மீண்டும் கிளம்பியுள்ள கரையோர மாவட்டப் பூதம்
இது குறித்த ஓர் பார்வை


முஸ்லிம் காங்கிரசிற்கு இற்றை வரை மர்ஹூம் அஷ்ரப் காலம் தொட்டு பேசப்பட்டு வருகின்ற கரையோர மாவட்டக் கோரிக்கையை பெற இயலாமலேயே  உள்ளது.அஷ்ரப் காலத்தில் மரமோ கரையோர மாவட்டக் கனியை சுவைக்கும் காலம் நெருங்கிய வேளை மரணம் மர்ஹூம் அஸ்ரபை ஆட்கொண்டிருந்தது. மர்ஹூம் அஸ்ரபின் மரணத்தோடு அவர் உருவாக்கிய மரமும் பொலிவிழந்து நலிவுற்று இலைகள் கொட்டிசாகப் போகிறேன் பாயைப் போடுஎன்ற நிலைமையிலேயே பயணித்தது.ஆளும் கட்சியின் அபரிதமான பலத்தின் முன் எதிர்க் கட்சியில் அமர்ந்து கொண்ட மு.கா இனால் எதுவுமே சாதிக்க இயலாது போனது மாத்திரமின்றி மேலும் பல புறக்கனிப்புக்களையே சந்திக்கலாயின.
இவ்வாறு பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரசிற்கு 2012 ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மீண்டும் தங்கள் பலத்தை இலங்கை  மக்களிற்கு வெளிக்காட்ட சிறந்த அரங்காய் மாறியது.இத் தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாய் மிளிர்ந்த மு.கா மிகப் பெரிய பேரம் பேசல் சக்தியை தக்க வைத்துக் கொண்டது.அத் தேர்தலின் பின்னர் மு.கா யாருடன் இணைவது?என்பதில் மிகப் பெரிய சவாலை எதிர் கொண்டது.இறுதியில் அரச பேரூந்தில் தாங்கள் பயணிப்பதன் மூலமே முஸ்லிம்களை பெரும்பான்மையாய்க் கொண்ட கரையோர மாவட்டம் போன்ற முஸ்லிம்களினது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற காரணத்தினால்  அரசுடன் இணைந்ததாய் மக்களிடம் கூறியும் வந்தது.மு.கா இனுடைய செயலாளர் ஹசனலி அன்று தொடக்கம் இன்று வரை தாங்கள் அரசுடன் இணைந்து ஆட்சியமைக்க  செய்து கொண்ட  ஒப்பந்தத்தின் பிரகாரம் கரையோர மாவட்டத்தை அரசு தர இணங்கியுள்ளதாக அடிக்கடி கூறியும் வருகிறார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு கரையோர மாவட்டத்தை அமைத்து தர இணங்கியுள்ளதாக மு.கா கூறி வந்த போதிலும் இது வரை வாய் மூடி மௌனம் காத்த அரசு தனது மௌன விரதத்தை வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது முஸ்லிம்களிற்கு ஓரளவு சார்புப் போக்கைக் கடைப்பிடித்து முஸ்லிம்கள் மனதினில் இடம் பிடித்துள்ள  இலங்கைப் பிரதமர் டி.பி ஜெயரத்னாவைக் கொண்டு கலைத்துள்ளது.கரையோர மாவட்டம் சம்பந்தமான ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப் படவில்லை அது பிரிவினைக்கு வித்திடும் என தெளிவாக மு.கா இனருக்கு அரசிடமிருந்து ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது.அப்படியானால் மு.கா ஒப்பந்தம் செய்ததாக கூறியது உண்மையா?அல்லது,அரசு நம்பிக்கைக்கு மாற்றம் செய்கிறதா? இச் செய்தி மு.கா மக்களிடம் கூறி வந்த கரையோர மாவட்ட ஒப்பந்த ஜாலத்தை தவிடு பொடியாக்கியுள்ளது.கரையோர மாவட்டம் பிரிவினைக்கு வழி வகுக்கும் பிரபாகரன் கோரியது போன்று அமைச்சர் ஹக்கீம் கோருகிறார் என பாராளுமன்றத்தில் குரல்கள் ஒலிக்கப்பட்ட போதும் இது பற்றிய தெளிவை சம்பந்தப் பட்டவர்களுக்கு வழங்க,தங்கள் பக்க நியாயத்தை எடுத்துரைக்க மு.கா அனைவரும் அன்று தவறி இருந்தனர்.இது மு.கா இனர் மீது அரசின் திடீர் தாக்குதல் என்பதால் அவ்விடத்தில் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல்  முஸ்லிம் காங்கிரஸினர் பின் தள்ளப் பட்டனர் என்றே கூற வேண்டும்.மீண்டும் ஓர் அஷ்ரப் எப்போது வருவாரோ?என்று முஸ்லிம்கள் ஆதங்கபட்டு இருக்கையில் பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதம் நடைபெற்ற போது கரையோர மாவட்டம் இனவாத கோரிக்கை அல்ல என்பதை அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளும் விதமாய் ஹரீஸ் எம்.பி அவர்கள் பாராளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவமிக்க உரையை ஆற்றி அரசின் நிலைப் பாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.பேச வேண்டிய இடத்தில் தாங்கள் பேசத் தவறமாட்டோம் என்பதை ஒரு கனம் நிரூபணமும் செய்துள்ள இவர்  ”இக் கோரிக்கை முஸ்லிம்கள் கேட்டதல்ல 1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவினால் நியமிக்கப்பட்ட மொரகொட ஆணைக்குழுவின் சிபாரிசுஎன்ற விடயம் பலரினையும் இது பற்றி சிந்திக் தூண்டியுள்ளது.
யாருக்கு? எப்படியோ? அரசுடன் கரையோர மாவட்டத்தை பெற்றுக் கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளோம்.செய்துள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசு அதனைத் தர வேண்டும் என கண்டிப்பாய் கூறி வந்த மு.கா இனுடைய செயலாளரின் அதிரடி அறிக்கைக்கு இது மேலும் உரமூட்டப் போகிறது.கரையோரப் பூதம் கிளம்பி இலங்கை மு.கா அரசியலை உலுக்குகிறான்.தலைவரோ தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாதது போன்று இருப்பதன் மர்மமும் புரிய வில்லை.எது எவ்வாறு இருப்பினும் இதனோடு முஸ்லிம்களின் கரையோர மாவட்டக் கனவு பலிக்குமா?இல்லையா?என்பதற்கானதோர் தெளிவான பதில் கிடைக்கப் போகிறது.கிளம்பியிருக்கும் பூதம் அலாவுதீனின் அற்புத விளக்கிளிருந்து கரையோர மாவட்டத்தை முஸ்லிம்களிற்கு  வழங்கவும் தோன்றி இருக்கலாம்.பதிலுக்காய் காலம் கனியும் வரை காத்தே நின்றாக வேண்டும்.
ஆகஸ்ட் 3ம் திகதி மு.கா இனுடைய தவிசாளர் அமைச்சர் பசீர் சேகு தாவூத் தன்னுடையசோர்விலாச் சொல்புத்தக வெளியீட்டு நிகழ்வில்கரையோர மாவட்டம் முஸ்லிம்களின் தேசிய பிரச்சனைக்குத் தீர்வல்லஎன்று கூறியதற்கே அம்பாறை மாவட்ட மு.கா முக்கியஸ்தர்கள் பலரும் அமைச்சர் பசீர் சேகு தாவூதிற்கு தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.அட்டாளைச்சேனை பிரதேச சபையில் அமைச்சருக்கு எதிராக கண்டனப் பிரேரணையும் கொண்டு வரப் பட்டது.நிலைமை இவ்வாறிருக்க இவ்வளவு நாளும் இது விடயத்தில் மௌனம் காத்த அரசு முஸ்லிம்கள் நிச்சயம் எதிர்ப்பார்கள் என அமைச்சர் பசீர் சேகு தாவூதின் கூற்றின் எதிரொலி இருந்து நன்கு அறிந்தும் ஏன் தனது மௌனத்தை  திடீர் எனக் கலைத்துள்ளது?என்பது சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மு.கா யாரை ஆதரிக்கப் போகிறது?என்பது இலங்கை வாழ் பெரும்பான்மை இன மக்கள் உட்பட அனைவரினதும் வாய்களில் அடி பட்டுக் கொண்டிருக்கும் முக்கியதோர் பேசு பொருளாகும்.மு. ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தாருஸ்ஸலாமில் மு.கா இனது உயர்பீடம் கூட்டப் பட்ட போது முடிவுகள் ஏதும் எட்டப் படாத நிலையில் மீண்டும் அம்பாறை மாவட்ட மு.கா மத்திய குழுக் கூட்டம் நவம்பர் 2 ம் திகதி அட்டாளைச்சேனையில் கூட்டப்பட்டது.இக் கூட்டத்தில் அரசிற்கு எதிரான கருத்துக்களே மு.கா முக்கியஸ்தர்களிடமிருந்து  அதிகம் வந்ததாகவும் கரையோர மாவட்டம் தொடர்பாகவும் அதிகம் பேசப்பட்டதாகவும் தகவல் கசிந்திருந்தன.இச் செய்திகளினை உறுதிப் படுத்தும் வகையில் மு.கா செயலாளர் ஹசனலியும் ..சு.கூ இன் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிற்கு இக் கூட்டம் நடாத்தப்பட்ட மறுநாள்  3 ம் திகதியே கரையோர மாவட்டம் தொடர்பாக கடிதம் அனுப்பி இருந்தார்.இக் கடிதமே அக் கூட்டத்தில் கரையோர மாவட்டத்தினை அரசு தர வேண்டும் என்பதற்கு எந்தளவு மு.கா இனரால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கும் என்பதனை ஓரளவு யூகித்துக் கொள்ளலாம்.கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை மு.கா குழுத் தலைவருமான ஜெமீல் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக அரசு கரையோர மாவட்டத்தை தர வேண்டும் என்பதில் விடாப் பிடியாக உள்ளார்.
கரையோர மாவட்ட விடயத்தில் இனியும் அரசாங்கம் தங்களது நிலைப்பாட்டை மறைக்க இயலாத போதிலும் இது பற்றி இவ்வாறு பகிரங்கமாக வெளிப்படுத்தாது  மறைமுகமாக தீர்க்க முயற்சித்திருக்க வேண்டும்.இதுவே தற்போதைய நிலைமையில் முஸ்லிம்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்காது இருக்கும் வாக்கை ஓரளவு தக்க வைத்துக் கொள்ள அரசிற்கு பொருத்தமானதும்,எதிர்காலத்தில்  அரசுடனான  மு.கா இன் இணைந்த போக்கிற்கு  பச்சைக் கொடி காட்டும் சிறந்த சைகையும் கூட.அரசு பகிரங்கமாக கூறி இருப்பதானது  மு.கா ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு எதிரான செயற்படும் என்பதால் மு.கா இனது செல்வாக்கை இழக்கச் செய்யும் ஒரு யுத்தியாக கூட இருக்கலாம்.இது விடயத்தில் முஸ்லிம் மக்களின் தன் மீதான போக்கை அரசு கவனமாக கையாள நினைத்த போதிலும்  முடியாது மூக்குடைந்து விட்டது என்றே கூற வேண்டும்.
 மு.கா கோரும் கரையோர மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் சம்மாந்துறை,கல்முனை,பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளை உள்ளக்கிய ஒரு மாவட்டமாகும்.இது பொத்துவில் தொடக்கம் நாவிதன்வெளி வரையான  11 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியும் காணப்படும்.இவ்வாறு அமைக்கப் படும் பட்சத்தில் 2012 ம் ஆண்டின் புள்ளி விபரப்படி மொத்தம் 447509பேரும் முஸ்லிம்கள்  282159(63 வீதம்) சிங்களவர்கள்  51675(11.5) தமிழர்கள்  102228(22.8 வீதமும்) காணப்படுவர்.
முஸ்லிம்களை பெரும்பான்மையாய் கொண்ட கல்முனைக் கரையோர மாவட்டம் உருவாக்கப்படல்  வேண்டும் என்ற கொள்கைகள் முஸ்லிம்களிடத்தில் வலுக்க  மொழி ரீதியாக அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவிக்கும் துயர் குடியேற்ற ஆக்கிரமிப்பு,தினைக்களங்கள் மூலம் நடை பெறும் ஆக்கிரமிப்பு,அபிவிருத்தி விடயங்களில்  முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பு போன்ற பல்வேறு காரணிகளை கூறி வருகின்றனர்.இவற்றிக்கெல்லாம் சிறந்த தீர்வு கரையோர மாவட்டம் அமைக்கப் படுவதன் மூலம் கிடைத்து விடும் என முஸ்லிம்களும் நம்புகின்றனர்.
கரையோர மாவட்டம் அமைக்கப் படும் போது பல்கலைக்கழக மாவட்ட ரீதியான உள் வாங்கல்,மாவட்ட ரீதியான சலுகைகள் போன்றவற்றில் முஸ்லிம்கள் அதிகம் நலைந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.மாவட்டத்திற்கென ஒரு சலுகை வழங்கப்பட்டால் முஸ்லிம்களை  புறக்கணிக்க முடியாத நிலைமையும் விளைவாக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை.கரையோர மாவட்ட நிர்மானிப்பின் அவசியத்தை முஸ்லிம்கள் உணர்ந்தமைக்கான  காரணங்கள் பலவற்றிற்கு ஒரு நீதியான ஆட்சி நிலவும் போது தானாகவே தீர்வு கிடைக்கப் போகிறது.அன்று தொடக்கம் இன்று வரை அவ்வாறானதொரு ஆட்சியை முஸ்லிம்கள் சுவைக்க வில்லை என்றே கூற வேண்டும்.நிலை இவ்வாறிருக்க,இனி மேல் தான் தீர்வு  கிடைத்து விடப்போகிறதா?என நினைக்கையில்  இக் கோரிக்கையின் அவசியத்தை நாம் உணரத்தான் செய்கிறோம்.
எனினும்,இக் கரையோர மாவட்டத்தை அமைப்பதால் இதற்கெல்லாம் தீர்வு கிடைத்து விடும் எனவும் முஸ்லிம்கள்  நினைக்கவும்  இயலாத நிலையே இன்று காணப்படுகிறது என்பதையும் ஒரு கனம்  முஸ்லிம்கள் நினைவிட் கொள்ள வேண்டும்.கரையோர மாவாட்ட அலுவலகம் வேண்டும் என்றால் கல்முனையில் அமையலாம் அனைத்தையும் அரசாங்கமே நிர்வகிக்கப் போகிறது நியமிக்கப் போகிறது.மு.கா இனது கோட்டையாய் திகழ்கின்ற முஸ்லிம்களை பெரும்பான்மையாய்க் கொண்ட கல்முனைப் பிரதேச செயலகத்திற்கு பேரினத்தைச் சேர்ந்த ஒருவரை அரசு பிரதேச செயலாளராக நியமித்து காட்டி இருப்பதே கரையோர மாவாட்டத்தின் மூலம் தீர்வை அடைய வேண்டுமாக இருந்தாலும்  முஸ்லிம்களிற்கு  சார்ப்பான அரசு அமைந்தால் தான் என்பதை தெளிவாக சுட்டி நிற்கிறதல்லவா?இது இவ்வாறிருக்க இதனை பிரபாகரன் கோரியது போன்று என வர்ணித்திருப்பது எங்கனம் நியாயமாகப் போகிறது?
 இது முஸ்லிம்களை ஓரிடத்தில் ஒன்று கூட்டி பலமிக்க அரசியல் நீரோட்டத்தில் நீந்தி கரையேற வழி காட்டிய  மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அப்போதைய அரசிடத்தில் வேண்டி நின்ற ஒரு கோரிக்கையாதலால் சரி பிழை பாராது கரையோர மாவட்டம் தங்களுக்கான தீர்வென முஸ்லிம்கள் ஏற்று நிற்கின்றனர். கரையோர மாவட்டத்தை தர இயலாது என பிரதமர் கூறியவைகள் இன்று கரையோரக் கோரிக்கை வேண்டும் என எண்ணம் கொண்டுள்ள முஸ்லிம்களிடத்தில் அரசிற்கு மிகப் பெரிய எதிர்த் தாக்கம் செலுத்தாது எதிர்க் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தானும் கரையோர மாவட்டத்திற்கு எதிர்க் கருத்தைக் கூறி நீலமென்றாலும் பச்சை என்றாலும் ஒன்றே என்பதை அழகாக நிரூபித்து முஸ்லிம்கள் .தே. பக்கம் சாய்ந்தாலும் இதற்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பதை தேளிவாக்கியுள்ளார்.அரசியல் காய் நகர்த்தலுக்காகவாவது இது விடயத்தில் விஜயதாச ராஜபக்ச மௌனித்திருந்தால் மு. இற்கு ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் .தே. பக்கம் சார மிகப் பெரிய அழுத்தமாக இவ் விடயமே விஸ்வரூபம் எடுத்திருக்கும்.
எனினும்,முஸ்லிம்களினைத் தவிர யாரும் இக் கோரிக்கையினை ஏற்றதாக அறிய முடியவில்லை ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிசந்த ஸ்ரீ வர்ணசிங்க இதனை எதிர்த்து கருத்துத் தெரிவித்துள்ளார்.ஜே.வி.பி இனுடைய தலைவரே இக் கோரிக்கை பிரிவிவைவாதத்திற்கு வித்திடும் எனக் கூறியுள்ளார்.சரி இவர்களை எல்லாம் விடுவோம்,தமிழ் சிறு பான்மையினராவது சக சிறுபான்மையினரான முஸ்லிம்களிற்கு கை கொடுப்பார்களா?என்றால் கல்முனை மாநகர சபையில் கரையோர மாவட்ட அமைப்பிற்கு ஆதரவாக பிரேணனை சமர்ப்பிக்கப் பட்ட போது அதற்கு  .தே.கூ உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்து முதல் கரையோர மாவட்ட தாக்குதல் அம்பே அவர்களிடமிருந்து தான் வீசப் பட்டுள்ளது.அத்தோடு மாத்திரம் இதனை விட்டு விட வில்லை  ஆலையடி வேம்பு பிரதேச சபையிலும் இதனை எதிர்த்து பிரேரணை கொண்டு வந்து தங்கள் பகிரங்க எதிர்ப்பை காட்டி இருந்தனர்.காதி நீதிமன்றம் போன்றவற்றை வைத்தே முஸ்லிம் ஊர்களில் இஸ்லாமிய சரியா ஆட்சி நிலவுகிறது அது இது என கூக்குரல் இட்டு திரியும்  பொது பல சேன இது விடயத்தில் ஏனோ அமைதிகாக்கிறது?கொடுக்கட்டும் பார்போம் என்ற வீறாப்பா?அல்லது தாங்கள் விதைத்த துவேசத்தின் அறுவடை எவ்வாறு உள்ளது என்பது மௌனித்திருந்து  கணக்கிட முயற்சிக்கிறதா?
முஸ்லிம்கள் எதிர்ப்பார்கள் என நன்கு அறிந்தும் அரசு இதனைக் கூறியிருப்பதானது  மிகப் பெரிய காய் நகர்த்தல்கலோடு தான் அமைந்திருக்கும் என்றாலும் அரசு போட்ட கணக்கு பிழைத்து விட்டது என்றே கூறே வேண்டும்.அனைவரும் எதிர்ப்பார்கள்  நாமும் எதிர்ப்பதால் எதுவும் ஆகப் போவதில்லை என்பது தான் அரசின் கணக்கு.அரசின் கணக்கிற்கு  இணங்க அனைவரும் இக் கோரிக்கையை எதிர்த்த போதிலும் அரசுடன் பல்லைக் கடித்துக் கொண்டு மு.கா வால் பிடித்தலைவது இது போன்றவைகளை அடைவதற்கே என்பதை அரசு சிந்திக்க தவறி விட்டது.மு.கா இனுடைய செயலாளர்  ஹசனலி ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் தன் விரலை பொது வேட்பாளர் பக்கம்  திருப்பியுள்ளதாக  கொழும்பு வார நாளிதழ் வெளியிட்டுள்ளதாக கதைகளும் சிலுசிலுக்க ஆரம்பித்துள்ளன.இதனை மு.கா இனுடைய செயளாலர் ஹசனலி  மறுக்கின்ற போதிலும் இச் சந்தர்ப்பத்தை தங்களுக்கு சார்பாக பலரும் பயன்படுத்த விளைகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.இது பேரின மக்களை தங்கள் வசப்படுத்தும் சிறந்த யுத்தியும் கூட.
காதோடு காது வைத்தாய் முடிக்க வேண்டிய இத் தீர்வை பறை அடித்து இலங்கை நாட்டிற்கே தெரிவித்தமையும் இக் கோரிக்கை இனத் துவேசமாக மிகுந்ததாய்  பார்க்கப்பட ஒரு காரணம் எனலாம்.மறைந்த தலைவர் அஷ்ரப் இன் பாசறையில் தாங்களும் வளக்கப் பட்டவர்களே என பலரும் வெவ்வேறு கட்சிகளுக்கு தலைமை தாங்கிக் கொண்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது அஸ்ரபின் கனவான கரையோர மாவட்டத்தை மு.கா மாத்திரம் உயிர்ப்பிக்க சிரத்தை எடுத்திருப்பது  அஸ்ரபின் கனவுகளை நினைவாக்க முயற்சிக்கும் கட்சி மு.கா மாத்திரமே என்ற அந்தஸ்தையும் மு.கா இதனூடாக  பெறுகிறது.
துறையூர்.ஏ.கே.மிஸ்பாஹுல் ஹக்  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top