பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து மட்டுமல்லாது
முஸ்லிம் காங்கிரசிலிருந்தும் விலகிச்செல்வதே

முஸ்லிம்களுக்கு தோழர் பசீர் சேகுதாவூத் செய்யும் கைமாறாகும்.


பிரததிநிதித்துவ அரசியலிலிருந்து முழுமையாக விலகிக்கொள்ளப்போவதாகவும், தொடர்ந்து முஸ்லிம் காங்கிரசில் அங்கம் வகிக்கப்போவதாகவும் மு.கா தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
திரைமறைவு அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் எப்படியும் ரவுப் ஹக்கீமை பணிய வைக்கலாம் என்ற நம்பிக்கையில், தனக்கு நான்காவது முறையும் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறப்பினர் பதவி கிடைக்கும் என்று இறுதிவரைக்கும் நம்பியிருந்தார்.
இவரது எந்தவொரு சலசலப்புக்கும் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் வசைந்து கொடுக்காததனால் தேசியப்பட்டியல் கனவு சாத்தியப்படமாட்டாது என்று உறுதியாக நம்பியதனாலும், மாகாணசபை தேர்தல் மட்டுமல்ல எந்தவொரு தேர்தல் மூலமாவது மக்கள் ஆணையை பெற்று எதிர்காலங்களில் தன்னால் வெற்றிபெற முடியாது என்று உணர்ந்துகொண்டதனாலுமே இந்த அறிவிப்பு என்று அரசியல் அவதானிகளால் கருதப்படுகின்றது.  
இதுவரை காலமும் குறுக்குவழிகள் மூலம் வகித்துவந்த அரசியல் பதவிகளை ஒரு வரலாற்று பதிவாக விளம்பரப்படுத்தி மார்தட்டிக்கொண்டு புகழ் பாடியிருக்கும் பசீர் அவர்கள், தான் இதுவரை காலமும் வகித்து வந்த அந்த அரசியல் அதிகார பதவிகள் மூலமாக எதனை சாத்தித்து காட்ட முடிந்தது என்று கூற தவறிவிட்டார்.  
தனது அரசியல் பயணத்தில் தன்னை நம்பிய மக்களுக்கு அல்லது கட்சிக்கு ஏதாவது சாதித்து காட்டிவிட்டு இவ்வாறான ஒரு அறிக்கையை பசீர் சேகுதாவூத் அவர்கள் விடுத்திருந்தால் அவரை நாங்கள் மனதார பாராட்டி இருக்கலாம். ஆனால் இதுவரை காலமும் தனது பிரதிநிதித்துவ அரசியல் மூலம் தனது மக்களுக்கோ, தனது மாவட்டத்துக்கோ அல்லது குறைந்தது தனது சொந்த பிரதேசமான ஏறாவூருக்காவது குறிப்பிட்டு கூறுமளவுக்கு எதுவுமே செய்திராத நிலையில் இவரது இவ்வாறான அறிக்கையினை எவ்வாறு கருதிக்கொள்ள முடியும்.  
முஸ்லிம் காங்கிரசின் இரண்டாவது பதவி நிலையில் உள்ள தவிசாளர் பதவியினை அலங்கரித்துக்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து ஏதாவது சாதித்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை. மாறாக கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசில் வசீரின் வளர்ச்சிக்கு பின்பு முஸ்லிம் காங்கிரசுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த செல்வாக்கு வீழ்ச்சி நிலையயே அடைந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பல முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் முஸ்லிம் காங்கிரசை விட்டு பிரிந்து செல்வதற்கு தோழர் பசீர் சேகுதாவூத்தே காரணமாக இருந்தார் என்பதுதான் கசப்பான உண்மையாகும்.    
முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றில் தவிசாளராக இதுவரையில் பதவி வகித்தவர்களுள் பசீர் சேகுதாவூத் அவர்கள் சற்று வித்தியாசமானவர். மிகவும் மதினுட்பமானவரும், சிறந்த பேச்சாளருமாவார். கடந்தகால ஏனைய தவிசாளர்கள் தலைவருக்கு எதிராக நேரடி சதிப்புரட்சிகளிலும், கழுத்தறுப்புக்களிலும் ஈடுபட்டு அவைகள் தோல்வியடைந்து, இறுதியில் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்கள் அல்லது விலகிச்சென்றார்கள்.
ஆனால் பசீர் சேகுதாவூத் அவர்கள் தொடர்ந்து தன்னை முஸ்லிம் காங்கிரசுக்கும், தலைமைக்கும் விசுவாசியாக கட்சி போராளிகளுக்கும், மக்களுக்கும் காட்டிக்கொண்டதுடன், கூட இருந்துகொண்டு குழி பறிப்பதுபோன்று தனது தத்ரூபமான காய்நகர்த்தல்கள் மூலம் தலைவர் ஹக்கீமுக்கு எதிராக தொடர்ந்து செயற்பட்டார்.
அதன்மூலம் தலைவருக்கு எதிராக பல விமர்சனங்களை உண்டு பன்னச்செய்து தலைவரை ஒரு சமூகத் துரோகியாகவும், தலைமத்துவத்துக்கு தகுதி அற்றவராகவும் மக்கள் மத்தியில் காண்பித்து, அதன் பின்பு சத்தமின்றி தலைமைத்துவத்தினை கைப்பெற்றும் தந்திரோபாயத்தில் எவ்வளவோ முயற்சித்தும், இறுதியில் அவைகள் அனைத்திலிருந்தும் பசீர் சேகுதாவூத் அவர்கள் தோல்வி கண்டார்.
பசீர் அவர்களின் அறிக்கையில் ஈரோஸ் இயக்க நிறுவுனர் இரத்தின சபாபதி அவர்களுக்கும், ஈரோஸ் தலைவராக இருந்த பாலக்குமார் அவர்களுக்கும் விசேட நன்றியினை தெரிவித்திருந்ததுடன் தனது அரசியல் ஆசானாக இவர்களேயே குறிப்பிட்டிருந்தார்.
ஈரோஸ் இயக்கம் என்பது எப்போதும் விடுதலை புலிகளுக்கு சார்பான இயக்கமாகும். இறுதியில் இவ்வியக்கம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதன் தலைவர் பாலக்குமார் அவர்களும், போராளிகளும் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டு முக்கிய பங்காற்றியதுடன் இறுதி யுத்தத்தில் முள்ளியவாய்க்காலில் வைத்து பாலக்குமார் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். ஆனால் இதுவரையில் அவர் என்ன ஆனார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது.  
ஈழ போராட்டம் நடாத்திய தமிழ் ஆயுத இயக்கங்களில் முதன் முதலாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினை யாழ்பாணத்தில் அரங்கேற்றியதும் இந்த ஈரோஸ் இயக்கம்தான். அந்த சூழ்நிலையிலும் தோழர் பசீர் சேகுதாவூத் அவர்கள் ஈரோஸ் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துகொண்டு இயக்கத்துக்கு விசுவாசமாகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயற்பட்டார் என்பது மறக்க முடியாத வரலாறாகும்.    
2002 ஆம் ஆண்டு சமாதான காலத்தில் விடுதலை புலிகளுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் கிளிநொச்சியில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றதுடன் பிரபா - ஹக்கீம் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. அவ்வொப்பந்தத்தில் “வடக்கில் இருந்து வெளியேறிய முஸ்லிம்கள்” என்ற ஒரு வாசகமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
1990 ஆம் ஆண்டு இருபத்திநான்கு மணிநேர கால அவகாசத்துக்கு மத்தியில் வடக்கில் இருந்த முஸ்லிம் மக்கள் அனைவரும் விடுதலை புலிகளினால் வெளியேற்றப்பட்டது உலகமே அறிந்த விடயமாகும். ஆனால் முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்தது போன்று உண்மை இருட்டடிப்பு செய்யப்பட்டு இவ்வாசகம் உள்ளடக்கப்படவேண்டிய தேவை என்ன? இவ்வொப்பந்தத்தினை வரைந்தவர்கள் யார் என்ற கேள்விகளுக்கு அப்போது விடை தெரியாமல் தலைவர் ஹக்கீமுக்கு எதிராகவே விமர்சனங்கள் எழுந்தது.
பிரபா – ஹக்கீம் ஒப்பந்தம் வரைவதற்கு புலிகள் சார்பாக அன்டன் பாலசிங்கம் அவர்களும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பசீர் சேகுதாவூத் அவர்களுமே ஈடுபட்டு இருந்தார்கள் என்பதற்கு அன்றய தவிசாளர் அதாஉல்லா உற்பட முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவில் சென்ற அனைவருமே சாட்சிகளாகும். அப்போது தலைவராக பதவி ஏற்று ஒரு வருடமும் பூர்த்தியாகாத நிலையில் ரவுப் ஹக்கீம் அவர்கள் ஒரு சூழ்நிலை கைதியாக புலிகளின் கோட்டைக்குள் பசீர் சேகுதாவூத்தின் ஒப்பந்த வரைபுக்கு சம்மதிக்க வேண்டிய சூழ்நிலை அன்று ஏற்பட்டது.
அப்போது பசீர் சேகுதாவூத் அவர்கள் முஸ்லிம்களின் சார்பானவராக அன்றி பிரபாகரனின் எண்ணங்களை அறிந்து அவைகளை பூர்த்தி செய்யக்கூடிய புலிகளின் விசுவாசியாக காணப்பட்டார் என்பது அன்று பலருக்கு ஆச்சரியத்தினை உண்டுபண்ணியது.        
அன்று தொடக்கம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை விட்டு வெளியேறியது வரைக்கும் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் தவறுகளுக்கு அதன் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்களே பின்னணி காரணமாக இருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வரிந்துகட்டிக்கொண்டு இருந்த சூழ்நிலையில், முஸ்லிம் மக்களின் ஆதங்கங்களை பற்றி கவலைப்படாமல் அதி உயர்பீட உறுப்பினர்கள் பலரை தன்னுடன் இணைத்துக்கொண்டு மகிந்த ராஜபக்சவுக்குத்தான் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் எண்று பிடிவாதமாக இருந்தார் பசீர் சேகுதாவூத் அவர்கள்.
வசீரின் அவ்வாறான பிடிவாதத்தினால்தான் மகிந்தவின் அரசாங்கத்தினை விட்டு முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறி வருவதில் தாமதம் ஏற்பட்ட காரங்ககளில் ஒன்றாகும். ஆனால் இன்றுவரைக்கும் தபால்மூல வாக்கு பதிவுக்கு பின்புதான் முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவினை விட்டு வெளியேறி வந்தது என்று தலைவர் ஹக்கீமுக்கு எதிரான விசம பிரச்சாரத்துக்கு தோழர் பசீர் சேகுதாவூத்தான் காரணமாக இருந்தார் என்பது விடயம் அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.    
முஸ்லிம் காங்கிரசின் தலைவர் பதவியினை கைப்பெற்றும் நோக்கில் தனது சுயநலத்துக்காக தலைவர் ஹக்கீமுக்கு எதிராக மக்களின் விமர்சனங்களை உண்டுபண்ணும் நோக்கில் அவ்வப்போது பசீர் அவர்களினால் சத்தமின்றி நகர்த்துகின்ற அரசியல் நகவுகள் அனைத்தும் இறுதியில் ஹக்கீமை அன்றி முஸ்லிம் மக்களினையே பாதிக்கின்றது.
எனவே பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து மட்டுமல்லாது முஸ்லிம் காங்கிரசின் அங்கத்துவத்திலிருந்து விலகிச்சென்று முழுமையாக அரசியலிலிருந்து தோழர் பசீர் சேகுதாவூத் அவர்கள் ஓய்வெடுப்பதே இந்த சமூகத்துக்கு செய்யும் பாரிய கைமாறாகும்.
   முகம்மத் இக்பால்  சாய்ந்தமருது    

           

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top