மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின்
புதிய கட்டிடத்தை
ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்

கொழும்பு- 08, கொட்டா வீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது.

மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனமானது சுகாதார அமைச்சு, பல்கலைக்கழகம், இராணுவ மற்றும் தனியார் துறையில் கடமையாற்றிவரும் வைத்தியர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதற்கு இலங்கையில் உள்ள ஒரே நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெளிநாட்டு பயிற்சியை மாத்திரம் ஆதாரமாகக்கொள்ளாமல் இலங்கையில் விசேட பயிற்சி நிகழ்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கில் 1980 இல் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதுடன், தற்போது இலங்கையில் கடமையாற்றிவரும் அனைத்து விசேட மருத்துவ நிபுணர்களும் இந்நிறுவனத்துடன் தொடர்புபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் 2.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன், இந்த கட்டிடத்தை நிர்தமாணிப்பதற்காக 1.6 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி , அதனைப் பார்வையிட்டார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சந்திரிகா விஜேயரத்ன, பட்டப்பின் படிப்பு மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜானக டி சில்வா ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top