வானொலி அறிவிப்பாளர் எஸ். ஜனூஸின்
‘குரலாகி கவிதை இறுவட்டு விழா

பிரபல வானொலி அறிவிப்பாளர் எஸ். ஜனூஸின்  ‘குரலாகி கவிதை இறுவட்டு விழா  நேற்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  
இவ் விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார். . மணிப்புலவர் மருதூர் . மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்டக் கரையோர அமைப்பாளருமான எம் அப்துல் மஜீத், நவமணி பிரதம ஆசிரியர் என்,எம்,அமீன் உட்பட பிரமுகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றும் போது  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்ததாவது,
எந்த முடிவை மேற்கொண்டாலும், எல்லோரும் ஒற்றுமையாக இருக்க முடியும் என்றால் அதில்தான் சமூகத்திற்கு நிம்மதியும், விமோசனமும் இருக்கும்  இருக்குமிடத்தில் இருந்தாலும் சரி, வேறெங்கும் போவதென்றாலும் சரி சேதாரம் குறைவானதாக அது நடைபெற வேண்டும்
இது ஒரு வித்தியாசமானதும், மிகவும் சூடானதுமான காலகட்டமாகும். இந்த கூட்டத்தில் அரசியல் பேசாமல் இலக்கியத்தை மட்டும் கதைத்து விட்டு சென்றுவிடுவேனோ என்று பலர் கவலைப்படக் கூடும்.
அந்த வகையில் அரசியலையும் பேசியாக வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிக்கு வந்துள்ள குதூகலத்தைப் பார்க்கின்ற பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.
சென்ற கிழமை ஏங்கிப் போய், ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த ஒரு சாராருக்கு இன்று ஏற்பட்டுள்ள குதூகலத்தைப் பார்த்தால் இது எவ்வாறான அரசியலென எண்ணத் தோன்றுகிறது.
உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கின்றது. இருக்கின்றோமோ என்ற விவஸ்தையே இல்லாமல் இருந்தவர்கள், போய் விடுவார்களோ என்ற பதட்டத்தை பார்க்கும் பொழுது அதிலுள்ள குதூகலம் சொல்லி மாளாது. இந்த குதூகலம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப் போகின்றது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
என்றாலும் இது வித்தியாசமான காலம். ஆனால் எதில் வெற்றியிருக்கின்றது என்று பார்த்தால், எங்கிருந்தாலும் சரி, இருக்குமிடத்தில் இருந்தாலும் சரி, வேறெங்கும் போவதென்றாலும் சரி சேதாரம் குறைவானதாக அது நடைபெற வேண்டும். இதில் உள்ள சவால் தான் தாரக மந்திரம். எனவே, அதைப் பற்றித்தான் நாங்கள் எல்லோரும் இப்பொழுது சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
களநிலவரத்தை நாங்கள் சரியாக புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இதைவிட கூடுதலாகப் பேசுவது ஆரோக்கியமானதல்ல.
இன்று எங்களது கட்சி முக்கியஸ்தர்கள் பலருடன் நான் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். ஜாதிக ஹெல உருமயவிடம் இருந்து நாங்கள் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். அவர்கள் எந்த முடிவை எடுத்த போதிலும், மேற்கொண்ட முடிவில் அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றேன்.
எந்த முடிவாக இருந்தாலும் சரி, எல்லோரும் ஒற்றுமையாக இருக்க முடியும் என்றால் அதில்தான் சமூகத்திற்கு நிம்மதியும், விமோசனமும் இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top