புதிய சவூதி அரேபிய மன்னர்
சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சாத்



புதிய சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சாத் ராஜதந்திரம் மற்றும் மத்தியஸ்தப் பேச்சுக்களில் கில்லாடி என அறிவிக்கப்படுகின்றது. இவர் சவூதியின் மிகுந்த அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரும் கூட. கடந்த 50 வருடங்களாக ரியாத் கவர்னராகஇவர் பதவியில் இருந்தவர். அரச குடும்பத்திற்குள் ஏதாவது சர்ச்சை ஏற்பட்டால் இவர்தான் மத்தியஸ்தம் பேசி சரி செய்து வைப்பார் எனவும் கூறப்படுகின்றது.
79 வயதாகும் சல்மான், தனது ஒன்று விட்ட சகோதரரும், மன்னருமான அப்துல்லாவின் மறைவுக்குப் பின்னர் மன்னர் பொறுப்புக்கு வந்துள்ளார். ஆனால் மன்னர் அப்துல்லாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோதே கடந்த ஒரு வருடமாகவே அவர் மன்னரின் கடமைகளை நிறைவேற்ற ஆரம்பித்து விட்டாராம். தனது 90வது வயதில் இன்று அதிகாலை மன்னர் அப்துல்லா மரணமடைந்தார். 2011 ஆம் ஆண்டு முதல் சல்மான் சவூதி பாதுகாப்பு அமைச்சராக இருந்து வந்தார். இராணுவத் தலைமையும் இவரிடமே இருந்தது. சிரியா மீது 2014ல் நடந்த அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தாக்குதலில் சவூதி இராணுவமும் பங்கேற்றிருந்தது.
சவூதி அரேபியாவை நிறுவியவரான மறைந்த மன்னர் அப்துல் அஜீஸ் அல் சாத் - ஹுஸ்ஸா பின்ட் அகமது சுடேரி தம்பதியின் 12 பிள்ளைகளில் ஒருவர்தான் சல்மான். அப்துல் அஜீஸுக்கு பல்வேறு மனைவியர் மூலம் 50க்கும் மேற்பட்ட பிள்ளைகள் உண்டு. அதில் ஒரு மனைவிதான் ஹூஸ்ஸா பின்ட் அகமது சுடேரி. ஹூஸ்ஸாவின் 7வது பிள்ளையாக பிறந்தவர் சல்மான்.

 2007 ஆம் ஆண்டு சவூதியில் உள்ள அமெரிக்க தூதரகம், தனது நாட்டு வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது... தீவிரவாதத்தை வெறுப்பவர் சல்மான். ஆனால், யூத மற்றும் கிறிஸ்தவ தீவிரவாதம்தான், இஸ்லாமிய தீவிரவாதம் வளர முக்கியக் காரணம். ஒரு நாள் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வெறுப்பு அலை அப்படியே அமெரிக்காவை நோக்கி திரும்பும். அந்த நாள் நிச்சயம் வரும். மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வர வேண்டுமானால், இஸ்ரேல், பாலஸ்தீன மோதல் முழுமையாக முடிவுக்கு வர வேண்டும். இஸ்ரேல் உண்மையில் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சுமையாகும் என்று கூறியிருந்தவர்தான் சவூதியின் புதிய மன்னரான இந்த  சல்மான்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top