துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு

13 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு 48 பேர் காயம்

துருக்கியின் கேசெரி பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 13 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் குர்திஷ் தீவிரவாதிகள் இந்த ஆண்டு தொடர் தாக்குதல்கள் நடத்தி பல உயிர்களை பறித்துள்ளனர். கடந்த வாரம் இஸ்தான்புல் நகரில் நடந்த தாக்குதலில் 44 மக்கள் கொல்லப்பட்டனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அமைதியான பகுதியாக கருதப்படும் கேசெரி நகரில் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மத்திய துருக்கியில் உள்ள பிரதான நகரங்களில் ஒன்றான கெசேரி, முக்கிய தொழில்நகரமாக திகழ்கிறது. இங்குள்ள எர்சீஸ் பல்கலைக்கழகத்தின் எதிரே ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை பஸ் மீது மோதி வெடிக்கச் செய்ததில், பஸ் உருக்குலைந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த தாக்குதலில் 13 வீரர்கள் பலியானதாகவும், 48 பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வீரர்கள் அனைவரும் உயர் பதவியில்லாத கீழ்நிலை அதிகாரிகள் என்றும், கமாண்டோ தலைமையகத்தில் இருந்து மார்க்கெட்டுக்கு சென்றபோது தீவிரவாதிகள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என ராணுவம் கூறியுள்ளது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top