வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு

இராணுவ அதிகாரிகள் நியமனம்


வறட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்களின் நலன்களை கண்டறிவதற்காக பிரதேச செயலாளர் பிரிவுகள் மட்டத்தில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இது தொடர்பான பணிப்புரையை குறித்த அதிகாரிகளுக்கு  வழங்கியுள்ளார்.
 வெள்ளம், மண்சரிவு என்பனவற்றினால் அனர்த்தங்கள் ஏற்பட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அனர்த்தத்தின் பின்னரான முகாமைத்துவப் பணிகளின் நிலைஇ அவற்றின் முன்னேற்றம் என்பனவற்றை மீளாய்வு செய்வதற்காக இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது.
 தற்போது கடுமையான வரட்சி நிலவும் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் நலன்புரி விடயங்கள் பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
 வரட்சியுடன் கூடிய காலநிலை நிலவும் பிரதேசங்களில் வாழும் மக்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குடிநீர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை நிறைவேற்றத் தேவையான நிதியும் உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பணிகளின் முன்னேற்றத்தை மேற்பார்வை செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலர் உணவுப் பொதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் வீடுகளை இழந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக மாற்றுக் காணிகளை இனங்காணவும், அவற்றை கையளிப்பது தொடர்பான முன்னேற்றங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
 உரிய காணிகள் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் இனங்காணப்படுவது அவசியமாகும்.

 இதுபற்றிய நெருக்கடிகள் இருக்குமாயின், நாளைய தினத்திற்குள் அவற்றை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறும், காணிகள் இனங்காணப்பட்டதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் அவற்றை உரிய பயனாளிகளிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top