சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை தொடர்பில் பைசால் காசிமை எம்.பியை 

விவாதத்திற்கு அழைக்கிறார் முன்னாள் மேயர் சிராஸ்!

(அகமட் எஸ்.முகைடீன்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரரளுமன்ற உறுப்பனர் பைசால் காசிமை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் மீராசஹிப் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சாய்ந்தமருது மக்களின் 25 வருடங்களுக்கு மேலான உள்ளூராட்சி மன்றத் தாகத்தின் தீர்வுக்கான கனப்பொழுதுகள் கணிந்து, உத்தியோகபூர்வ அறிவிப்புக்கான நிமிடங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நீலகண்டனாய் நச்சுக் கருத்துக்களை தெரிவிப்பதிலிருந்தும், மக்கள் பிரதிநிதி என்ற தார்மீக பொறுப்பற்று நடந்து கொள்வதிலிருந்தும், தவிர்ந்து கொள்ள வேண்டும்.
அத்தோடு சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தின் தேவை தொடர்பிலான பகிங்கர விவாதத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமை நான் அழைக்கின்றேன். நாம் அரசோடு இருக்கும் வரையிலும், எமது பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கப்படுவது ஒரு போதும் நடைபெறாது. அதற்கு நாங்கள் ஒரு போதும் விடமாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், சாய்ந்தமருதைச் சேர்ந்த சிலர் அவரைச் சந்தித்த போதும், அண்மையில் மருதமுனை அல்-மனார் வித்தியாலத்தில் இடம்பெற்ற கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வுக்கு வருகை தந்து அதிபரின் அறையில் உரையாடிக் கொண்டிருந்த போதும் தெரிவித்தாக அறிய முடிகின்றது.
சாய்ந்தமருதின் வராலாறு 400 வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்ததாகும். இந்த பழமை வாய்ந்த பிரதேச வாழ் மக்களின் அரசில் அபிலாஷையாக, காலத்தின் தேவையாக, தனியான உள்ளூராட்சி மன்றம் தேவை என்கின்ற கோரிக்கையுடனான கனவு 25 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தது.
அந்த அபிலஷையை நோக்கிய நகர்வுகள் அவ்வப்போது எடுக்கப்பட்ட போதிலும் கானல் நீரானது. சாய்தமருது ஆரம்பத்தில் கல்முனை பிரதேச செயலகத்தின் ஒரு பிரிவாக இயங்கி வந்தது. எனினும் காலத்தின் தேவையால் 2001 பெப்ரவரி 4ஆம் திகதியிலிருந்து தனியான ஒரு பிரதேச செயலகமாக செயற்பட தொடங்கியது. இதன் மூலம் இப்பிரதேசத்தின் நிர்வாக ரீதியான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, இப்பிரதேச வாழ் மக்கள் தமது நிர்வாக ரீதியான தேவைகளை மிக இலகுவில் பெறக்கூடிய வாய்ப்பும் துரிதத் தன்மையும் ஏற்படுத்தப்பட்டது.
இலங்கையில் காணப்படுகின்ற சாய்ந்தமருது பிரதேச செயலகம் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் தனியான உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. சாய்ந்தமருதிற்கான பிரதேச செயலகம் அமைக்கப்பட்டு 13 வருடங்கள் கடந்த நிலையிலும் அதற்கான உள்ளூராட்சி மன்றம் அமையக்கப்படாமல் இருக்கின்றது.
இதனை அமைப்பதற்கான முயற்சிகள் கைகூடிவரும் இச்சந்தர்ப்பத்தில் குறித்த விடயத்திற்கு உதவி புரியாவிட்டாலும் உபத்திரவம் புரிய வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமை கேட்டுக்கொள்கின்றேன். சாய்ந்தமருது பிரதேச வாழ் மக்களின் அரசியல் அபிலாசையான தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை காலத்தின் தேவையாகும்.
காலத்துக்கு காலம் ஏற்பட்டு வருகின்ற சனத்தொகையின் அதிகரிப்பு தனியான உள்ளூராட்சி மன்றத்திற்கான தேவையினை உணர்த்தி நிற்கின்றது. 17 கிராம சேவை பிரிவுகளை உள்ளடக்கிய சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படுவது ஒரு நியாயமான செயற்பாடகும்.
எமது தேசிய காங்கிரஸி தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான .எல்.எம் அதாஉல்லாவினால் அவரவர் மண்ணை அவரவர் ஆழ்வதற்கு ஏதுவாக கல்முனை மாநகர பிரதேசத்தில் காணப்படுகின்ற சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் தமிழ் சகோதரர்களுக்கான புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படு வருகின்றன.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒட்டு மொத்த நிர்வாகமும் குவிந்து காணப்படுவதனால் வினைத்திறனற்ற செயல்பாட்டினை அவதானிக்க முடியும். அந்நிர்வாகம் பகுதிகாலாக பிரிக்கப்பட்டு செயல்படுகின்ற பட்சத்தில் வினைத்திறன் மிக்க ஒரு சேவையினை வழங்க வாய்ப்பு ஏற்படும். அந்தவகையில்தான் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூரட்சி மன்றக் கோரிக்கையும் அதற்கான நகர்வுகளும் காணப்படுகின்றன.
இதனைப் புரிந்து கொள்ளாத முட்டால்களாக ஒரு சிலர் காணப்படுகின்றனர். புதிய உள்ளூராட்ச்சி மன்றங்களின் உருவாக்கம் அதிகார பரம்பலை எற்படுத்துவதோடு, ஒரு பிரதேசத்தில் திரட்டப்படுகின்ற நிதியினை அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காக செலவிடக்கூடிய வாய்ப்பு, பிரதேச பாகுபாடு, அநீதி என்பவற்றிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு, தொழில்வாய்ப்பு போன்ற இன்னோரன்ன பல வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி சிறந்த வினைத்திறன் மிக்க சேவைகளை குறிப்பிட்ட பிரதேசத்திற்கு வழங்கக்கூடியதாக காணப்படும்.
சாய்தமருது மற்றும் மருதமுனை மக்களின் வாக்குகளினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை பெற்றுக்கொண்டு, அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிராக செயற்படுகின்றார்கள். இவர்கள் அடுத்த முறையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை பெறுவதற்கு இம்மக்ளின் வாக்குகள் தேவை என்பதனை மறந்து செயற்படுகின்றார்கள்.
இவ்வாறனவர்களுக்கு தேர்தல்களின்போது மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தேர்தல் காலங்களில் மட்டும் கரையோர மாவட்டம் தொடர்பில் வாய் கிழிய கூக்குரல் போடும் முஸ்லிம் காங்கிரஸ் பின்னர் அது தொடர்பில் மௌனம் காக்கிறது. பிச்சைக்காரனின் புண் போன்றது முஸ்லிம் காங்கிரஸுக்கு கரையோர மாவட்டம். இது போன்ற கபட நாடகங்களை மேற்கொள்பவர்கள் அல்ல நாங்கள்.
செய்யக் கூடியவைகளையே பேசுவோம், பேசுபவைகளையே செய்வோம் நாங்கள். கட்சி பேதங்களுக்கு அப்பால் சமூகம் சார்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். சமூக விரோத செயல்களுக்கு தடைக்கல்லாக அமையாமல், இவர்கள் சமூக நலன்களுக்கு தடைக்கல்லாக இருப்போம் என்று விறுமாப்புடன் கர்ச்சிப்பது வினோதமாக இருக்கின்றது.
சாய்ந்தமருதின் 35 வருட கால அரசியல் வரலாற்றில் கிடைத்த மேயர் முதல்வர் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸினால் பிடுங்கி எடுக்கப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் மக்களில் அக்கறை உள்ளவர்கள்போல் பாசாங்கு செய்பவர்கள். நான் மாநகர மேயர் பதவியிலிருந்து விலகியதும் விருப்பு வாக்கு அடிப்படையில் 12ஆவது ஸ்தானத்தில் இருந்த உதுமாலெப்பை தௌபீக்கிற்கு அவ்வுறுப்புருமை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் கட்சிக்கு இருக்கின்ற அதிகாரத்தை வைத்து 15ஆவது இடத்தில் இருந்தவருக்கு மாநகர பிரதி மேயர் பதவி வழங்கப்பட்டது. மக்கள் விரும்பமே அரசியல்வாதிகளின் விருப்பமாக அமைய வேண்டும். நாங்கள் அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என நினைக்கின்றோம். ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்கின்றோம்.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரங்களை தான் தோன்றித் தனமாக பிடுங்கு எடுக்கிறது. சாய்ந்தமருதிற்கான உள்ளூராட்சி மன்றத்தின் தேவை காலத்தின் தேவை. அது சாய்ந்தமருது பிரதேச வாழ் மக்களின் அரசியல் அபிலாஷை. இதை ஒருபோதும் மழுங்கடிக்க முடியாது. அதற்கு யாரும் முயற்சிக்கவும் வேண்டாம். இதற்கு தடைகளை ஏற்படுத்துபவர்களை மக்கள் இனம் கண்டு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top