சஹ்ரான் போன்றோரை
காத்தான்குடி மக்கள் நிராகரித்துள்ளனர்
பள்ளிவாசல் மற்றும் நிறுவன
சம்மேளனத்தின் தலைவர் தெரிவிப்பு



சஹ்ரான் போன்றோரை காத்தான்குடி நகர மக்கள் நிராகரித்துள்ளனர்.இவ்வாறானோர் மேற்கொண்ட பாரிய இன பேத நடவடிக்கைகள் காரணமாக, பல உயிர்கள் இழக்கப்பட்டன. முஸ்லிம் மக்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்படுபவதற்கு இது காரணமாக அமைந்ததாக காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் நிறுவன சம்மேளனத்தின் தலைவர் எம்.சி.எம்.சத்தார் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் நிறுவன சம்மேளனத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்  காத்தான்குடி நகரத்தில் மீண்டும் ஒரு முறை பயங்கரவாதி அல்லது பொதுமக்களுக்கு எதிரான நபர்கள் உருவாவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் கூறினார்.

முஸ்லிம் சமூகம் எப்பொழுதும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மறந்துவிடவில்லை. பயங்கரவாதம் நடைபெற்ற காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் மற்றும் ஏனைய சமூகங்களுக்கு இடையில் நெருக்கமாக தொடர்புகளை முன்னெடுத்திருந்தது. இருப்பினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் காத்தான்குடி நகரம், முஸ்லிம் சமூகம், மதத்தைப் போதித்தல், மத்ரஸா பாடசாலை, பேரிச்சம்பழ மரங்கள் போன்ற பல்வேறு கதைகள் பேசப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் சமூகம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏனைய இனத்தவர்கள் பாதிக்கப்படும் வகையில் அல்லது ஏளனம் செய்யும் வகையில், உரிமைகளைக் கோரும் மக்களல்ல. மட்டக்களப்பில் தமிழ் மக்களுடன் தாம் மிகவும் நல்லுறவுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஏனைய பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிங்கள மக்களுடன் மிகவும் அந்நியோன்யமாக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமக்கு பயங்கரவாதமோ, அடிப்படைவாதமோ தேவையற்றது என்றும் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் நிறுவன சம்மேளனத்தின் தலைவர் எம்.சி.எம்.சத்தார் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top