ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைகள்



செல்வி ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிக்கு வந்து, தன்னுடைய ஆளுமைத்திறனை வெளிப்படுத்தினார். மக்களால் முதல் பெண் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தவர். 1999-ல் இருந்து கட்சிக் கூட்டங்களுக்கோ, இதர விசேஷங்களுக்கோ எப்போது சென்றாலும் தன் கட்சியின் செயல்பாடுகள் பற்றியும், எதிர்க்கட்சி செய்யும் தவறுகள் பற்றியும் குட்டிக்கதைகளாகச் சொல்ல ஆரம்பித்தார். அந்தக் கதைகள், நீதிக்கதைகளாகவும், புராணக்கதைகளாகவும், தழுவியக் கதைகளாகவும் இருக்கும். அவர், இதுபோல் 100-க்கும் மேற்பட்ட கதைகளைச் சொல்லியிருக்கிறார். இதோ... அவர் சொன்ன கதைகள் இரண்டு!

கதை-1: பெண்கள் வெல்வார்கள்!

‘‘ஓர் ஊரில் ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவன் கடனாளி ஆகிவிட்டான். அவனுக்கு கடனாகப் பணம் கொடுத்தவன் கொடுமையானவன். பல தடவை வணிகன், தவணை சொன்னான். இதனால் கோபம் அடைந்த பணம் கொடுத்தவன், வணிகனின் வீட்டுக்குத் திடீரென்று ஒருநாள் சென்றுவிட்டான். அப்போது வணிகன் தன் ஒரே மகளுடன் தோட்டத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். தோட்டத்தின் நடைபாதையில் கூழாங்கற்கள் கறுப்பு நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் ஆங்காங்கே கிடந்தன. உள்ளே நுழைந்த பணம் கொடுத்தவன், அவர்களைப் பார்த்து மரியாதை இல்லாமல் கத்தினான். ‘உடனே கடனைத் திருப்பிக் கொடு. இல்லாவிட்டால், உனக்கு சிறைத் தண்டனை கிடைக்கும்என்று மிரட்டினான். அதைக் கண்டு வணிகன் பயந்து நடுங்கினான். அது, மன்னர் ஆட்சிக் காலம். ஆகவே, கடன் கொடுத்தவன் மன்னரிடம் புகார் செய்தால் கடன் வாங்கியவனுக்குத் தண்டனை நிச்சயம்.

இந்தநிலையில், வணிகனுக்கோ வயது 70. அவனால், சிறைக்குப் போகவும் முடியாது; போனால், அவன் மகளைக் காப்பாற்றவும் யாருமில்லை. என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தான். அப்போது, பணம் கொடுத்தவனின் பார்வை வணிகனின் மகள் மீது விழுந்தது. அழகின் வடிவமாக இருந்த அவளைப் பார்த்த பின்பு ஒரு தீர்மானத்துக்கு வந்தான், பணம் கொடுத்தான். பிறகு, வணிகனைப் பார்த்து அவன் கூறினான். ‘வணிகனே... நான் சொல்வதைக் கேள். உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நான் உனக்கு உதவ நினைக்கிறேன். ஆனால், நான் சொல்லும் ஓர் ஏற்பாட்டுக்கு நீ சம்மதிக்க வேண்டும். நான், ஒரு பையில் இங்கே கீழே கிடக்கும் கறுப்பு நிறக் கூழாங்கல் ஒன்றையும், வெள்ளை நிறக் கூழாங்கல் ஒன்றையும் போடுவேன். அதிலிருந்து, உன் மகள் ஒரு கல்லை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் கல், வெள்ளை நிறக் கல்லாய் இருந்தால்... நீ கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம். அதன்பிறகு நான் உன்னை ஒருபோதும் தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால், கறுப்பு நிறக் கல்லாய் இருந்தால்... உன் மகளை எனக்கு கல்யாணம் செய்து தரவேண்டும். இதற்குச் சம்மதமா?’ என்று வணிகனைக் கேட்டான். வணிகனுக்கு வேறு வழி தெரியவில்லை. பின்னர், தயங்கி... தயங்கிசரிஎன்றான். கீழே தரையில் கிடந்த இரண்டு நிறக் கற்களையும் எடுத்து பைக்குள் போட்டான். ஆனால், திருட்டுத்தனமாக இரண்டு கறுப்பு நிறக் கற்களையும் பைக்குள் போட்டுவிட்டான். வணிகன், இதை கவனிக்கவில்லை. ஆனால், வணிகன் மகள் இதை கவனித்துவிட்டாள். பை, அவள் முன் கொண்டு வரப்பட்டது. உள்ளே இருக்கும் இரண்டுமே கறுப்பு நிறக் கற்கள். அவற்றில் அவள், எதை எடுத்தாலும் பணம் கொடுத்தவனை கல்யாணம் செய்தே ஆக வேண்டும். தந்தையோ கண்ணீர் சிந்தியபடி நிற்க... பணம் கொடுத்தவனின் மோசடித்தனத்தை எப்படிச் சொல்வது? அப்படியே உண்மையைச் சொன்னாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.



இந்தச் சவாலை எப்படிச் சந்திப்பது என்ற முடிவோடு வணிகன் மகள் அந்தப் பைக்குள் கையைவிட்டு ஒரு கல்லை வெளியே எடுத்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கல்லை நழுவவிட்டாள். கல் விரைந்து ஓடிப்போய் கற்குவியலோடு சேர்ந்துகொண்டது. வணிகன் மகள் கல்லை நழுவவிட்டதற்காக... பணம் கொடுத்தவனிடம் வருத்தம் தெரிவித்தாள். பிறகு அவனிடம், ‘இப்போது பையில் ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல், கறுப்பு நிறமாக இருந்தால்... நான் எடுத்தது வெள்ளை நிறக் கல். அப்படியென்றால், நாங்கள் கடனைச் செலுத்த வேண்டியதில்லை. நான், உங்களை மணம் புரியவும் அவசியம் இல்லை. கல், வெள்ளை நிறமாக இருந்தால்... நான் எடுத்தது கறுப்பு நிறக் கல். அப்படி என்றால், நான் உங்களை மணந்துகொள்ளத்தான் வேண்டும். ஆகவே, பையில் என்ன நிறக் கல் இருக்கிறது என்று பார்க்கலாமாஎன்று கேட்டாள் வணிகனின் மகள்.

திணறிப் போனான் பணம் கொடுத்தவன். எடுத்த கல் போக... பைக்குள்ளே இருக்கும் ஒரு கல், கறுப்பு நிறக் கல்லாகவே இருக்கும். அவன் போட்ட இரண்டு கற்களும் கறுப்பு நிறக் கற்கள்தானே? அப்படியென்றால், அந்தப் பெண் எடுத்த கல் வெள்ளை நிறம் என்று ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணம் கொடுத்தவனின் தந்திரம் பலிக்கவில்லை. இதனால் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போய்விட்டான். மகள், வெற்றிப் புன்னகை பூத்தாள். இந்தக் கதை எதனைக் காட்டுகிறது... இதிலிருந்து என்ன தெரிகிறது? அறிவுள்ள பெண்களை யாரும் ஏமாற்ற முடியாது. எப்படிப்பட்டவரும் எளிதில் தீர்க்க முடியாத சிக்கல்கள் வந்தாலும்கூட பெண்கள் அதை வென்றுவிடுவார்கள். அவர்களுக்குத் தேவை வாய்ப்புகள் மட்டுமே. வாய்ப்பு மட்டும் கிடைத்து விடுமேயானால் பெண்கள் எந்தத் துறையிலும் வெல்வார்கள். ஆண்களுக்கு சமமாக... ஏன்? ஆண்களைவிடவும் அதிகம் வெற்றி பெற முடியும். இதற்கு உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே சிறந்த எடுத்துக்காட்டு.’’ ஆம். உண்மைதான். வாய்ப்புகளைத் தவறவிடாமல் மலை போன்ற எண்ணற்ற தடைகளைத் தகர்த்து மகத்தான வெற்றி கண்டவர் அவர்.



கதை-2: உன்னை நேசிக்கிறேன்!

‘‘மலைப் பகுதியில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு சின்னஞ்சிறு பையன் இருந்தான். அவன் ஒருநாள் தன் அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு, ‘நான் உன்னை வெறுக்கிறேன்என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடினான். போனவன் வீட்டுக்கு வெளியே ஓரிடத்தில் நின்றுகொண்டு, ‘நான் உன்னை வெறுக்கிறேன்என்று உரக்கக் கத்தினான். அது, மலைப்பகுதி என்பதால், அவன் சொன்ன வார்த்தை திரும்பத்திரும்ப எதிரொலித்தது. ஆனால், பாவம். சின்னஞ்சிறு பையனாகிய அவனுக்கு... அது அவனுடைய குரலின் எதிரொலிதான் என்று தெரியவில்லை. உடனே வேகமாக வீட்டுக்கு ஓடிச் சென்று அம்மாவைக் கட்டிக்கொண்டு தயங்கிதயங்கி பேச ஆரம்பித்தான். ‘ஏன் இப்படிப் பயப்படுகிறாய்என்று அம்மா கேட்டாள். ‘இந்த மலையில் நிறைய கெட்டப் பையன்கள் இருக்கிறார்கள். அந்தப் பையன்கள் எல்லோரும், ‘நான் உன்னை வெறுக்கிறேன்... நான் உன்னை வெறுக்கிறேன்என்று கத்துகிறார்கள்என்றான் அந்தச் சிறுவன். அவனுடைய தாய்க்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது. அவள் புத்திசாலி. அவள் என்ன நடந்தது என்பதையும் விளக்கிச் சொல்லவில்லை. அவள் மகனைப் பார்த்துச் சொன்னாள், ‘இப்போது நான் சொல்கிறபடி செய். நீ முன்னால் நின்ற இடத்தில் போய் நின்றுகொண்டு, ‘நான் உன்னை நேசிக்கிறேன்என்று உரக்கச் சொல்என்று கூறி அனுப்பிவைத்தாள். அவனும் அம்மா சொன்னபடியே அதே இடத்தில் போய் நின்றுகொண்டு, ‘நான் உன்னை நேசிக்கிறேன்என்று உரக்கக் கத்தினான். அவன் சொன்ன வார்த்தை திரும்பத்திரும்ப எதிரொலித்தது. பையனுக்கு இப்போது சந்தோஷம். இந்தக் கதை நமக்குச் சொல்வது என்ன? நீங்கள், இந்த உலகத்துக்கு எதைக் கொடுக்கிறீர்களோ... அதுதான் உங்களுக்குத் திரும்ப வரும் என்பதுதான் இந்தக் கதை உணர்த்துகின்ற செய்தி... உணர்த்துகின்ற உண்மை.’’ தமிழ்கூறும் நல்லுலகுக்கு ஜெயலலிதா எவற்றை எல்லாம் தந்து சென்றுள்ளாரோ... அவை எல்லாம் தமிழ் உள்ளவரை, இந்த உலகம் உள்ளவரை தொடர்ந்து நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top