அம்பாறை மாவட்டத்தில் 14 தமிழ் கிராமங்கள்
காணாமல் போயுள்ளதாம்
அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின்
தலைவர் எஸ். லோகநாதன் கூறுகின்றார்
அம்பாறை மாவட்டத்தில் 14 தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளது, இவ்வாறான நிலையில் இரா.சம்பந்தனையோ, சேனாதிராஜாவையோ அரசியல் ரீதியாக இனியும் நம்பப்போவதில்லை என அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் நிறைவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் 14 தமிழ் கிராமங்கள் இன்று காணாமல் போயுள்ளது. இவ்வாறான விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டும் காணாமலும் உள்ளது.
இவ்வாறு பல சந்தர்ப்பங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறையாக கையாளவில்லை. பிரதேச சபை தரம் உயர்த்துதலிலும் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர்.
அவர்களை நாங்கள் தொடர்புகொண்டால் இப்போது பேச முடியாது, நாங்கள் பிசி என்கின்றார்கள். இன்றைய நிகழ்விற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை அழைத்திருந்தேன். ஆனால் அவர் வருகை தரவில்லை. இனியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பவோ, சம்பந்தன், சேனாதிராஜா ஆகியோரின் அரசியலை நம்பவோ போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபை தேர்தலின்போது மிகுந்த கடினங்களிற்கு மத்தியில் நாம் மாகாண சபைக்காக உழைத்தோம். ஆனால் மாகாண சபையால் எதையும் செய்ய முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார். நடைபெறவுள்ள தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கே நாம் ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment