சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை பற்றிப் பேசுவதற்கு

முன்னாள் மேயர் சிராஸுக்கு எந்த அருகதையும் கிடையாது!

-பிரதேச இணைப்பாளர் அஸாம் அப்துல் அஸீஸ்



சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சி சபை பற்றிப் பேசுவதற்கு கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் மீராசாய்வுக்கு எந்த அருகதையும் கிடையாது என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பனர் பைசால் காசிம் அவர்களின் சாய்ந்தமருது பிரதேச இணைப்பாளர் அஸாம் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
இக்கோரிக்கையை வென்றெடுப்பதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட தீவிர முயற்சிகளை பலமாக எதிர்த்து முன்னின்றவரே இந்த சிராஸ் மீராசாய்வு. முடிந்தால் இது குறித்து தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சவால் விடுக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அஸாம் அப்துல் அஸீஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை அமைக்கப்படுவதை எமது பாராளுமன்ற உறுப்பனர் பைசால் காசிம் அவர்கள் எதிர்ப்பதாக தெரிவித்து சிராஸ் மீராசாய்வு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதுடன் இது தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஆனால் இக்கோரிக்கை தொடர்பில் எந்தவொரு இடத்திலும் பைசால் காசிம் எம்.பி. எதிரான கருத்துக்களை தெரிவிக்கவில்லை. இது தொடர்பில் எந்தவொரு ஊடகத்திலும் செய்திகள் எதுவும் வெளிவரவுமில்லை. இது அரசியல் வங்குரோத்து நிலையில் உள்ள சிராஸ் மீராசாயவினால் வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்டுள்ள ஒரு பொய்ப் பிரசாரமாகும்.
சாய்ந்தமருது மக்களின் ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான பைசால் காசிம் அவர்கள் அம்மக்களின் நீண்ட கால அபிலாஷைக்கு ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கப் போவதில்லை. அவர் இம்மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் நன்கு உணர்ந்த ஒருவராக இருந்து கொண்டு தன்னால் முடியுமான சேவைகளை இப்பிரதேசத்திற்கு மேற்கொண்டு வருகின்றார்.
அரசியல் ரீதியாகக் பார்த்தால் கூட கல்முனைத தொகுதிக்கு வெளியில் உள்ள ஒருவர் சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சி சபை கோரிக்கையை எதிர்க்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை.
ஆனால் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம்.ஹரீஸ் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை அமைவதை கடுமையாக எதிர்ப்பதாகவும் அரசாங்க மேல் மட்டத்தில் பேசி அதற்கு தடை விதித்திருப்பதாகவும் மூத்த ஊடகவியலாளர் .எச்.சித்தீக் காரியப்பர் தனது முகநூலில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
சிலவேளை தனக்கு மேயர் பதவி பெற்றுத் தருவதில் மும்முரமாக நின்ற ஹரீசை விமர்சிக்க தைரியம் இல்லாமல் அப்பழியை பைசால் காசிம் எம்.பி. மீது சுமத்துவதற்கு சிராஸ் முற்பட்டுள்ளாரா என்றும் சந்தேகம் எழுகின்றது.
எவ்வாறாயினும் சாய்ந்தமருது தனி உள்ளூராட்சி சபை கோரிக்கை பற்றி பேசுவதற்கோ அது தொடர்பில் மற்றோரை விமர்சிப்பதற்கோ சிராஸ் மீராசாய்வுக்கு எந்த அருகதையும் இல்லை என்று நான் ஆணித்தரமாக கூறுகின்றேன்.
ஏனெனில் சாய்ந்தமருது மக்களின் நீண்ட காலத் தேவையை வென்றெடுப்பதற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் சாய்ந்தமருது மலுமலர்ச்சி மன்றம் எனும் அமைப்பு இப்பிரதேச இளைஞர்களையும் புத்திஜீவிகளையும் பொது அமைப்பினரையும் அணி திரட்டி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தது. இதற்காக ஆர்ப்பாட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதேவேளை 2010 ஆம் ஆண்டு முற்பகுதியில் இம்மன்றத்தின் ஏற்பாட்டில் அமைச்சர் அதாஉல்லா முன்னிலையில்சாய்ந்தமருது தனி உள்ளூராட்சி சபைபிரகடன நிகழ்வு ஒன்றும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டிருந்தது.
இதன்போது அமைச்சர் அதாஉல்லா அவர்கள் இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருவதற்கான அத்தனை முயற்சிகளையும் தான் மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தார்.
அப்போது ஹரீஸ் எம்.பி. இதனை தீவிரமாக எதிர்த்து கல்முனைக்குடி மக்கள் மத்தியில் பிரதேசவாதத்தை தூண்டியதுடன் கல்முனைத் தொகுதியை கூறு போடுவதற்கும் கல்முனை மாநகர சபையை தமிழர்களிடம் தாரை வார்ப்பதற்கும் அமைச்சர் அதாஉல்லா எத்தனிக்கிறார் என்றும் குற்றம் சுமத்தியதுடன் அரச உயர் மட்டத்திலும் தனது ஆட்சேபனையை வெளியிட்டிருந்தார்.
இதனால் அமைச்சர் அதாஉல்லா, சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை எதிர்க்கின்ற ஹரீஸ் போன்ற அரசியல்வாதிகளின் உடன்பாட்டைப் பெற்றுக் கொள்ளுமாறும் சாய்ந்தமருதின் ஒட்டுமொத்த சமூகத்தினதும் ஏகோபித்த கோரிக்கையாக இதனை முன்னெடுக்குமாறும் அறிவுரை கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஹரீஸ் எம்.பி. உள்ளிட்ட அரசியல்வாதிகளுடன் மேற்படி மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் ஊரின் முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். இதன்போது பணத்தை அள்ளிக் கட்டிக் கொண்டு ஹெலிகொப்டரில் வந்திறங்கி அரசியலில் புதிதாக நுழைந்து சில பொது வேலைகளில் ஈடுபட்டிருந்த சிராஸ் மீராசாய்வுடன் இம்மன்றத்தினர் தொடர்பை ஏற்படுத்தி ஆதரவு கோரியதுடன் இக்கோரிக்கையை வலுப்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறும் அழைப்பு விடுத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்டு அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்திருந்த சிராஸ், இறுதி நேரத்தில் அச்சந்திப்பைத் தவிர்த்துக் கொண்டு அவரது வருகைக்காக காத்திருந்த பிரமுகர்களை ஏமாற்றியது மட்டுமல்லாமல் இக்கோரிக்கை தொடர்பில் தன்னால் உடன்பட்டு செயற்பட முடியாது என்றும் தான் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதால் ஹரீஸையோ ஏனைய ஊர்களையோ பகைத்துக் கொள்ள முடியாது என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருந்தார்.
சில மாதங்களில் அவர் சொன்னது போலவே ஹரீஸ் எம்.பி.யின் அனுசரணையுடன் அனைத்தையும் வெற்றிகரமாக நடாத்தி கல்முனை மாநகர சபையின் மேயர் எனும் அரியாசனத்தில் அமர்ந்து கொண்டார். இதற்காக சாய்ந்தமருதின் வரலாற்றுத் தேவையான தனி உள்ளூராட்சி சபையை மேயர் பதவிக்காக விலை பேசியிருந்தார். இந்த வரலாற்றை அவரால் மறுக்க முடியுமா?
இப்படி தனது பதவி மோக சுயநலனுக்காக ஊரைக் காட்டிக் கொடுத்து- இந்த ஊர் மக்களின் அபிலாஷையை குழிதோண்டிப் புதைத்த சிராஸ், இன்று தனி உள்ளூராட்சி சபையின் அவசியம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் மற்றோருக்கு பாடம் சொல்லிக் கொடுக்க புறப்பட்டிருப்பது வேடிக்கையான ஒரு விடயமாகும்.
இரண்டு வருட நிறைவில் உடன்பாட்டை மீறி மேயர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து கட்சியினால் தூக்கி வீசப்பட்ட இந்த சிராஸ், அதாஉல்லாவிடம் அடைக்கலம் புகுவதற்காக தனி உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை கோஷமாக்கிக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட முனைந்திருக்கிறார்.
மேயர் பதவியை இழக்காமல் இன்றும் அப்பதவியில் நீடித்திருந்தால் சாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை ஒன்று வேண்டும் என்று சிராஸ் மூச்சு விட்டிருப்பாரா?
அதேவேளை இக்கோரிக்கையை 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இழுத்தடிப்பு செய்து வருகின்ற அமைச்சர் அதாஉல்லா இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார். அத்துடன் இவர் தேசிய காங்கிரசில் இணையும் போது அமைச்சர் அதாஉல்லாவினால் உறுதியளிக்கப்பட்ட இணைப்பாளர் பதவியும் இன்னும் இவருக்கு வழங்கப்பட வில்லை. ஆசைக்கு இரண்டு பொலிசார் வழங்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தனது அரசியலை முன்னெடுக்க முடியாமல் தடுமாறுகின்ற சிராஸ் இன்றோ நாளையோ ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை அவரால் மறுக்க முடியுமா?
இத்தகைய அரசியல் வங்குரோத்து நிலையில் பதவி மோகத்தை தலையில் சுமந்து கொண்டு அலைகின்ற ஒரு சுய நலவாதி, பைசால் காசிம் எம்.பி. மீது அபாண்டமாக பழி சுமத்தி சாய்ந்தமருது மக்கள் மத்தியில் அவருக்கிருக்கின்ற நன்மதிப்பையும் செல்வாக்கையும் தகர்த்தெறிய கனவு காண்கிறார்.
மேற்கூறிய அத்தனை விடயங்கள் குறித்தும் என்னுடன் பகிரங்கமாக விவாதிப்பதற்கு சிராஸ் மீராசாய்வு தயாரா என்று நான் சவால் விடுக்கின்றேன்.
ஒரு எம்.பி.யை விவாதத்திற்கு அழைப்பதற்கு இந்த சிராசிடம் உள்ள தகுதிதான் என்ன? அரசியல் அந்தஸ்து ரீதியாக அக்கரைப்பற்றை மையப்படுத்திய ஒரு கட்சியின் கணக்கில் எடுக்கப்படாத மாகாண இளைஞர் அமைப்பாளர் பதவியை சுமந்துள்ள சிராசுக்கு பைசால் காசிம் எம்.பி.யுடன் விவாதிப்பதற்கான எந்த அருகதையும் கிடையாது.
முடிந்தால் அவரது இணைப்பாளரான என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சிராசுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
தனது அரசியல் இருப்புக்காக சாதிக்க முடியாத ஒரு கோஷத்தைக் கையில் எடுத்துள்ள சிராஸ், முடிந்தால் தனது புதிய தலைவரைக் கொண்டு அதனை வென்று காட்டட்டும். அதனை விடுத்து முஸ்லிம் காங்கிரஸ் தடையாக இருக்கிறது என்று கூறி உங்கள் இயலாமையை மறைக்க முற்பட வேண்டாம்.
என்றோ ஒரு நாள் சாய்ந்தமருது மக்களின் தனி உள்ளூராட்சி சபை தாகம் நிறைவேறும் என்பதில் சந்தேகம் கிடையாது. நிச்சயமாக அது எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் வென்று தரப்படும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன்.
ஆனால் இணைப்பாளர் பதவி தராமல் இழுத்தடிப்பு செய்கின்ற அமைச்சர் அதாவுல்லாவை விட்டு விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு தருணம் பார்த்துக் கொண்டு இருக்கின்ற சிராஸ், சாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி தராமல் அதாஉல்லா ஏமாற்றி விட்டார் என்று அறிக்கை வெளியிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
சிலவேளை எமது இந்த அறிக்கைக்குப் பின்னர் இணைப்பாளர் பதவி வழங்க அமைச்சர் அதாஉல்லா முன்வருவாராயின் சிராஸ் அவர்களுக்கு எனது முன்கூட்டியே வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top