16 கோடி 20 இலட்சம் செலவில்
சாய்ந்தமருது தோணா அபீவிருத்தி????
மக்கள் விரும்பியுள்ள தோணா அபிவிருத்தியை உறுதிப்படுத்துங்கள்
சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு 16 கோடி 20 இலட்சம்
ரூபாவைச் செலவிடுவதற்கு கடந்த 2016.10.11 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவயில் அனுமதி
பெறப்பட்டுள்ளது.
இத்தோணா முன்னாள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எஸ். நிஜாமுதீன்
அவர்களின் ஏற்பாட்டில் 5 இலட்சம் ரூபா செலவில் சல்பீனியா அள்ளப்பட்டு சுத்திகரிப்பு
வேலை செய்யப்பட்டது. பின்னர் கல்முனை மாநகர சபை சுமார் 12 இலட்சத்திற்கும் அதிகமான
ரூபாய்களைச் செலவு செய்து அவ்வாறே சல்பீனியா அள்ளப்பட்டு சுத்திகரிக்கும் வேலையைச்
செய்தது. இதற்குப் பின்னர் மூன்றாவது தடவையாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சின்
கீழ் 3 கோடி செலவில் (அமைச்சர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் 5
கோடி என்று கூறியிருந்தார்) சல்பீனியா அள்ளப்பட்டு
சுத்திகரிக்கப்பட்டதுடன் கடற்கரை வீதியோடு இணைந்திருக்கும் தோணாவின் அருகில் உள்ள வீதி
150 அல்லது 200 மீட்டர் நீளத்திற்கு கிறவல் மண் போட்டு செப்பனிடப்பட்டது.
தற்போது நான்காவது தடவையாக
இத் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு பெரும் தொகைப் பணம் செலவிடுவதற்கு அமைச்சரவையால்
அங்கிகாரம் பெறப்பட்டுள்ளது.
தற்போது இடம்பெறப்போகும் தோணா அபிவிருத்தி சம்மந்தமாக இப்பிரதேச
மக்களால் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தோணாவிலிருந்து நீர் நிரம்பி வடிவதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு
பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனை கருத்திற் கொண்டு குறித்த
கலப்பின் இயற்கை தன்மையினை பாதுகாக்கும் வகையில் தோணாவை அபிவிருத்தி செய்தல் மற்றும்
தோணாவைச் சூழ வசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொது மக்களினை
வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு இப் பெரும் தொகைப் பணத்திற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அப்படியானால், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு 2700 குடும்பங்களிலுள்ள
10,000க்கும் அதிகமான பொது மக்கள் வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதிக்கப்பட்டிருப்பதாக
அறிக்கை வழங்கியுள்ள அந்த அரச அதிகாரி யார்? எவ்வாறு அமைச்சர் இந்த புள்ளி விபரங்களையும் தகவலையும்
பெற்றுக்கொண்டார் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தோணா அபிவிருத்தியின் உண்மையான திட்டம்தான் என்ன? எப்படி இதனை வடிவமைக்க உள்ளீர்கள்? இதன் முழுமையான வரைபடம் (DRAFT DRAWING) யார் எடுத்தது? தற்போது அது யாரிடம் உள்ளது?
இப்பிரதேசத்திலுள்ள பொறியியலாளர்கள் சமூக ஆர்வலர்கள் அனுபவசாலிகள்
மற்றும் பள்ளிவாசல்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் கலந்தாலோசனைகள் கருத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளதா? என்றும் மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.
இத்தோணாவில் எத்திட்டத்தை முதலில் செய்ய வேண்டும் என்ற மக்களின் அபிப்பிராயங்களைப்
பெற்றுக் கொண்டதாகத் திட்டங்களைச் செய்யாமல் தங்களது விருப்பத்திற்கு கருமங்கள்
இடம்பெறுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தோணாவில் வெள்ளரிப்பு ஏற்பட்டிருந்தால் தோணாவை அண்டியுள்ள பிரதேச வளவுகள்
அரிக்கப்பட்டிருக்கும். ஆனால், அப்படி இடம்பெறாமல் தோணா ஒடுங்கி உள்ளதை அவதானிக்க
முடியும்.
அப்படியானால் பல மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டதாகக் கூறி போடப்பட்ட வீதியை கிண்டி எடுத்துவிட்டு அதே இடத்தில் இந்த சுவர் அமைப்பதற்கான அவசியம் என்ன? இதுதானா அப்பிரதேச மக்கள் கேட்டுக்கொண்ட தோணா அபிவிருத்தி.? அப்படியானால் ஏற்கனவே போடப்பட்ட அந்த கிறவல் வீதியின் நிலை என்ன? என்றும் கேள்வி எழுப்பப்படுகின்றது.
அரசாங்கத்தினால் இப்பிரதேச மக்களின் நன்மைக்காக
ஒதுக்கப்பட்டுள்ள இப்பெரும் தொகைப் பணத்தைக் கொண்டு தோணாவைச் செப்பனிட்டு மாபிள்
கற்கள் கூட பதிக்க முடியும் ஆனால், என்னதான் செய்யத் திட்டமிடுகின்றார்களோ என்று
ஒரு ரொட்டிக் கடைக்காரர் பெரு மூச்சுடன் கூறியதையும் எம்மால் கேட்க முடிந்தது.
பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஹக்கீம் அவர்களே!
பிரதி அமைச்சர் ஹரிஸ் அவர்களே!!
மக்கள் விரும்பியுள்ள தோணா அபிவிருத்தியை உறுதிப்படுத்துங்கள்.பொது மக்களின் நிதி சரியான விதத்தில் பயன்படுத்த உத்தரவாதம் செய்யுங்கள் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment