தனது பெயர் எழுதப்பட்ட பிளாஸ்டிக் பையை அணிந்திருந்த

5 வயது ஆப்கான் சிறுவனை சந்திக்க விரும்பும் மெஸ்சி

ஆப்கானிஸ்தானில் இரண்டு விளையாட்டுக்கள்தான் பிரபலம். ஒன்று கிரிக்கெட், இன்னொன்று கால்பந்து.
காபூல் அருகில் இருக்கும் காஸ்னி மாகாணத்தை சேர்ந்தவன் 5 வயது ஏழை சிறுவன் மூர்த்தாசா அஹ்மதி. இவனுக்கு அர்ஜென்டினாவை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் மெஸ்சி என்றால் உயிர். இவனது 15 வயது சகோதரனும் கால்பந்து ரசிகன்தான்.
மூர்த்தாசா அஹ்மதிக்கு அவனது சகோதரன் மளிகை பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பையை கால்பந்து ஜெர்சியை போல் மாற்றி அணிவித்துள்ளான். மேலும் பிளாஸ்டிக் பை மீது, ’மெஸ்சி 10’ என்று மார்கர் பேனாவால் எழுதியுள்ளான். இந்த ஜெர்சியை அணிந்திருக்கும் தம்பியை புகைப்படம் எடுத்து கடந்த மாதம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளான்.
விளையாட்டாக எடுக்கப்பட்ட இந்த போட்டோ சமூக வலைத்தளத்தில் இருந்த கால்பந்து ரசிகர்களின் இதயங்களை நொறுங்கச் செய்யும் புகைப்படமாக மாறியது. தற்போது அது மெஸ்ஸியையும் எட்டியுள்ளது. அந்த போட்டோவை பார்த்து நெகிழ்ந்து போன மெஸ்சி, சிறுவன் மூர்த்தாசா அஹ்மதியை சந்திக்க விரும்புவதாக ஆப்கான் கால்பந்து சங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காடிப் போய் உள்ள ஆப்கான் கால்பந்து சங்கத்தினர், எங்கு, எப்போது சந்திப்பை வைத்துக்கொள்வது என்பது பற்றி மெஸ்சியுடன் பேசிவருகிறார்கள்.

மூர்த்தாசா அஹ்மதியின் தந்தை தன்னால் மகனுக்கு புதிய ஜெர்சி வாங்கி கொடுக்க முடியவில்லை என்றும், தற்போது அவன் வைத்து விளையாடிவரும் கால்பந்து கூட பஞ்சர் ஆனதுதான் என்றும் கூறியுள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top