போதுமப்பா இந்த நடிப்பு


முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த இருவர் தாம் துறந்த அமைச்சுப் பதவிகளை நேற்று மீளவும் சூடிக்கொண்டார்கள்.

அது சரியா பிழையா என்பது ஒருபுறமிருக்கட்டும்.

கல்முனையின் பிரச்சினை தீராமல், தான் அமைச்சுப் பதவியை மீளவும் எடுக்கமாட்டேன் என்று திரும்பவும் சூளுரைத்துள்ளாராம் ஹரீஸ் எம்பி.

இது நகைச்சுவையான விடயமாகும்.

1) கடந்த 17 வருடங்களாக கல்முனையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றக் கதிரையை சூடாக்கியவரால் தனது மண்ணின் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் போனது.

2) மாறி மாறி எந்த அரசாங்கம் வந்தாலும் அதில் பங்காளியாகும் கட்சியின் பிரதிநிதியான இவரால் கல்முனைப் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் போனது.

3) விளையாட்டு பிரதியமைச்சராக விளையாட்டுக் காட்டிய இவரால் தனது தொகுதியின் முக்கியமான பிரச்சினையில் ஜொலிக்க முடியாமல் போனது.

4) குறித்த பிரச்சினையோடு நேரடித் தொடர்புடைய உள்ளூராட்சி நிருவாக மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சைக் கையகப்படுத்த முடிந்த இவரால் கல்முனையின் உப பிரதேச செயலக சர்ச்சைக்கு தீர்வுகாண முடியாமல் போனது.

இந்தப் பிரச்சினைக்கு அண்மையில் தீர்வொன்று வர வாய்ப்பிருந்த போதும், அதனைத் தடுப்பதற்கு கம்பு சுத்தியதை அதனுடன் தொடர்புடைய அனைவரும் நன்கு அறிவர்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் கொஞ்சக் காலமே இருக்கும் நிலையில், அமைச்சுப் பதவியைப் பாரமெடுத்து எதனையும் சாதிக்கப் போவதில்லை என்றதன் பேரில், மக்களை அடுத்த தேர்தலில் முட்டாள்களாக்கவே இந்த சூளுரைப்பு நாடகம்.

அது மாத்திரமன்றி, மீளவும் அதே அமைச்சுப் பதவியைப் பாரமெடுத்தால், கல்முனைப் பிரச்சினையின் சுமை தன் மீது அழுத்தமாகப் பாயும் என்பதை நன்கு தெரிந்ததனால், அதிலிருந்து நழுவவே இந்த மறுப்பு நாடகமாகும்.

போதுமடா சாமி இந்த நடிப்பு!

இல்லையேல் இதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, அமைச்சுப் பதவியைப் பாரமெடுத்து தனது மண்ணின் பிரச்சினையை உடனடியாகத் தீர்த்து வைத்து, தான் ஒரு சொல் வீரனன்றி #செயல்_வீரன் என்பதனை ஹரீஸ் எம்பி நிரூபிக்க வேண்டும்!

@ D N A

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top