கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து
கட்டுரை எழுதிய மாணவி
  
ஜப்பானில் கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவிக்கு பேராசிரியர் முதல் மதிப்பெண் வழங்கினார்.

ஜப்பானில் உள்ள மீ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு வரலாற்று பட்டப்படிப்பு படித்து வருபவர் ஹாகா (வயது 19). இந்த பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றும் யூஜி யாமடா, நிஞ்சா வரலாறு குறித்து கட்டுரை எழுதி வரவேண்டும் என்றும், அதிக கற்பனை திறனுடன் கூடிய கட்டுரைக்கே அதிக மதிப்பெண் என்றும் கூறினார்.

சிறுவயது முதலே நிஞ்சா வரலாற்றில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி ஹாகா, அபுரிதசி என்ற பழங்கால நுட்பத்தை பயன்படுத்தி கட்டுரை எழுத திட்டமிட்டார். இதற்காக சோயாபீன்ஸை ஊறவைத்து, அதை இடித்து, துணியில் பிழிந்து சாறு எடுத்து, நீருடன் கலக்கி சரியான பதம் கிடைக்க 2 மணி நேரம் காத்திருத்து கண்ணுக்கு தெரியாத மையை தயாரித்தார்.

பின்னர் அதனை கொண்டு மெல்லிய தூரிகையால் வெள்ளை காகிதத்தில் தனது கட்டுரையை எழுதினார். ஈரம் காய்ந்ததும் அந்த காகிதத்தில் எழுத்துக்கள் மறைந்துவிட்டன. அதனை தொடர்ந்து, கட்டுரையை வெற்று காகிதமாக பேராசிரியரிடம் சமர்ப்பித்த அவர், அதில் ஒரு ஓரத்தில் காகிதத்தை சூடு செய்யவும் என சாதாரண பேனாவில் எழுதி வைத்திருந்தார்.

அதன்படி பேராசிரியர் கியாஸ் அடுப்பை பற்றவைத்து காகிதத்தை சூடாக்கியபோது, அதில் எழுத்துக்கள் தோன்றியதை கண்டு ஆச்சரியமடைந்தார். அதன் பின்னர் கற்பனை திறனால் தன்னை ஆச்சரியமடைய வைத்த ஹாகாவின் கட்டுரைக்கு பேராசிரியர் முதல் மதிப்பெண் வழங்கினார்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top