ஜனநாயகத்துக்கெதிரான காடைத்தனம்;
நான் - சாட்சியாக அங்கிருந்தேன்!
-    யூ.எல்.மப்றூக்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் - கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்திய இரண்டு நிகழ்வுகளில் காடைத்தனங்கள் அரங்கேறியிருந்தன.
அக்கரைப்பற்றிலும், சாய்ந்தமருதிலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளிலேயே, இந்த காடைத்தனங்கள் இடம்பெற்றன.
சாய்ந்தமருதுவில் - இந்தக் காடைத்தனங்கள் அரங்கேறியபோது - நானும் ஓர் ஊடகவியலாளராக அங்கிருந்தேன்.
சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் உரையாற்றினார்கள். அவர்களின் உரைகள் மிகவும் நாகரீகமாக அமைந்திருந்தன. முஸ்லிம் அரசியலையும், அரசியல்வாதிகளையும் அவர்கள் விமர்சித்தார்கள். ஆனால், எவருடைய பெயரையும் அவர்கள் குறிப்பிடவில்லை.
கூட்டத்தைக் காண வந்தவர்கள் என்கிற தோரணையில், அங்கு வந்திருந்த ஒரு கும்பல் - வேண்டுமென்றே பிரச்சினையை ஆரம்பித்தார்கள். கதிரைகளைத் தூக்கி, அடுத்தவர் மீது வீசினார்கள். வெளியில் சென்று கல்லெடுத்து, மண்டபத்தின் மீது வீசினார்கள். இவற்றில் அதிகமானவற்றினை எனது கமராவில் பதிவு செய்து கொண்டேன். அப்போது, படம் எடுத்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்தும் - காடையர்களில் ஒருவர் அச்சுறுத்தும் தொனியில் பேசினார்.
அக்கரைப்பற்றிலும், சாய்ந்தமருதுவிலும் - நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரின் நிகழ்வுகளில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் மு.காங்கிரசின் ஆதரவாளர்கள்தான் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குறித்த காடையர்களின் பின்னால், உள்ளுர் 'ராசா'க்கள் இருந்திருக்கிறார்கள்.
கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விட்டுவிட்டு, கருத்தை காடைத்தனத்தினால் எதிர்கொள்ளும் - இந்த நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.
அப்படியென்றால், அதாஉல்லா அமைச்சராக இருந்தபோது, அக்கரைப்பற்றுக்குள் முஸ்லிம் காங்கிரசின் கூட்டங்களை நடத்த விடாமல் - அராஜகம் செய்தமையை, முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் இனி - எப்படி விமர்சிக்க முடியும்.
சாய்ந்தமருதுவில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரின் கூட்டத்தைக் குழப்பியவர்களில் ஒருவர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைப் பார்த்து இப்படிக் கூறினார்; "நீங்கள் அரசியல் செய்வதென்றால், காத்தான்குடியில் செய்யுங்கள். சாய்ந்தமருதுவுக்கு வரக் கூடாது. இங்கு வந்தால், உங்களுக்கு இதுதான் கதி"
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துல் ரஹ்மான் காத்தான்குடியைச் சேர்ந்தவர். அதனால்தான், அந்தக் குழப்பக்காரர் அவ்வாறு கூறினார்.
இது மிக மிகக் கேவலமானதொரு மன உணர்வாகும். குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருப்பவர்களிடம், இந்த வார்த்தைகளை விட, வேறெதனை நாம் எதிர் பார்க்க முடியும்.
அப்படியென்றால், ரஊப் ஹக்கீம் - கண்டியோடு, தனது அரசியலை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமென, மற்றைய கட்சிக்காரன் சத்தமிடத் துவங்கும் போது, இந்தச் சண்டியர்கள் என்ன செய்வார்கள்?!

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதுதான் - நல்லதொரு அரசியல் செயற்பாட்டுக்குரிய ஆரம்பமாகும்!





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top