மூத்த அரசியல்வாதி அலவி மௌலானா காலமானார்



இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அல்ஹாஜ் அலவி மௌலானா (வயது 84) சற்று முன்னர் கொழும்பில் காலமானார்.
சுதந்திரக்கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான அலவி மௌலானா ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கத்தில் ஜனவசம நிறுவனத்தலைவராக செயற்பட்டிருந்தார்.
அதன் பின்னர் சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தராகவும், கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் நீண்ட காலமாக அவர் சுதந்திரக்கட்சிக்கு பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.
அத்துடன் ஏராளமான தொழிலாளர் நலப் போராட்டங்களில் ஈடுபட்டு, இலங்கையின் மூத்த தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராகவும் அவர் மதிக்கப்பட்டிருந்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியில் நடைபெற்ற 80ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான போராட்டம் ஒன்றின் போது குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டு கத்திக்குத்துக்கும் இலக்காகி இருந்தார்.
1994ம் ஆண்டு பதவிக்கு வந்த பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் ஊடகத்துறை பிரதியமைச்சராகவும், தொழில் அமைச்சர் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.

அதன்பின்னர் 2004ம் ஆண்டு தொடக்கம் மேல் மாகாண ஆளுனராக இரண்டு தடவைகள் பதவி வகித்திருந்தார்.அண்மையில் சுகவீனமுற்றிருந்த நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அலவி மௌலானா, இன்று மாலை காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top