முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர்
கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.  
கடந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு   அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த பிரகாரம் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் , அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடு உள்ளது.  
இந்த நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சரைக் கொண்டதான கிழக்கு மாகாண சபைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  
இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு ஆட்சி அமைக்கப்படவுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இதேவேளை கிழக்கில் அமையவுள்ள மாகாண அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் தேவைஇது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தனுடனும் நாம் பேசுவோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு ஆட்சியை நிறுவும் பொருட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பத்தத்தில் பிந்திய இரண்டரை வருடங்களுக்கு முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்குவது என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனை தற்போது அமுல்படுத்துவதன் மூலம் கிழக்கின் தற்போதைய ஆட்சி இழுபறிக்கு தீர்வினைக் காண முடியும் என்று அண்மையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கட்சியின் இத்தீர்மானத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கும் பொருட்டு எந்த நேரத்திலும் தாம் ராஜினாமா செய்யத் தயார் என முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அக்கூட்டத்தில் உறுதியளித்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்களுள் யாரை முதலமைச்சராக நியமிப்பது என்பது தொடர்பில் குறித்த உறுப்பினர்கள் மத்தியிலும் கட்சியின் முக்கியஸ்தர்களிடமும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அபிப்பிராயங்களை கேட்டறிந்து வருகின்றார் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top