திஹாரிய, அல்- அஸ்ஹர் மத்திய கல்லூரியின் புதிய மூன்று மாடிக்கட்டிடம் மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று 17 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

அத்தனகல்லை ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி பன்னில ஆனந்த தேரரின் நிதி உதவியினால் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடமே இவ்வாறு மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும் என தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை சிலர் குழப்ப முற்படுகின்றபோதும் தேசிய நல்லிணக்க கொள்கையை வெற்றிபெறச் செய்வதன் மூலமே நாட்டில் நிலையான சமாதானம் சாத்தியமாகுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அனைத்து இனங்கள் மத்தியிலும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பி நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் அனைவரும் எதிர்காலத்தில் ஒரு கொடூர யுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, 2013ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு இது வரை நிர்மாணிக்கப்படாத நிலையில் உள்ள பாடசாலை கட்டிடம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பாடசாலை கட்டிடம் அல்லது வேறு எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் உரிய நிதி ஏற்பாடுகள் இன்றி அடிக்கல் நடப்படக் கூடாதென அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவித்தார்.

அக் கட்டிட நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு மாகாண கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, மாணவர்களின் கோரிக்கையின் பேரில் புதிய தொழில்நுட்பக்கூடத்தை அமைப்பதற்கு 20 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை ஜனாதிபதி வழங்கி வைத்தார். அத்தனகல்லை திகாரிய மக்களின் சார்பாக ஜனாதிபதிக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, பிரதி அமைச்சர் லசந்த அலகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா, மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச, பாடசாலை அதிபர் எம்.ஏ.எம். அஸ்மீர் உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் உட்பட பிரதேச மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top