கல்முனை ஸாஹிறாக் கல்லூரி ஸ்தாபக தினத்திற்கு

அபிவிருத்தியின் பிதா மகன் .ஆர்.மன்சூர் புறக்கணிப்பு

ஸ்தாபகர் எம்.எஸ்.காரியப்பரின் குடும்ப 

அங்கத்தவர்களும் அழைக்கப்படவில்லை

(எம்.எம்..சமட்)

கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பாம். அந்தச் சிறப்பை வழங்கும் கல்விக் கூடங்களும் அல்லது பாடசாலைகளும் என்றென்றும் சிறப்புடையவைதான். அத்தகைய சிறப்புக்குரிய ஒவ்வொரு பாடசாலையும் யாரோ   எண்ணக் கருவில் உதித்ததாக, ஸ்தாபிக்கப்பட்டதாக இருக்கும். அவ்வாறே அதன் வளர்ச்சியும் ஓரிருவரின் அர்ப்பணிப்புடனும் வகிபங்குடனும் வளம் பெற்றதாகவே காணப்படும்.
அந்தவகையில் கல்முனையின் கல்வி ஒளிவிளக்காக திகழும் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் தோற்றத்திற்கு கேற் முதலியார் மர்ஹும் எம்.எஸ். காரியப்பர் எவ்வாறு வகிபங்கு வகித்தாரோ அவ்வாறே அப்பாடசாலையின் இன்றைய வளர்ச்சிக்கு அன்னாரின் மருமகனான முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சரும் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான .ஆர். மன்சூரின் அளப்பெரிய சேவைகள் வகிபங்கு வகித்துள்ளது. இதனை மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்பதை யதார்த்தமாகும்.
கல்முனை ஸாஹிறாக் கல்லூரி, 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அதாவது இன்றைய தினத்தில் அன்று ஜுனியர் ஆங்கிலப் பாடசாலையாக கல்முனைக்குடிக்கும் சாய்தமருதுக் கிரமாத்திற்கும் மத்தியில் கேட்முதலியார் எம்.எஸ் காரியப்பரின் 5 ஏக்கர் சொந்தக் காணியில் அவரின் பிரசன்னத்துடன் ஸ்தாபிக்கப்பட்டது,
அதனால் இக்கல்லூரியின் ஸ்தாபகர் என்ற கௌரவத்தையும், சிறப்பையும் வரலாற்றில் அழிக்க முடியாத தடத்தையும் மர்ஹும் கேட்முதலியார் எம்.எஸ். காரியப்பர் பதித்துச் சென்றுள்ளார்.
கல்முனை வாழ் முஸ்லிம் மக்களின் கல்விக்கண் துறந்த கல்முனையின் கல்வித் தந்தை என்று கேற்முதலியாரை அழைப்பதில் தவரேதும் இருக்காது. கல்விக்கும் கல்முனை மண்ணுக்கும் கலங்கரை விளக்காக திகழ்ந்த கேட்முதலியார் எம்.எஸ் காரியப்பர் ஸாஹிறாவின் வரலாற்றில் மட்டுமல்ல கல்முனையின் வரலாற்றிலும் மறக்கப்பட முடியாத மா மனிதராவார். அவரோடு இக்கல்லூரியின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் ஒத்துழைத்த அனைவருமே வரலாற்றில் மறக்கப்பட முடியாததவர்கள்தான்.
இற்றைக்கு 64 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஓலைக் கொட்டிலில் 4 மாணவர்களோடு ஜுனியர் ஆங்கிலப் பாடசாலையாக உருவாக்கப்பட்ட இக்கல்லூரி, மஹா வித்தியாலயமாக, மத்திய மஹா வித்தியாலயமாக வளர்ந்து இன்று பல மாடிக்கட்டடங்களோடு நாட்டிலுள்ள பல்வேறு வசதிகள் கொண்ட 350 தேசிய பாடசாலைகளில் ஒன்றாக தலை நிமிர்ந்து காணப்படுகிறது என்றால் அதில் அளப்பெரிய வகிபங்கு முன்னாள் அமைச்சர் மன்சூருக்கும் உள்ளது. இதை மறுப்பவர்களைத் தவிர மற்றயவர்கள் மறுக்க மாட்டார்கள் ஏன் மறைக்கவும் மாட்டார்கள்;
1977 ஆம் ஆண்டில் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்ப்பட்ட முன்னர் அமைச்சர் மன்சூர் 1994ஆம் ஆண்டு வரை கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது மாத்திரமின்றி அமைச்சரவை அமைச்சாராவுமிருந்து கல்முனை ஸாஹிறாவின் வளர்ச்சிக்கு அரும்பெருந் தொண்றுகளைச் செய்துள்ளார்.
1985ஆம் ஆண்டுக்கும் 1989ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட நான்கு ஆண்டு காலப்பகுதியில் முன்னாள்அமைச்;சர் மன்சூர் இக்கல்லூரியின் பௌதிக வள மற்றும் மனித வள அபிவிருத்திக்காக பல்வேறு பணிகளைப் புரிந்துள்ளார். உயர்தர மாணவர்களுக்கான இரு மாடி விஞ்ஞான ஆய்வு கூடம், எம்.எஸ். காரியப்பர் கேட்போர் கூடம், விடுதி, வகுப்பறைக் கட்டடங்கள், விளையாட்டு மைதான விஸ்தரிப்பு, மீன்தொட்டி என பல்வேறு பௌதிக வளங்களை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், விஞ்ஞான பட்டதாரி ஆசரியர்களின் தேவை கருதி ஒரே நாளில் 7 விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களையும, ஏனைய பாடவிடயங்களுக்கான ஆசிரியர்களையும் இக்கல்லூரிக்கு நியமித்துக் கொடுத்த பெருமை அமைச்சர் மன்சூரையே சாரும்.
இக்காலப் பகுதி தவிர்ந்த அவர் கல்முனைத் தொகுதின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த ஏனைய காலப்பகுதியிலும் இப்பாடசாலையின் அபிவிருத்தியில் அதிக அக்கரை கொண்டவாராக செயற்பட்டதை இப்பாடசாலையின் அதிபர்களாக இருந்து ஓய்வு பெற்று இன்;று வாழ்ந்து கொண்டிருக்கும் அதிபர்கள் கூறுவதைக் கேட்க முடிகிறது. அவர்களே இவற்றுக்கெல்லாம் சாட்சிகளாக உள்ளனர்.
இக்கல்லூரியின் வளர்ச்சியல் பங்குகொண்ட இப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளின்பணிகளுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற விடத்து இப்பாடசாலை கொண்டுள்ள மூன்றில் இரண்டு வீதமான கட்டடங்கள் அமைச்சர் மன்சூரின் அரசியல் அதிகாரத்தினால் நிர்மாணிக்கப்பட்டவை என்பதே உண்மை, ஆனால் துரஷ்டவசமாக ஸாஹிறாக் கல்லூரின் வளர்ச்சியில் அவரால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை ஸாஹிறாவின் வரலாற்றை எழுதும் எழத்தாளர்கள் மூடிமுறைக்க முனைவது அல்லது முனைந்தது நியாயமானதா? ஆல்லது எந்தவிதத்தில் நியாயமாகும்.
எழுத்தாளர்கள் மனச்சாட்சியோடு எழுத தங்களது பேனா முனைகளைப் பயன்படுத்த வேண்டும். யாரும் ஒருவரை அல்லது பலரைத் திருப்பதிப்படுத்துவதற்காக, மகிழ்விப்பதற்காக மற்றுமொருவரை அதிருப்திக்குள்ளாக்குவதோ அல்லது அவரை வேதனைப்படுத்துவதோ முறையல்ல அது எழுத்துத் துறைக்கான தர்மமுமாகாது.
அந்தவகையில் இவ்வாக்கமானது அமைச்சர் மன்சூரை விளம்பரப்படுத்தவோ அல்லது அவரின் அபிமானத்தைப் பெறவோ எழுதப்பட்டதல்ல. மாறாக, நிதர்சனங்கள் மறைக்கப்படாது உண்மைக்குன்மையாக அவை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இக்கல்லூரிக்கு சேவை செய்தவர்கள் மதிக்கப்பட வேண்டும் மரணித்தவர்கள் தவிர ஏனைய இக்கல்லூரிக்க உழைத்தவர்கள் அவர்கள் அதிபர்களாக அருந்தாலும் சரி அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அவர்கள் அழைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் சேவைகள் இக்கல்லூரியின் வரலாறுகளில் எழுதப்பட வேண்டும். குறைந்த பட்சம் இன்று(16.11.2014) நடைபெறும் ஸ்தாபகர் தினத்திற்காவது அவர்கள் குறிப்பாக அமைச்சர் மன்சூர் உட்பட இக்கல்லூரியின் ஸ்தாபகரான கல்முனைக் கல்வித் தந்தையான மர்ஹும் கேட்முதலியார் எம்.எஸ். காரியப்பரின் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், கவலையோடு முன்வைக்கப்பட வேண்டிய விடயமென்னவென்றால் இத்தகைய ஸ்தாபகர் தினத்திற்கு அமைச்சர் மன்சூரோ கேட்முதலியாரின் புதல்வி சுஹாரா மன்சூரோ அழைக்கப்படாதது, அழைப்பதில் நிராகரிக்கப்பட்டது உண்மையில் வேதனையளிக்கும் விடயமாகும்.
ஸாஹிறாக் கல்லூரி கல்முனைப் பிரதேசத்திலிருந்து மாத்திரமல்ல அம்பாறை மாவட்டம் உட்பட நாட்டின் முஸ்லிம்கள் வாழும் பல மாவட்டங்களைச் சேர்ந்த பலரை பல்வேறு துறைகளில் துறையார் நிபுணர்களாக உருவாக்கி இருக்கிறது.
வைத்தியர்களையும் பொறியிலாளர்களையும் சட்டத்தரணிகளையும், முகாமையாளர்களையும் என பல்வேறு துறைசார் நிபுணர்களையும் பதவி நிலை உத்தியோகத்தர்களையும் இக்கல்லூரி உருவாக்கியிருக்கிறது என்றால் அதன் பின்னணியில் இருப்பவர்கள,; இப்பாடசாலையின் வளர்ச்சியில் தத்தமது பங்களிப்பைச் செய்தவர்களேயாவர். அவ்வாறானவர்கள் இத்தினத்திற்கு அழைக்கப்படாது மறக்கப்பட்டதும் நிரகாரிக்கப்பட்டதும் ஏற்றுக்கொள்ள முடியாத வரலாற்றுத் தவறாகும்.
ஏனெனில் இப்பாடசாலையின் ஸ்தாபகரான எம்.எஸ்.காரியப்பரைக் கௌரவிப்பதற்காக, அவரை நினைவூட்டுவதற்காக அவரின் மிகப்பெரும் மகத்தான பணியின் வரலாற்றை புதுப்பிப்பதற்காக அவரின் வரலாற்றை நன்கு அறிந்த இந்நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சவை பிரதம அதிதியாக அழைத்து வந்து இந்த ஸ்தாபகர் தினத்தை இக்கல்லூரியில் அனுஷ்டிப்பதற்கும் சபாநாயகரினூடாக இப்பாடசாலை சமகாலத்தில் வேண்டிநிற்கும் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கும் இத்தினத்தை நடாத்துவதற்கு இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் .ஆதம்பாவுடன் அமைச்சர் மன்சூர் கலந்தாலோசித்திருந்தமையையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
ஆக, எது நடக்கக் கூடாது, எவை நிராகரிக்கப்படக் கூடாது அவை இன்று (16) இடம்பெறும் மூன்றுமாடி கட்டட நிர்மாண அடிக்கல் மற்றும் ஸாஹிறாவின் ஸ்தபாகர் தின வைபத்தில் நடந்தேறியுள்ளது.

இருப்பினும், தவறுகள் மன்னிக்கப்படக் கூடியவையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியவையுமாகும். அந்தவகையிலேதான் இந்த ஆக்கவும் முன்வைக்கப்படுகிறது. மாறாக இக்கல்லூரிக்கு களங்கத்தை ஏற்படுத்தவோ அல்லது இக்கல்லூரியில் இன்று நடைபெறும் குறித்த வைபவத்தை மலினப்படுத்தவோ முயற்சிக்கப்பட்டவையல்ல. மாறாக இவ்வாக்கமானது எதிர்மறையாக நோக்கப்படுமிடத்து அது நோக்குபவர்களின் சிந்தனைத் தவறே தவிர ஆக்கியோனின் தவறல்ல.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top