பத்திரிக்கையாளர் சோ ராமசாமி
இன்று அதிகாலை காலமானார்




மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமி இன்று காலமானார்.
துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சோ ராமசாமியின் உயிர் சிகிச்சை பலனின்றி இன்று பிரிந்தது. அவருக்கு வயது 82. அதிகாலை 4.40 மணிக்கு சோ உயிர் பிரிந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சோ காலமானதை அவரது மருத்துவர் விஜய்சங்கர் உறுதி செய்துள்ளார். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்து இரண்டு நாட்கள் முழுமையாக முடிவதற்குள் சோ ராமசாமி உயிரிழந்துள்ளார்.
ஜெயலலிதாவும், சோ ராமசாமி நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அரசியலில் ஜெயலலிதாவுக்கு சோ ராமசாமி ஒரு சிறந்த ஆலோசகாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சோ ராமசாமி பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். சோ என அழைக்கப்படுகிறார். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்து தந்தது.

சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார்.

1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 - ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோஎனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர்.

1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.

இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.

இவர் தனது ஏட்டுத்துறைச் (பத்திரிக்கைத்துறைச்) சேவைக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.

இவர் 22 நாடகங்களையும், 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவரது முகமது பின் துக்ளக் என்னும் 'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.

இந்நிலையில், மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. மூச்சுத் திணறல் அதிகம் ஏற்பட்டு இன்று காலை சோ ராமசாமி காலமானார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top