சஜித் அவர்களே!
அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு
"சும்மா" ஆதரவு வழங்கவில்லை


றவூப் ஹக்கீம் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தலைவர் அஷ்ரஃப் தங்களது தந்தைக்கு ஆதரவு வழங்கியது போன்று றவூப் ஹக்கீம் உங்களுக்கு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாகக் கூறியுள்ளீர்கள்.

ஹக்கீம் உங்களது கட்சிக்குள் நடந்தேறிய வேட்பாளர் போட்டியில் ரணிலுக்கு எதிராக உங்களோடு தோழுரசி நின்றதுபோல் அன்று அப்பர் பிரேமதாசா கட்சிக்குள் எதிர் நோக்கிய சவால்களின் போது ஜேயாருக்கு எதிராக அஷ்ரஃப், தங்களது அப்பாவோடு உடன்பட்டு நிற்கவில்லையே.

அப்பரின் ஐக்கிய தேசியக் கட்சியை காலாகாலமாக எதிர்த்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும், பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் தன்னையும் தனது சமூகத்தையும் அடையாளப்படுத்தியவர் அஷ்ரஃப் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் அக்காலத்தில் நீங்கள் சிறுபிள்ளையாயிருந்தீர்கள்.

மேலும், உங்கள் அப்பரின் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையை நாடாளுமன்றில் பெற்றிருந்த வாய்ப்பை பயன்படுத்தி அன்றிருந்த தேர்தல் முறையில் வெட்டுப்புள்ளியில் குறைப்பைச் செய்வித்து பெரிய சாதனையை நிகழ்த்திய பின்னரே அஷ்ரஃப் அப்பாவுக்கு ஆதரவளித்தார்.முன்கூட்டிய நிபந்தனை வெற்றி பெற்றதன் அடிப்படையில் வந்த ஆதரவு அது.இவ்வாதரவு முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றில் பன்மையாக கால்பதிக்க வாய்ப்பளித்தது. இவ்வாறாகவா இப்போது ஹக்கீம் அவர்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறார்?

கல்முனை மன்சூர் மற்றும் சம்மாந்துறை B.A மஜீத் ஆகியோரை 1989 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிக்கு நிறுத்துவதில்லை என்ற உங்கள் தந்தை அஷ்ரஃபுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு, அவ்விருவரையும் தேசியப்பட்டியலில் உறுப்பினராக்கியது மட்டுமல்லாமல் அமைச்சர்களாகவும் ஆக்கி அஷ்ரஃபுக்கு ஆணி அடித்தார் என்பதையும் மறப்பதற்கில்லை.

அஷ்ரஃப், சிறீமாவோ பண்டாரநாயக்காவுடன் எழுத்து மூல உடன்படிக்கை செய்வதில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஜூனியர் பொன்னம்பலத்துடன் ஏற்பட்ட தகராறினால்தான் அங்கிருந்து வெளியேறி உங்களது அப்பாவுக்கு "மறைமுக" ஆதரவை தந்தார் என்பதையும் இங்கு உங்களுக்கு சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.

1989 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் நான் 13 உறுப்பினர்களோடு ஈரோஸ் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினரானேன்.நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் முடித்து சிலநாட்கள் கழிந்த பின்னர் தோழர் பாலகுமாரன் தலைமையில் மரியாதை நிமித்தம் ஜனாதிபதி என்ற வகையில் உங்கள் தந்தையாரை உங்களது கொழும்பு வாழைத்தோட்ட இல்லத்தில் சந்தித்தோம். நாங்கள் ஒவ்வொருவராக ஜனாதிபதி பிரேமதாசவுடன் பெயர் கூறி கை குலுக்கும் வேளை "நான் பஷீர்" என்று சொன்னவுடன் என்னை முஸ்லிம் என்று அடையாளம் கண்ட உங்கள் அப்பா நான் ஜனாதிபதியானது அஷ்ரஃப் ஆதரவளித்ததனால்தான், நான் முஸ்லிம்களுக்கு கடமைப்பட்டுள்ளேன் என்று எனது கைகளை இறுகப் பற்றியவாறு கூறினார்.அவர் அன்றைய ஜனாதிபதித் தேர்தலில் 50% + 30000 வாக்குகளையே பெற்றிருந்தார்.அன்று அஷ்ரஃபின் ஆதரவு கிடைத்திராவிட்டால் உங்கள் அப்பர் அம்போவாகியிருப்பார்.

ஆனாலும்; சஜீத் அவர்களே! உங்கள் அப்பா ஜனாதிபதி பிரேமதாச எனது ஏறாவூர் முஸ்லிம் விவசாயிகள் பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்மன்கடுவையில் அக்காலத்தில் செய்து வந்த புகையிலை பணப்பயிர் வயல்களை, அந்த பகுதி தலைமை பிக்குவின் கதையைக் கேட்டு நெருப்பு வைத்து கொழுத்தி எனது ஊராரை துரத்தியடித்தார் என்பதையும் தங்களுக்கு சொல்லி வைக்கிறேன்.
Basheer Segu Dawood

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top