மட்டக்களப்பு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட
தற்கொலை குண்டு தாரியின் உடல் பாகங்களை
மீள் தோன்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டு தாரியின் உடல் பாகங்களை மீள் தோன்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 கடந்த 26 திகதி மாலை இரகசியமாக மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட தற்கொலை குண்டு தாரியின் உடலை அடக்கம் செய்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய புதைக்கப்பட்ட உடல் பாகங்களை இன்று மாலை 4 மணியளவில் தோண்டி எடுப்பதற்குரிய நடவடிக்கைகள் நீதிமன்றதினால் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு தொடர்பாக நீதிபதி அரசாங்க அதிபரை கடுமையாக சாடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள ஒரு மயானத்தில் புதைக்கவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்து மயானத்தில் புதைத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கவில்லை எனவே அரசாங்க அதிபர் செய்த தவறே இந்த பிரச்சனைக்கு காரணம் என நீதிபதி கூறியுள்ளார்.


இதே நேரம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தினை மறித்து தாக்குதல் நடாத்தியது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மாநகர சபை உறுப்பினர் செல்வி சுசிலா உட்பட ஐந்து பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி சீயோன் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான காத்தான்குடியை சேர்ந்த தற்கொலை குண்டு தாரி முகமட் ஆஷாத்தின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அன்றைய இரவு கல்லடி பாலம் மறிக்கப்பட்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கல்லடி பாலத்தினை மறித்து போராட்டம் நடாத்தியவர்களை பொலிஸார் கண்ணீர் குண்டு தாக்குதல் மற்றும் தடிஅடி தாக்குதல் நடாத்தி கலைத்திருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான செல்வி மனோகர், சுஜீகலா உட்பட ஐந்து பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் .சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியது, போக்குவரத்தினை தடைசெய்தது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இதன்போது குறித்த உடற்பாகங்கள் பொதுமக்களின் எதிர்ப்பினையும் மீறி புதைக்கப்பட்டது தொடர்பில் அரசாங்க அதிபருக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

விசாரணைகளை தொடர்ந்து ஐந்து பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top