தாஜ்மகாலை சுற்றி உள்ள மரங்களை வெட்ட அனுமதி கோரிய இந்திய மத்திய அரசுக்கு அந்நாட்டிலுள்ள சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளதோடு தாஜ்மகாலை அழிக்கப் போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

முகலாய மன்னர் ஷாஜகான், தன் காதல் மனைவி மும்தாஜ் நினைவாக 1631-ம் ஆண்டு ஆக்ராவில் தாஜ்மகாலை கட்டினார். தாஜ்மகால், உலக அதிசயமாக திகழ்ந்து வருகிறது. ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக தாஜ்மகாலை அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் நிபுணர் எம்.சி.மேத்தா என்பவர், காற்று மாசு மற்றும் மரங்கள் அழிப்பில் இருந்து தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவின் அடிப்படையில், தாஜ்மகாலை சுற்றி உள்ள வளர்ச்சி பணிகளை சுப்ரீம் கோர்ட்டு கண்காணித்து வருகிறது.இதற்கிடையே, உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இருந்து டெல்லி வரையிலான 80 கி.மீ. தூரத்துக்கு கூடுதல் புகையிரத பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தாஜ்மகாலை ஒட்டி செல்லும் இப்பாதையில், தாஜ்மகாலை சுற்றி உள்ள 450 மரங்களை வெட்ட அனுமதிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் இந்திய மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மத்திய அரசுக்கு எதிராக காட்டமான வார்த்தைகளை தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:-

தாஜ்மகால், உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னம். அதை அழிக்கப் போகிறீர்களா? தாஜ்மகாலின் சமீபத்திய படங்களை பார்த்து இருக்கிறீர்களா? பார்க்காவிட்டால், இணையதளத்தில் போய் பாருங்கள்.

அதன்பிறகும் நீங்கள் விரும்பினால், தாஜ்மகாலை அழிக்க இந்திய அரசு விரும்புகிறது என்று பிரமாண பத்திரமோ, மனுவோ தாக்கல் செய்யுங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top