கல்விக்காக வாழ்வை அர்ப்பணித்த
மர்ஹும் எம்.ஸி. .  ஹமீத் அதிபர் அவர்களுக்கு
ஓராண்டு நினைவுகூரும் துஆ பிராத்தனை.

கல்விக்கா தனது பாரிய அர்ப்பணிப்பை செய்த சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக்கொண்ட மர்ஹூம் எம்.ஸி.அப்துல் ஹமீத் அவர்கள்   இம்மண்ணை விட்டுப்பிரிந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்காக பிரார்த்தனை செய்து நினைவுகூரும் நிகழ்வு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(18)  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மர்ஹும் எம்.ஸி. ஏ. ஹமீத் அவர்களின்  குடும்ப உறவினர்கள் மதப்பிரமுகர்கள் கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது மர்ஹும் எம்.ஸி. ஏ.  ஹமீத் அவர்கள் தொடர்பிலான சொற்பொழிவு பலவும் இடம்பெற்றன.

கல்முனை மண்ணில் குறிப்பாக  சாய்ந்தமருதில் தோற்றம் பெற்ற கல்வி பாரம்பரியத்தில் எவராலும் எளிதில் மறக்கமுடியாத ஒருவர்தான் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் ஸ்தாபக அதிபர் மர்ஹும் எம்.ஸி..ஹமீது அவர்கள்.
இவர் சாய்ந்தமருது அல்ஜலால் வித்தியாலயம், சாய்ந்தமருது மல்ஹறுஸ் ஸம்ஸ் வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகச் செயல்பட்டு இப்பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அரும்பணியாற்றியவர்.

கல்முனைப் பிரதேசத்தில் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு என கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அமைக்கப்பட்டு அக்கல்லூரியின் ஸ்தாபக அதிபராக 1971. 01. 05 ல் நியமிக்கப்பட்டார்.  சிறப்பான முறையில் சேவையாற்றிய இவர் தொடர்ச்சியாக 13 வருட சேவையின் பின் 1984.02.20 ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இப்பிராந்தியத்தில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் வளர்ச்சியின் உச்சத்திற்கு அடித்தளமிட்ட அன்னாரின் அர்பணிப்பு மிக்க சேவையினால் இன்று இலங்கையில் தலை சிறந்த கல்லூரியாக இக்கல்லூரி பரிணமித்துள்ளது. அதன்பேறாக பெருமளவிலான பெண்களை வைத்தியர்களாக, சட்டத்தரணிகளாக, பொறியியலாளர்களாக கல்வியியலாளர்களாக இக்கல்லூரி உருவாக்கியுள்ளமை அன்னாரின் சேவையின் திறமையைக் காண்பிக்கின்றது.

மர்ஹும் எம்.ஸி..ஹமீது அவர்கள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அதிபராக கடமை புரியும்போது அன்னார் கண்ணியமாகவும், கெளரவமாகவும்  தனக்கு வழங்கப்பட்ட கடமையை உயர்ந்த பணியாகக் கருதி அடக்கமாகவும், அமைதியாகவும் சிறப்பான முறையில் கடமை செய்து நல்ல பெயரை பெற்றிருந்தார். அன்னார் பெண்கள் கல்லூரியில் அதிபராகக் கடமை செய்தபோதும் பதவியை ஒருபோதும் கொச்சைப்படுத்தியதில்லை.

கல்முனைப் பிரதேசத்தில் முஸ்லிம் பெண்களின் கல்வி உயர்ச்சிக்காக அன்னாரும் அன்னாரோடு சேர்ந்து இவருக்குப் பின்னர் இக்கல்லூரியில் அதிபராக இருந்த அதிபர்மணி .எச்.. பஷீர் அவர்களும் இரவு, பகல் என்று பாராது ஆரம்ப கர்த்தாக்களாக இருந்து உரப்படுத்தியவர்கள். இவர்கள் எடுத்த முயற்சிகள் இன்று இப்பிரதேசத்தின் ஏழை,எளிய குடும்பங்கள் பெண்களின் கல்வி முன்னேற்றத்தால் சிறப்பாக வாழ்வதற்கு உதவி புரிந்துள்ளதை சிந்திப்பவர்களால் ஒருபோதும் மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

எம்.ஸி.. ஹமீத் அவர்கள் நற்பண்புகளையுடையவர், மக்களுடன் அமைதியாகப் பேசி அன்பாகப் பழக்ககூடியவர். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளைக் கடமையுணர்வுடன் மிகச் சிறப்பாக செய்து முடிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்.

அன்னார் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவராக செயற்பட்டு இப்பிரதேசத்தின் ஆண்மீக வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்பினைச் செய்திருந்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் தற்போதைய பிரமிக்கும் தோற்றத்தில் அமைந்த கட்டடத்தின் கட்டுமானப் பணியானது அன்னார் இப்பள்ளிவாசலின் பொருளாளராக செயற்பட்ட 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டமை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர், சாய்ந்தமருது கிராம முன்னேற்றச் சங்கம், சமாதான சபை,சன சமூக நிலையம், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் மற்றும் விவசாயக் குழுக்கள் போன்ற அமைப்புக்களில்தலைவராகவும் கல்முனை பிரதேச சிவில் பாதுகாப்பு பிரிவின் உப தலைவராகவும் பதவிகள் வகித்து சிறப்பாகச் சேவையாற்றியவர்.

மர்ஹும் எம்.ஸி.. ஹமீத் அவர்கள் கல்வி,சமூக, சமய கலாசார சேவைகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றியமையைக் கருத்தில் கொண்டு சர்வோதய தலைவர் .ரி ஆரியரத்ன அவர்களின் தலைமையில் கல்முனை பாத்திமாக் கல்லூரியில் இடம்பெற்ற வைபவத்தில் கெளரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரி உருவாக்கத்தில் இக்கல்லூரியின் ஸ்தாபகரான மர்ஹும் எம்.எஸ்.காரியப்பருடன் முன்னின்று உழைத்த பிரமுகர்களில் மர்ஹும் எம்.ஸி..ஹமீதுஅவர்களும் ஒருவராவார்.

மர்ஹும் எம்.ஸி.. ஹமீத் அவர்கள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபராக  பதவி வகித்த காலத்தில் நான் தினபதி, சிந்தாமணி கல்முனை நிருபராக இருந்தபோது  கல்லூரியின் சஞ்சிகையான .எச்.ஆரிபாவை ஆசிரியராகக் கொண்டு அன்று வெளிவந்தகொடிசஞ்சிகை பற்றி அறிமுகம் ஒன்றை தினபதியில் பிரசுரிப்பதற்கு தகவல் திரட்ட  கல்லூரிக்குச் சென்றிருந்தேன்.

அதிபர் அவர்கள் அதிபர் காரியாலய முன் கதவருகே நின்றிருந்தார்கள். என்னைக் கண்டதும் நின்றவாறே உள்ளே வந்து அமரச் சொன்னார். இன்று  இருப்பது போன்று அன்று அதிபரின் மேசை அதிபருக்கான ஆசனம் அதிபரைச் சந்திப்பவர்களுக்கான ஆசனங்கள் என்பன வசதியாக அமைக்கப்பட்டிருக்கவில்லை.   அன்று அதிபர் காரியாலயத்தில் அதிபரின் மேசை காரியாலயத்தின் நடுவில் போடப்பட்டு இரு பக்கமும் கதிரைகள் போடப்பட்டிருந்தன. நான் மேசையின் ஒரு பக்கத்தில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்துவிட்டேன்.

அதிபர் அவர்கள் என்னுடன் பேசுவதற்கு ஆசனத்தில் வந்து அமரவில்லை. நின்றவாறு அங்கும் இங்கும் பார்த்தார். காரியாலய முன் கதவுக்கு அருகில் சென்றும் பார்த்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பின்னர் அதிபர் மேசையைக் கவனித்தேன் கோவைகள் அடுக்கப்பட்டுள்ளதைக் கவனித்த  பிறகுதான் நான் அதிபரின் கதிரையில் அமர்ந்து இருப்பதை உணர்ந்துகொண்டேன் உடனே சட்டென எழுந்துவிட்டேன்.

இதன் பின்னர்தான் அதிபர் அவர்கள் சிரித்துக்கொண்டு அன்னாரின் கதிரையில் வந்து அமர்ந்து கொண்டார். என்னை எழும்பி அடுத்த கதிரையில் அமரும்படி என்னிடம் வேண்டவுமில்லை.அப்படி மர்ஹும் எம்.ஸி.. ஹமீத் அதிபர் அவர்கள் மென்மையானவராகச் செயல்பட்டார் இது ஒரு உதாரணமாகும். இது இன்றும் எனக்கு நினவில் உள்ளது.

உலக-ஊர் வரலாறுகளை தன் நினைவில் வைத்திருக்கும் அபார ஞாபகசக்தியும் நுண்ணறிவும் வாய்க்கப்பெற்ற அன்னார் தன் 93 ஆவது வயதில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரது குற்றம் குறைகளைப் பொறுத்து அன்னாரின் ஆத்மாவுக்கு சாந்தி அளித்து அருள் புரிவாயாக...
 ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
.எல்.ஜுனைதீன்
ஊடகவியலாளர்









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top