மட்டக்களப்பில் பொலிஸார் மேற்கொண்ட
தடியடிப்பிரயோகம் காரணமாக நால்வர் படுகாயம்

மட்டக்களப்பு - கல்லடி பாலத்தினை மறித்து போராட்டம் நடாத்தியவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல் மற்றும் தடியடிப்பிரயோகம் மேற்கொண்டதன் காரணமாக நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு, கல்வியங்காடு இந்துமயானத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் உடற்பாகங்களை புதைத்துள்ளமையின் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மட்டக்களப்புதிருமலை வீதியினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து ஊர்வலமாக கல்லடி பாலம் வரையில் சென்று அங்கு கல்லடி பாலத்தினை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லடி பாலத்தினை சுற்றி பொலிஸார் மற்றும் கலகமடக்கும் பொலிஸார்,இராணுவத்தினர் போன்றோர் குவிக்கப்பட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு - கல்லடி பாலத்தினை மறித்து போராட்டம் நடாத்தியவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மற்றும் தடியடிப்பிரயோகம் செய்யப்பட்டு போராட்டம் கலைக்கப்பட்டுள்ளது.
  

குறித்த தாக்குதல்கள் காரணமாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான மனோகர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் கள்ளியங்காடு இந்து மயானத்தில் வேறு மதத்தினை சேர்ந்த ஒருவரின் உடற்பாகங்களை புதைத்து தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் குறித்த உடற்பாகங்களை அங்கிருந்து அகற்றும் வரைக்கும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top