இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு
முதன்முதலில் சேர்த்துக்கொள்ளப்பட்ட
நான்கு பெண்களில் ஒருவர்
லய்லா பக்கீர் எனப்படும் முஸ்லிம் பெண்



அண்மையில் தோழர் ராபி ஒரு பதிவை இட்டிருந்தார். இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு முதன்முதலில் சேர்த்துக்கொள்ளப்பட்ட நான்கு பெண்களில் ஒருவர் லய்லா பக்கீர் எனப்படும் முஸ்லிம் பெண். கவனத்துக்குட்படுத்த வேண்டியதும் முக்கியமான வியமுமாகும் இது. இப்பெண் சிறந்த சைக்கிள் ஓட்டுனராகவும் கூடைப்பந்து தடகள விளையாட்டில் ஆர்வமுள்ளவராக இருநதுள்ளார்.1952 ல் சேவையில் இணைந்துகொண்ட இவருக்கு பொலிஸ் வரிசை எண்ணாக இரண்டு கிடைத்துள்ளது.

இப்போதுள்ள இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள் அப்போது இருந்திருந்தால் லய்லா பக்கீருக்கு வேசைப்பட்டமும் கொடுத்து இடதுகையில் பட்டோலையையும் கொடுத்திருப்பார்கள்.

இன்று 90 வயதிலும் ஆரோக்கியமாய் வாழும் இப்பெண்ணை அடையாளப்படுத்திய சகோதர சிங்கள ஊடகவியலாளருக்கும் தமிழில் மொழிபெயர்த்த தோழர் ராபிக்கும் மிகுந்த நன்றிகள்.

வாழ்த்துக்கள் லய்லா பக்கீர்

பதிவு.

அற்புதமான வரலாற்றினை தெரிந்து கொண்டு, அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

நேற்றும் இன்றும் நண்பர் Mohamed Sabry உம் நானும் பல்வேறு விடயங்களுக்காக கொழும்பு வந்திருந்தோம். ஆகாரம் மற்றும் தங்குமிடத்திற்காக எனது சகோதரியின் வீடு சந்தர்ப்பத்தைத்தந்தது. நேற்றிரவு சாப்பாட்டிற்காக விரிக்கப்பட்ட ஆங்கிலப் பத்திரிகைத்துண்டில் இருந்த ஓர் ஆக்கம் இடையிலே கிழிக்கப்பட்டு சாப்பிட்ட பின்னர் வாசித்துக் கொண்டதையே உங்களுடன் மொழியாக்கமாகப் பகிர்கிறேன்...

முதன் முதலில் எமது நாட்டில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டவர்களில் முதலானவராக இருப்பது முஸ்லிம் பெண்மணியே..

#இன்று பாலின சமத்துவம் மற்றும் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு என்பவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இலங்கை பொலிஸ் சேவையின் வரலாறு 1886 ஆம் ஆண்டுக்கு முந்தியது. அங்கு அதிகாரிகள் கண்ணியத்துடனும் நல்லொழுக்கத்துடனும் பணியாற்றியுள்ளனர்.

முதல் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களில் ஒருவர் உயிருடன் இருப்பதை நான் அறிந்தேன். இலங்கை பொலிஸ் துறைக்கு முதல் தொகுதியில் நியமனம் பெற்ற பெண்கள் பற்றிய விடயத்தை மூத்த டி.ஐ.ஜி எம்.ஆர். லத்தீப் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் டி. அஸென் மூலம் தகவல்களைப்பெற்று அந்த பெண்மணியின் முகவரியை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த பெண்ணின் பெயர் #லய்லா பக்கீர். தற்போது கிட்டத்தட்ட 90 வயது.

ஆயினும் லய்லா முழுக்க முழுக்க கவனம் செலுத்தக்கூடியவராகவும் சோபாவில் புத்திசாலித்தனமாக அமர்ந்திருக்கிறவராகவும் இன்றும் காணப்படுகிறார். லய்லா விளக்கினார், “நான் என் குடும்பத்தில் ஒரே குழந்தை". நாங்கள் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனது மறைந்த தந்தை சம்சுதீன் பக்கீர் Chief Inspector of Police ஆக இருந்தார். நான் பெப்ரவரி 22ம் திகதி 1930 ஆண்டு அன்று மாத்தறை மாவட்டத்தில் வெலிகமவில் பிறந்தேன். எங்களின் பெரும்பாலான காலங்கள் கொழும்பிலேயே கழிந்தது. அந்த காலகட்டத்தில் கலவன் பாடசாலையாக இருந்த கொழும்பின் ஆனந்தா கல்லூரியில் படித்தேன். எனது பள்ளி நாட்களில் நான் கூடைப்பந்து, தடகள விளையாட்டுக்களில் ஈடுபட்டேன்.

நான் ஒரு சம்பியன் சைக்கிள் ஓட்டுநராக இருந்தேன். என் தந்தை வீட்டில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார். நாங்கள் படிக்க விரும்பினோம். பின்னர், நான் ஒரு ஆசிரியராக வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினர். பள்ளி முடிந்ததும் எனது அடிப்படை ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து மாத்தறையில் ஆசிரியராக கடமையாற்றினேன்.

அங்கு மனையியல்(home science)மற்றும் ஆங்கில மொழி கற்பித்தேன். இங்கே நான் ஹேமா குணவர்தன என்ற பெண்ணுடன் நட்பு கொண்டிருந்தேன். ஒரு நாள், ஹேமா எனக்கு ஒரு செய்தித்தாள் விளம்பரத்தைக் காட்டினார், பெண்கள் காவல்துறையில் சேர அழைப்பு விடுத்தனர்.(1952 ம் ஆண்டு முதல் இலங்கை பொலிஸில் பெண்கள் சேர்க்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.)

நாங்கள் முதலில் தயங்கினோம், ஆனால் பின்னர் நாங்கள் விண்ணப்பித்து நேர்காணலுக்கு அழைக்கப்பட்டோம். டிப்போ பொலிஸுக்கு (present day Field Force Headquarters in Colombo 5) சென்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஏராளமான இளம்பெண்கள் இருந்தனர். அப்போது எனக்கு 23 வயது. நேர்காணல் அதிகாரி #ஸ்கார்னிவெல் என்ற பொலிஸ் அத்தியட்சகர். பொலிஸ் கடமையின் சவால்களை எதிர்கொள்ள நான் தயாரா என்று அவர் என்னிடம் கேட்டார். நான் பதிலளித்தேன். என் தந்தை ஒரு பொலிஸகாரர் என்றும், காவல்துறையின் கடமைகள் எனக்கு கொஞ்சம் தெரியும் என்றும் சொன்னேன். நானும் ஹேமாவும் 1953 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டோம். பெண்களைச் சேர்ப்பது என்ற தொலைநோக்கு, அதிகாரியான மறைந்த IGP ரிச்சர்ட் அலுவிஹாரேவின் யோசனையாகும். நான்கு பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது நானும் ஏனைய ஹேமா குணவர்தன, ஜெனிதா பெரேரா, லானெரோல்

திருமதி லய்லா பக்கீரிடம் அவரது பயிற்சியை நினைவுபடுத்த முடியுமா என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். ஆம் நான் அதை எப்படி மறக்க முடியும்? நாங்கள் நான்கு பேருக்கும் ஆறு மாதங்கள் டிப்போ பொலிஸில் பயிற்சி பெற்றோம். களுத்துறை பொலீஸ் பயிற்சி கல்லூரி அப்போது அமைக்கப்படவில்லை. அணிவகுப்பு பயிற்சிகளுடன் ஆயுத பயிற்சி, முதலுதவி, தட்டச்சுப்பொறியைப் பயன்படுத்துதல், பொலிஸ் விதிமுறைகள் மற்றும் நிர்வாகத்தில் எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒரு துப்பாக்கியை சுட எங்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. அப்போது தானியங்கி ஆயுதங்கள் எதுவும் இல்லை. எங்கள் பயிற்சிக்குப் பிறகு எனக்கு பொலிஸ் வரிசை எண் 02 வழங்கப்பட்டது. எனது ஒரே வருத்தம் என்னவென்றால், நான் பொலிஸ் சீருடையை அணிவதைக் காண என் அன்பான தந்தை உயிருடன் இல்லை.

எனது 27 வருட சேவையின் போது நான் பின்வரும் நிலையங்களான மருதானை, கோட்டை, நாரஹன்பிட்ட, வெலிகட மற்றும் வெள்ளவத்தை ஆகிய இடங்களில் பணியாற்றினேன். கைரேகைகள் கிளையிலும் நான் இணைக்கப்பட்டிருந்தேன்.
அது இன்று குற்றவியல் பதிவுகள் பிரிவாக வளர்ந்துள்ளது.

அந்த நாட்களில் சில வன்முறைக் குற்றங்கள் அல்லது கொலைகள் இருந்தன. பெரும்பாலானவை குடும்பம் அல்லது நில தகராறுகள் தொடர்பான புகார்கள் ஒரு சில பிக் பாக்கெட்டுகள் சார்ந்ததாக இருந்தன. மாலை ரோந்து பயணத்தில் நாங்கள் ஒரு சில விபச்சாரிகளை விரட்டுவோம். சில நாட்களில் பெண்கள் பள்ளிகளுக்கு அருகில் போக்குவரத்து கடமைக்கு அனுப்பப்பட்டோம்.

இன்று அதிக போக்குவரத்தும், ஒழுக்கம் இல்லாத ஓட்டுநர்களும் உள்ளனர். லய்லா தண்ணீரை அருந்திவிட்டு தொடர்ந்து பேசுகிறார்.. அவர் கண்கள் உற்சாகத்தால் நிரம்பின. மறக்க முடியாத சம்பவமாக இதனை கூறுகிறார்..

"ஒரு நாள் நானும் மற்றொரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரும் கேரி கல்லூரிக்கு அடுத்துள்ள கொழும்பில் அமைந்துள்ள சவக்கிடங்கைக் காக்க OIC பணித்தார். அது ஒரு இரவு கண்காணிப்பு. நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால் நான் ஒரு #குர்ஆனை என் சட்டைப் பையில் எடுத்துக்கொண்டேன். நாங்கள் இருவரும் சவக்கிடங்கிற்கு வெளியே அமர்ந்து இரவு முழுவதும் பேசினோம். வீதிகள் அமைதியாகவும் இருட்டாகவும் இருந்தன. அதிர்ஷ்டவசமாக நாங்கள் எந்த பேய்களையும் காணவில்லை".

முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபில் லய்லா மேலும் கூறுகையில், “இன்று கொழும்பில் விடயங்கள் மிகப் பெரிய அளவில் மாறிவிட்டன. காவல் துறை வளர்ச்சியடைந்துள்ளது, எவ்வளவோ தொழில்நுட்பமும் பெண் அணிகளும் அதிகரித்துள்ளன ”.

லய்லா பக்கீர் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். அவர் ஓய்வில் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். இந்த தாழ்மையான சட்ட அமுலாக்கப் பெண் வாழ்க்கையின் வெற்றிகளையும் விசித்திரங்களையும் கண்டிருக்கிறார். புறப்படும் நேரம் இது. இந்த அற்புதமான சந்திப்பு நிச்சயமாக என் எழுத்து வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத நாள்..

இவ்வாறு இந்த ஆக்கத்தை ஆங்கிலத்தில் Dishan Joseph sunday observer இல் தொகுத்துத் தந்துள்ளார்..

நன்றி..
Jemsith Raafi

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top