சீனாவில் கோர விபத்தில் கட்டிட தொழிலாளி
உடலில் ஊடுருவிய இரும்பு  கம்பி உயிர் பிழைத்த 'அதிசயம்'

சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் கோர விபத்தில் சிக்கிய கட்டிட தொழிலாளி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
இது குறித்து அந்நாட்டு அரசு ஊடகமான சினுவா வெளியிட்டுள்ள செய்தியில், "ஸாங் வயது 44. இவர் ஷான்டோங் மாகாணத்தில் கட்டிடம் ஒன்றில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் உயரமான இடத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். அவர் மீது கீழே இருந்த 1.5 மீட்டர் அளவுக்கு கம்பி பாய்ந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த இரும்புக்  கம்பியின் அடிப்பகுதியை வெட்டினர். பாதி கம்பி ஸாங்கின் உடலில் இருந்தது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு எக்ஸ் ரே எடுக்கப்பட்டது. அதில் அவர் உடலில் ஊடுருவிய இரும்பு  கம்பியானது கபாலம், இதயம், கல்லீரல், மூச்சுக் குழாய், கரோடிட் ரத்த நாடி ஆகிய முக்கிய உள்பாகங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் அவற்றிற்கு மிக அருகே ஊடுருவியிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவர் உடலில் இருந்து 1.5 மீட்டர் இரும்புக் கம்பி அகற்றப்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளது.
நடந்த அறுவை சிகிச்சை குறித்து ஷான்டோங் பல்கலைக்கழகத்தின் கிளு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் கூறும்போது, "மிக அதிசயமாக ஸாங்கின் உடலில் பாய்ந்த கம்பி கபாலம், இதயம், கல்லீரல், மூச்சுக் குழாய், கரோடிட் ரத்த நாடி ஆகிய முக்கிய உள்பாகங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் அவற்றிற்கு மிக அருகே ஊடுருவியிருந்தது. அதனால் கம்பியை மட்டும் அப்புறப்படுத்தி அவரைக் காப்பாற்ற முடிந்தது.
இருப்பினும் அறுவை சிகிச்சையை நேர்த்தியாக செய்து முடிக்க 7 மணி நேரம் ஆனது. அறுவை சிகிச்சையின்போது ஒரு சிறிய பிழை செய்திருந்தாலும் ஸாங்கை உயிருடன் மீட்டிருக்க முடியாது. இந்த அறுவை சிகிச்சை மிக மிக அரிதானது.
அறுவை சிகிச்சையில் வெற்றிகரமாக இரும்புக் கம்பி அகற்றப்பட்டுவிட்டது. ஸாங் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். நோய்த் தொற்று ஏற்படுத்துவதற்கான சாதியக்கூறு அதிகமிருப்பதால் ஸாங் அடுத்த இரண்டு வாரத்துக்கு தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே இருப்பார்.

தற்போது அவர் உடல் நிலை சீராக இருக்கிறது. ஸாங் ஏற்கெனவே நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்ததால் கோர விபத்தையும், மிக அரிதான அறுவை சிகிச்சையையும் தாண்டி உயிர் பிழைத்திருக்கிறார்" என்றார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top