அன்பே வா, தெய்வமகன் போன்ற படங்களை இயக்கியுள்ள
பழம்பெரும் இயக்குநர் திருலோகச்சந்தர் காலமானார்!


எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி ஆகியோரின் படங்களை இயக்கிய பழம்பெரும் திரைப்பட இயக்குநர் .சி.திருலோகசந்தர் இன்று சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவரது உயிர் சென்னையில் இன்று பிரிந்தது. அவருக்கு வயது 85. திருலோகசந்தரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆற்காடு ஆகும்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான 'அன்பே வா', சிவாஜி கணேசன் நடிப்பில் 'டாக்டர் சிவா', 'பாரத விலாஸ்', 'தெய்வமகன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் திருலோகசந்தர். சிவாஜி கணேசனுடன் இணைந்து சுமார் 25 படங்கள் பணியாற்றியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் மொத்தம் 65 படங்களை இயக்கியுள்ளார்.

காக்கும் கரங்கள்படம் மூலம், சிவக்குமாரையும், ‘வீரத்திருமகன்படத்தின் மூலம் நடிகை சச்சுவையும் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது இவர்தான். 1962-ல் வெளிவந்த 'வீரத்திருமகன்' இவருடைய முதல் படம். 1987-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த 'அன்புள்ள அப்பா' இவரது கடைசி படம்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, 5 முறை பிலிம் பேர் விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த படங்களுக்கான தேர்வுக் குழுவின் தலைவராகவும் பலமுறை பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருலோகசந்தரின் மறைவுக்கு இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தன் திரையுலக அனுபவங்களைத் தொகுத்து நெஞ்சில் நிறைந்த நினைவுகள் என்ற தலைப்பில் கடந்த ஆண்டு புத்தகமாக வெளியிட்டார்.
திருலோகச்சந்தருக்கு ராஜ் சந்தர், பிரேம் சந்தர் என்ற இரு மகன்களும், மல்லி என்ற ஒரு மகளும் உள்ளனர். இவரின் இளைய மகன் பிரேம் சந்தர் கடந்த வாரம் புற்றுநோயால் இறந்தார்.


இந்நிலையில், ராமச்சந்திரா மருத்துவமனையில் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் திருலோகச்சந்தர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இன்று சென்னையில் பிற்பகல் மூன்று மணிக்கு காலமானார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top