்.

இதற்க்கு மேலதிகமாக வாக்களிப்புக்கு பத்து நிமிடங்கள் முன்பு வரை எமது எம்பிக்கள் எல்லோரும் பிரதமரை சந்தித்து தெளிவாக எமது நிலைப்பாடுகளை தெரிவித்து, இந்த நிரந்தர கணக்காளர் விடயத்துக்கு எதிராக போராடி உறுதிமொழியை பெற்றுக்கொண்டோம். சில ஊடகங்களில் குறித்த செயலகத்திற்கு நிரந்தர கணக்காளர் நியமித்ததாக கூறி சில ஆவணங்கள் வெளியாயிருந்தாலும் பிரதமர் எங்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இன்னும் நிரந்தர கணக்காளரை சம்பந்தப்பட்ட அமைச்சு நியமிக்கவுமில்லை அங்கு யாரும் கடமைக்கு வரவுமில்லை. கணக்காளருக்கான பொறுப்புக்களை ஏற்கவுமில்லை. நாங்கள் அறிந்த வகையில் இது சம்பந்தமாக இதுவரை எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவைகள் இப்படி இருக்க நான் அந்த கணக்காளரை நியமிக்க எழுத்து மூலம் ஆதரவு வழங்கியதாக .எம்.நஸீர் எனும் நபர் என்மீது அபாண்டமான குற்றசாட்டை முன்வைத்து சத்தியம் செய்ய கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு அழைக்கிறார். "அல்லாஹ்வின் மீது ஆணையாக கூறுகிறேன்- நிரந்தர கணக்காளர் நியமனத்திற்க்கு எவ்வித அனுமதியையும் நான் எச்சந்தர்ப்பத்திலும் வாய்மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ யாருக்கும் வழங்கவில்லை" இது பொய்யான செய்தியும் அபாண்டமான குற்றச்சாட்டுமாகும்.

.எம். நஸீரின் கோரிக்கையை நிறைவேற்ற நான் கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வந்து சத்தியம் செய்ய வேண்டும் என கண்ணிய மிக்க உலமாக்கள் மற்றும் கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் தீர்மானித்து எனக்கு எழுத்து மூலம் அறிவித்தால் நான் நிச்சயமாக உங்கள் தீர்மானத்தை மதித்து செயற்பட தயாராக இருப்பதையும் அறியத்தருகிறேன்.

உங்கள் எல்லோர் மீதும் அல்லாஹ்வின் அருள் பொழியட்டும்.
வஸ்ஸலாம்
நன்றி.
சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்
பாராளுமன்ற உறுப்பினர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top