“கல்முனை மஹ்மூத் மளிர் கல்லூரி
ஸ்தாபக அதிபர் அல்-ஹாஜ் எம்.சி.ஏ.ஹமீட்
வாழும் ஒரு சரித்திரம்.....“
அன்னாருக்கான நினைவு மலர்


கல்விக்காக தனது பாரிய அர்ப்பணிப்பை செய்த சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக்கொண்ட மர்ஹூம் எம்.ஸி.அப்துல் ஹமீத் அவர்கள்   இம்மண்ணை விட்டுப்பிரிந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்காக பிரார்த்தனை செய்து நினைவுகூரும் நிகழ்வும் அதனையொட்டி அன்னாருக்கான நினைவு மலர் வெளியீட்டு வைபவமும் சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(18)  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மர்ஹும் எம்.ஸி. . ஹமீத் அவர்களின்  குடும்ப உறவினர்கள் மதப்பிரமுகர்கள் கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது மர்ஹும் எம்.ஸி. .  ஹமீத் அவர்களுக்கு “கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஸ்தாபக அதிபர் மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.சி.ஏ.ஹமீட் வாழும் ஒரு சரித்திரம்.....“  எனும் தலைப்பில் அன்னாருக்கான நினைவு மலர் ஒன்று வெளியீட்டு வைக்கப்பட்டது.  
இம்மலரில் அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் “மர்ஹூம் எம்.சி.ஏ.ஹமீத் சேர் அவர்கள் ஒரு நேர்மையான முன்னுதாரன யுக புருஷர் எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,
சமூகப் பணிகளில் அக்கறை காட்டத் தவறாத மர்ஹும் எம்.ஸி. . ஹமீத் சேர் அவர்கள் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஒரு மரைக்காயராக, நம்பிக்கையாளராக செயல்பட்ட விதத்தினை கண்கூடாகக் கண்டேன் என்ற அடிப்படையில் சமூகப் பணிகளில் அவரது நேர்மைத் தன்மை மிகவும் பாராட்டத்தக்கது எனக்குறிப்பிட்டுள்ளார்.

நாகவி- ரீ.எம்.றிபாய் “அற்புத மனிதர் அப்துல் ஹமீது மாஸ்டர்” எனும் தலையங்கத்தில் எழுதிய கவிதையில்,

அப்துல் ஹமீது மாஸ்டர்
அற்புத மனிதர்
மருதூர் மைந்தர்களின்
மனதைக் கவர்ந்த
மாமனிதர். . .!!!
வாழும் ஒரு சரித்திரம்
இவர் –
வாழ்வே ஒரு சரித்திரம்!!
எனக் குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் சபைத் தலைவரும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் தலைவருமான டாக்டர் எம்.ஐ.எம்.ஜமீல் “மர்ஹூம் மர்ஹும் எம். சீ. ஏ. ஹமீத் அவர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,

“இவர் அம்பாறை மாவட்ட மீலாத் குழுவின் பொருளாளராகச் செயல்பட்டபோது “அம்பாறை மாவட்டமுஸ்லிம்களின் வரலாறு எனும் புத்தகம் வெளியிடவும் இம்மாவட்டத்தில்தேசிய மீலாத் விழாசிறப்பாக நடைபெறவும் முஸ்லிம்  கலாசாராமைச்சுக்கு பக்கபலமாக இருந்தார்.

2009ல் “சாய்ந்தமருது வரலாறு எனும் புத்தக ஆக்க வேலைகள் எனது தலைமையில் நடைபெற்றபோது அதன் வெளியீட்டுக் குழுவில் அங்கத்தவராக இருந்து தகவல்களின் நம்பகத்தன்மைகளை உறுதிப்படுத்துவதில் மிக அக்கறைசெலுத்தினார். அதைத் தொடர்ந்து மர்ஹூம் கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்களின் நினைவு மலர் வெளியீட்டுக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா “அதிபர் எம்.சி.ஏ. ஹமீத் சேர் அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகம் எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,

அதிபர் எம்.சி.. ஹமீத் அவர்களிடம் எதுபற்றிக் கேட்டாலும், துறைசார் நிபுணர்போல் விபரிப்பார்கள். எனவே, எனக்கு அவர்களைப்பற்றி நினைவு வரும்போதெல்லாம் நான் அவர்களை ஒரு “ நடமாடும் பலகலைக் கழகமாகவே  காண்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனிபா “மர்ஹூம் அல்-ஹாஜ்.எம்.சி.ஏ.ஹமீத் அவர்கள் ஒரு சிறந்த வழிகாட்டி எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,

“மஹ்மூத் மகளிர் கல்லூரியிலுள்ள கூட்ட மண்டபம், மாணவர் விடுதி போன்ற இன்னும் பல வசதிகளை ஏ.ஆர் மன்சூர் அமைச்சரைக் கொண்டு செய்வித்தார். இவர் பாலிகா வித்தியாலயத்தில் பெண்கள் கல்வியில் அதிக அக்கறை கொண்டு  பெண் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். இவர் பாலிகாவில் இருந்து ஓய்வுபெறும்போது நல்லதொரு அதிபரான ஏ.எச்.ஏ.பஷீர் அவர்களிடம் கையளித்துச் சென்றது அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் ஓய்வு பெற்ற இரண்டாவது அதிபர் அல்-ஹாஜ் ஏ.எச்.ஏ. பஷீர் “கவிக்கு உயிரூட்டிய எம்.சி.ஏ.ஹமீத் சேர் என்றும் மனித மனங்களில் வாழ்கிறார் எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,

“காலையில் பாதையோரங்களில் சர்வகலாசாலைகளுக்குச் செலவதற்காகக் காத்து நிற்கும் எமது பிரதேசத்தைச் சேர்ந்த எமது கல்லூரி மாணவிகளைப் பார்க்கும்போது நெஞ்சம் பெருமிதத்தால் பூரிக்கின்றது.  இவ்வளவு மாணவிகளின் உயர் கல்வியின் அடித்தளங்களில் ஹமீத் சேரின் அயரா உழைப்பு மறைந்திருப்பதை எம்மால் உணர முடிகிறது.

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இங்கு வந்து பாடசாலையின் விடுதியில் தங்கிக் கல்வி கற்று மன நிறைவைப் பெற்றுக் கொண்ட மாணவிகளின் மனங்களிலும் பெண் கல்வி வளர்ச்சிக்கு அத்திவாரமிட்டு உயிரூட்டிய இப்பெருமகனின் தியாகங்கள் ஊசலாடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியர் அல்-ஹாஜ் எம்.எம்.காஸிம் “சேவைச் செம்மல் ஓய்வுபெற்ற அதிபர்  மர்ஹூம் எம்.சி.ஏ.ஹமீத் எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,
“காரியங்களை செயற்படுத்துவதில் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பை பெறும் ராஜதந்திரம் அதிபர் ஹமீத் அவர்களுக்கு கைவந்த கலை.அவர் தொட்டவை துலங்கின. கேட்டவை மறுப்பின்றி கிடைத்தன.

இதற்கெல்லாம் உறுதுணையாக அமைந்தது குடும்பத்தின் ஒத்துழைப்பும் குடும்ப பொருளாதார ஸ்திர தன்மையுமாகும்.அவர்கள் இவரது சம்பளத்தை எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு வேறு வருமானங்கள் இருந்தன. இக்கல்லூரிக்கு ஆரம்பத்தில் கிடைத்த இரு அதிபர்களும் (எம்.சி.ஏ.ஹமீத் + ஏ.எச்.ஏ.பஷீர்) தங்கள் சம்பளத்தை கல்லூரி நன்மைக்கே செலவு செய்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுநிலை ஆசிரியை மெளலவியா எப்.ஏ.சி.மொஹிடின் “மர்ஹூம் அல்-ஹாஜ்.எம்.சி..ஹமீத் அவர்கள் எமக்கு ஒரு கண்ணியமான அதிபர்,கண்டிப்பான தந்தை எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,

ஒரு சமூகத்தின் தலைவன் அதன் பணியாளனைப் போலாவான் என்ற பெருமானாரின் வாக்குக்கேற்ப பாடசாலையின் சகல கருமங்களிலும் சில வேளை வடிகாலகளைச் சுத்தம் செய்வதில் கூட  இணைந்துகொண்டுமுன் உதாரணமாக  வாழ்ந்து காட்டியவர்.

கையில் ஒரு பிரம்பு இருக்கும் ஆனால், அதனால் யாரையும் அடித்ததையோ விரட்டியதையோ நான் கண்டதில்லை. கண் அசைவிலேயே மாணவர்களை, ஆசிரியர்களை அடக்கியாளும் அதிசயத்தை அவரிடம் கண்டிருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மெளலவி எஸ்.எச்.ஆதம்பாவா (எம்.ஏ) “மர்ஹூம் எம்.சி..ஹமீத் சேர் ஒரு சிறந்த ஆளுமை எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,

“சாய்ந்தமருது அல்-அமான் பாடசாலையை கல்முனை மஹ்மூத் கல்லூரியாக மாற்றி பெண்களுக்கான ஒரு உயர் பாடசாலையை நிறுவும் கல்விச்சமுதாயம் ஒன்றுக்குத் தலைமை வகித்ததுடன் அக்கல்லூரியின் ஸ்தாபக திபராகவும் பணியாற்றினார். இக்கல்லூரியின் வரலாற்றுடன் இவரது வரலாறும் இணைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பிரதி அதிபர் ஆர்.எம்.அஸ்மி காரியப்பர் “ஒரு வம்ச விருட்சத்தின் ஆணி வேர் எனும் தலையங்கத்தில் எழுதிய கவிதையில்,

“அறிவொளிவீசும் அவரதுமொழி அன்புறப்பழகு     வதாலே
நறுமணமலர் விரிகிறபோது வருகிறமணம்         போலே
குறுநகைபுரியக் குழிவிழும்கன் னம்அழகுறு        வதாலே
அவரதுஇதயம் அன்புறப்பழ கும்தனமை            யினாலே
சிறப்புறச்சிறந் துவனப்புற வாழ்ந்தத               னாலே
அவரொருஇம யம்குணம்நிறை குன்றமெனவா    னாரே
என குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஏ.எல்.ஜுனைதீன் “மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.சி..ஹமீத் மென்மையானவர், சமூக சிந்தனைமிக்கவர் எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,

“இப்பிராந்தியத்தில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் வளர்ச்சியின் உச்சத்திற்கு அடித்தளமிட்ட அன்னாரின் அர்ப்பணிப்புமிக்க சேவையினால் இன்று இலங்கையில் தலை சிறந்த கல்லூரியாக இக்கல்லூரி பரிணமித்துள்ளது.

அதன்பேறாக பெரும் எண்ணிக்கையான இப்பிரதேச பெண்கள் வைத்தியர்களாக சட்டத்தரணிகளாக பொறியியலாளர்களாக கல்வியலாளர்களாக இக்கல்லூரி உருவாகியுள்ளமை அன்னாரின் சேவையின் திறமையைக் காண்பிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் யூ.எல்.எம்.அமீன் “மர்ஹூம் எம்.சி.ஏ.ஹமீது அவர்கள் மஹ்மூத் மகளிர் கல்லூரியைச் செதுக்கிச் செப்பனிட்ட சிற்பி எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,
“மர்ஹூம் எம்.சி.ஏ.ஹமீது அவர்களின் நாமம் இந்தக் கல்லூரி இருக்கும் வரை கேட்கும். இந்தக் கல்லூரி வளாகத்திலிருக்கும் ஒவ்வொரு மண்ணும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. மண்களைப் பேசவைக்காத மனிதன் எதற்கு? எனக் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் ஓய்வுபெற்ற பிரதி அதிபர் என்.எம்.சலீம் “ஓர் உதவி ஆசிரியையின் பார்வையில்.. மர்ஹூம் எம்.சி.ஏ.ஹமீது அவர்களின் பணி எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,

“அதிபர் அவர்கள் எங்களோடு கதைக்கும்போது குடும்ப அங்கத்தவர்களையும் விசாரிப்பார்கள். நல்ல புத்திமதிகளைக் கூறுவார். இது அதிபர் – ஆசிரியர் உறவில் நம்பிக்கையைஏற்படுத்தும் செயற்பாடாக நாங்கள் மதித்தோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கலாநிதி உ.பாறூக் “நீங்காத நினைவுகள் எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,

“பாலிகாவின் அதிபராகக் கடமையாற்றிய அந்த நேரத்தில் மிகவும் முக்கியமான ஒரு சமூகப்பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். அப்போதய அரசாங்கத்தின் நீதி அமைச்சராக இருந்த பீலிக்ஸ்டயஸ் பண்டாரநாயக்க அவர்கள், இணக்கசபை முறையை அறிமுகம் செய்து ஒரு சமூகப் புரட்சியையே உருவாக்கியிருந்தார். ஆண்டுக்கணக்காகத் தீர்க்கப்படாமல் இருந்த பல நீதிப்பிரச்சினைகள் இணக்கசபைகள் மூலமாகத் தீர்க்கப்பட்டுக்கொண்டிருந்ததை அப்பொழுது நாம் கண்கூடாகக் கண்டோம். சாய்ந்தமருதில் அமைக்கப்பட்டைணக்க சபையின் முதலாவது தலைவராக இவர் நியமிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கிய ஒரு சிறந்த நீதிபதியாக அவர் மக்கல் மனங்களில் பதிவு பெற்றமை, அவரது வாழ் நாள் சாதனைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
                    
சாய்ந்தமருதுமாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உப செயலாளரும் ஓய்வு நிலை ஆசிரியருமான அல்-ஹாஜ் ஐ.அப்துல் குத்தூஸ்ஞாபகப்படுத்துவது முஃமிங்களுக்கு நன்மையளிக்கும்… எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,

“இன்று இக்கல்லூரியில் கற்ற மாணவிகள் வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, சட்டத்தரணிகளாக, கணக்காளர்களாக, திணைக்களத் தலைவர்களாக பல்கலைக்கழகப் பீடாதிபதிகளாக, விரிவுரையாளர்களாக, அதிபர்களாக, ஆசிரியர்களாக மற்றும் பல துறைகளிலும் உத்தியோகத்தகளாகவும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் மதிப்புள்ளவர்களாகவும் இருப்பது மர்ஹூம் எம்.சி.ஏ.ஹமீது சேர் அவர்கள் இக்கல்லூரிக்கு இட்ட பலமான அத்திவாரம் என்றால் அது மிகையாகாது. எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியை திருமதி ஏ.எல்.பல்கீஸ் “அளப்பரிய சேவையாற்றிய அதிபர் மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.சி.ஏ.ஹமீது சேர் அவர்கள் எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,

திறமைக்கு எப்பொழுதும் மதிப்புக் கொடுத்தல், முன்னுக்குவர முயற்சிப்பவர்களுக்கு உற்சாகமூட்டல், நிதானமாகச் சிந்தித்து எதிர்கால விளைவுகளை தீர்க்கதரிசனமாகக் கூறல், மனிதனை மதித்தல், எதையும் தெளிவாக விளங்கிக்கொள்ளல், சமூக சேவைக்காகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைக் கச்சிதமாகப் பயன்படுத்தல், தர்மத்தினாலும் அன்பினாலும் எதையும் சாதிக்க முடியும் என்ற கருத்தை நிலை நாட்டுதல் போன்ற அரும் பெருங்க்குணங்களைக் கொண்ட கெட்டித்தனமும் புத்தி சாதுர்யமும் திறமையும் மிக்கவர்தான் ஹமீத் சேர் அவர்கள். எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் அல்-ஹாஜ் எம்.அலியார் “ஸ்தாபக அதிபர் மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.சி.ஏ.ஹமீது அவர்கள் பற்றி என் மனப்பதிவிலிருந்து சில….. எனும் தலையங்கத்தில் எழுதியுள்ள தனது கட்டுரையில்,

“இப்பாடசாலையில் கல்விகற்ற மாணவிகள் எம் தேசமெங்கும் மற்றும் உலகின் பல பாகங்களிலும் டாக்டர்களாக, பொறியியலாளர்களாக, தாதியர்களாக, பட்டதாரிகளாக பணியாற்றுவது  என்பதானது மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.சி.ஏ.ஹமீது சேர் அவர்களால் வித்திடப்பட்டவைகளே ஆகும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.சி..ஹமீது அவர்கள் பற்றி அன்னாரது குடும்பத்தினர் தங்கள் பதிவில்,

“அடிக்கடி நீங்கள் அழுத்திக்கூறும் “மஞ்ஜத்த வஜத்த – தெண்டித்தவன் பெற்றுக்கொள்வான், “கழா கத்ர் –அல்லாஹ்வின் நாட்டப்படிதான் எல்லாமே நடக்கும் என்பவற்றிலே வாழ்வின் அர்த்தமே ஒளிந்துள்ளது என்பதை அறிந்து கொண்டோம். எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெனிவாவில் உள்ள .நா பணியகத்துக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி .எல்.அப்துல் அஸீஸ், ஓய்வு நிலை மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.எச்.யாகூப் மற்றும் இபாத் அஸீஸ் ஆகியோரும் தமது கட்டுரைகளை  ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஏ.எல்.ஜுனைதீன்
ஊடகவியலாளர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top