மூடிக்கிடக்கும் நுரைச்சோலை வீடுகள்

மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை

ஜனாதிபதியும், பிரதமரும் உறுதி

– சாய்ந்தமருதில் அமைச்சர் றிசாட்தெரிவிப்பு

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென அம்பாறை, நுரைச்சோலையில் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் வீடுகளை விரைவில் மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் இன்று (24/06/2016) தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் அமைச்சர் இன்று (24/06/2016) பங்கேற்றார். இப்தார் நிகழ்வுக்கு முன்னதாக சாய்ந்தமருது மீனவக் குடியிருப்புக்கு விஜயம் செய்து, அங்கு வாழ்ந்துவரும் மீனவர்களையும், அவர்களின் பிரதிநிதிகளையும் அமைச்சர் சந்தித்து தொழிலில் எதிர்கொள்ளும் கஷ்டங்களை அறிந்துகொண்டார். சுனாமியின் கோரவிளைவால் சாய்ந்தமருது கடற்கரையோரத்தில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் கழிவுப் பொருட்கள் மற்றும் இடிபாடுகள் இற்றைவரை அகற்றப்படாமையினால், மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் பெருங்கஷ்டங்களை எதிர்கொள்வதாக அங்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதனைக் கருத்திற்கொண்டு உடனடி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் வகையில் அமைச்சர் றிசாத், ரூபா பத்து இலட்சத்தை மீனவச்சங்கப் பிரதிநிதிகளிடம் கையளித்தார்.
நுரைச்சோலை வீடமைப்புத்திட்ட இழுபறி குறித்து ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் கலந்துரையாடி, உறுதியானதும், நம்பிக்கையானதுமான முடிவொன்றைப் பெற்றிருக்கின்றோம். தேர்தல் காலத்திலும் இதனை நாம் சுட்டிக்காட்டினோம். கொழும்பு திரும்பியதும் இது தொடர்பிலான அறிக்கை ஒன்றைக் கையளிக்கத் தீர்மானித்துள்ளோம்.
கரையோர மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் கடந்த தேர்தலில் எமக்கு எட்டாக்கனியாகிய போதும், கட்சிக்கு ஆதரவளித்தவர்களை ஒருபோதும் கைவிடமாட்டோம்.
இந்த மாவட்டத்தின் கைத்தொழில், மீன்பிடி, விவசாயம் ஆகிய நடவடிக்கைகளுக்குக் கைகொடுப்போம். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் ஒருபோதும் காற்றில் பறக்காது.
சம்மாந்துறையில் 3000 பேருக்கு தொழில் வழங்கும் வகையிலான கைத்தொழில் பேட்டை ஒன்றுக்கு இடம் அடையாளம்  கண்டபோது, அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இங்குள்ளோர், அதற்குத்  தடை போடுகிறார்கள். எத்தகைய தடைகள் வந்தாலும் நாம் எடுத்த காரியத்தை முடித்தே தீருவோம். இறைவனின் உதவியால் இந்த வருட இறுதிக்குள் இது சாத்தியமாகும்.

கிழக்கில் பொத்துவில் தொடக்கம் புல்மோட்ட வரையிலான கடற்பிரேசத்தை அண்டி வாழும் மீனவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை கண்ணாரக் கண்டிருக்கின்றோம். மீனவ சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு திட்டமிட்ட முறையில் வேலைத்திட்டம் தொடங்கப்படும். நானும், பிரதி அமைச்சர் அமீர் அலியும் இது தொடர்பில் மீன்பிடி அமைச்சருடன் காத்திரமான பேச்சு நடத்தியுள்ளோம்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top