அமைச்சர் ஹக்கீமுடன் வாய்த்தர்க்கமா?
கல்முனை.முதல்வர் நிஸாம் காரியப்பர் மறுப்பறிக்கை!
கல்முனை கரையோர மாவட்டம் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீலுக்கு கிழக்கின் முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுங்கள் என்று எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் நான் வாய்த்தர்க்கப்பட்டதாக இணையத் தளம் ஒன்றில் வெளிவந்துள்ள செய்திக் கட்டுரை முற்றிலும் கற்பனையில் புனையப்பட்ட செய்தியாகும் என்று கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவிக்கின்றார்.
இந்த செய்திக் கட்டுரை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
“நடக்காத ஒரு விடயத்தை வேண்டுமென்றே கற்பனையில் வடிவமைத்து குறித்த இணையத் தளத்தில் வெளியிட்டிருப்பதன் மூலம் எனக்கும் சகோதரர் ஜெமீல் அவர்களுக்கும் களங்கம் ஏற்படுத்தப்பட்டிருப்பதையிட்டு எனது கவலையையும் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இச்செய்தியானது எம்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலரால் திட்டமிட்டு வழங்கப்பட்ட முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டு வேண்டுமென்றே எழுதப்பட்டிருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
இவ்வாறான ஒரு சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் செய்தியை வெளியிடுவதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் விளக்கம் கோரி- உண்மையை கண்டறிய முற்படாமல்- முற்று முழுதாக கற்பனையில் புனையப்பட்ட செய்திக் கட்டுரையை அப்படியே இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்திருப்பதானது ஊடக தர்மத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீவிரமாக கலந்தாலோசனைகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் கட்சிக்குள் குழப்பங்களையும் மக்கள் மத்தியில் வீண் சந்தேகங்களையும் ஏற்படுத்தி தமது இலக்கை அடைந்து கொள்வதற்கு இதன் மூலம் அவர்கள் முயற்சிக்கின்றனர். என்று கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான நிஸாம் காரியப்பர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment